ஹரியானாவில் 10 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் ஜனநாயக் ஜனதா
ஹரியானாவில் 10 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் ஜனநாயக் ஜனதா
ADDED : ஏப் 08, 2024 12:31 AM

ஹரியானாவில் முதல்வர் நாயப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 10 லோக்சபா தொகுதிகளுக்கு, மே 25ல் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.
ஹரியானாவில் மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்த போது, பா.ஜ., அரசில், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி அங்கம் வகித்தது.
கூட்டணி முறிவு
லோக்சபா தொகுதி பங்கீடு தொடர்பாக, ஜனநாயக் ஜனதா கட்சியுடன் உடன்பாடு ஏற்படாததால், பா.ஜ., கூட்டணியை முறித்தது. மொத்தம் 90 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள ஹரியானா சட்டசபையில், பா.ஜ.,வுக்கு 40; ஜனநாயக் ஜனதாவுக்கு 10 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
ஜனநாயக் ஜனதா உடன் கூட்டணி முறிந்ததை அடுத்து, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், ஹரியானாவில் மீண்டும் பா.ஜ., அரசு அமைந்தது. ஆனால், இந்த முறை யாரும் எதிர்பாராதவிதமாக, ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நாயப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார்.
முதல்வர் மாற்றம்
இந்த ஆண்டு இறுதியில் ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதை மனதில் வைத்து, முதல்வர் மாற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹரியானாவின் 10 லோக்சபா தொகுதிகளிலும், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா போட்டியிட முடிவு செய்துள்ளது.
மேலும், சண்டிகரில் உள்ள ஒரேயொரு லோக்சபா தொகுதியிலும் போட்டியிட ஜனநாயக் ஜனதா ஆலோசித்து வருகிறது.
இதே போல், இந்திய தேசிய லோக் தளம் கட்சியும், 10 தொகுதிகளிலும் களமிறங்க முடிவு செய்துள்ளது.
மாநிலத்தில் ஜாட் மக்களிடையே இரு கட்சிகளும் வலுவான ஆதரவை பெற்றுள்ளதால், ஜாட் ஓட்டுகள் பிரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையே, அவர்களின் ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்க காங்., - பா.ஜ., வியூகம் வகுத்து வருகின்றன. இதில், எந்தக் கட்சி வெற்றி பெறப் போகிறது என்பது ஜூன் 4ல் தெரிந்து விடும்.
- நமது சிறப்பு நிருபர் -

