தி.மு.க., அரசின் கல்வி கொள்கை பல்லிளிக்கிறது: அண்ணாமலை
தி.மு.க., அரசின் கல்வி கொள்கை பல்லிளிக்கிறது: அண்ணாமலை
ADDED : ஆக 31, 2025 03:56 AM

சென்னை: 'தி.மு.க.,வின் புரட்டுகளை பாடத்திட்டத்தில் திணித்திருப்பதால், கடன் வாங்கினாலும் பரவாயில்லை; தரமான கல்வி கிடைக்க வேண்டும் என, தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை ஏழை மக்கள் சேர்க்கின்றனர்' என்று, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை
:
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த 2023 - 2024 கல்வியாண்டில், 42.23 சதவீதமாக இருந்த அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விகிதம், மறு ஆண்டில் 39.17 சதவீதமானது.
இந்த ஆண்டு, 37.92 சதவீதமாகி விட்டது. இந்த கல்வியாண்டில், 37,595 அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை, 2.39 லட்சம். ஆனால், 12,929 தனியார் பள்ளிகளில், 5.26 லட்சம்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த தொகுதி உட்பட, பல அரசு பள்ளிகளில் கட்டடங்கள் இல்லாதது, மரத்தடியில் வகுப்பறைகள் செயல்படுவது, பள்ளி கட்டடங்கள் இடிந்து விழுவது, போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது போன்றவற்றால், அரசு பள்ளிகள் மீது பெற்றோர் நம்பிக்கை இழந்து விட்டனர்.
அதனால், குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
தி.மு.க.,வின் கல்விக்கொள்கை என்பதே, தனியார் பள்ளிகளுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது.
வசதி படைத்த குழந்தை களுக்கு, தனியார் பள்ளிகளில் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும் அதே நேரத்தில், அந்த வாய்ப்பு ஏழை குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் மறுக்கப்படுகிறது.
மேலும், அரசு பள்ளிகளில், தி.மு.க.,வின் புரட்டுகளை, பாடத்திட்டத்தில் திணித்திருப்பதால், கடன் வாங்கினாலும் பரவாயில்லை; தரமான கல்வி கிடைக்க வேண்டும் என, ஏழை மக்களும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
வெற்று விளம்பரங்கள் வாயிலாக, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த தி.மு.க., அரசின் கையாலாகாத்தனம், இன்று பல்லிளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.