காதை கிழிக்கும் 'ஹாரன்' சத்தம்; அலறுது அக்கம்பக்கம்
காதை கிழிக்கும் 'ஹாரன்' சத்தம்; அலறுது அக்கம்பக்கம்
UPDATED : நவ 20, 2024 04:26 AM
ADDED : நவ 20, 2024 12:38 AM

சென்னை: அதிக ஒலி எழுப்பும், 'ஹாரன்கள்' பயன்படுத்தும் வாகனங்களால், பயணியரும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன. நவீன ரக கனரக வாகனங்கள், பஸ்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களில் பொருத்தப்படும், 'மின்னணு ஹாரன்'களால் ஒலி மாசு அதிகரிக்கிறது.
இதனால், சாலைகளில் செல்லும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, ரத்த அழுத்தம், இதய பாதிப்பு உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
100 டெசிபல்
மாசு கட்டுப்பாட்டு வாரிய சட்டத்தின்படி, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு ஹாரன்கள், 80 டெசிபல் எனும் ஒலி அளவில் இருக்க வேண்டும். ஆனால், 100 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி இயக்குகின்றனர்.
சாலைகளில் அதிக சத்தம் கேட்டு, மக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, பல்வேறு தரப்பினரும் புகார் அளித்து வருகின்றனர். ஆனாலும், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இப்பிரச்னை தொடர்கிறது.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
தனியார் பஸ்களில் தான் பல வகையான சத்தங்களுடன், 'ஹாரன்கள்' பயன்படுத்துகின்றனர். சாலைகளில் நடந்து செல்வோரும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் அலறும் அளவுக்கு சத்தம் இருக்கிறது. இந்த வாகனங்களால் நோயாளிகள், குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரூ.10,000 அபராதம்
போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: பஸ்கள் உள்ளிட்ட இதர வாகனங்களுக்கு, ஆண்டுதோறும் எப்.சி., எனப்படும் தகுதி சான்று வழங்கும் போது, ஒலி மாசு ஏற்படுத்தும் ஹாரன் இருந்தால் உடனடியாக அகற்றி விடுவோம். ஆனால், அவர்கள் எப்.சி., பெற்ற, அடுத்த சில நாட்களிலேயே தங்களுக்கு வசதியான மின்னணு ஹாரன் பொருத்தி ஓட்டுகின்றனர். பஸ் உள்ளிட்ட வாகனங்களில் விதிகளை மீறி ஹாரன்கள் இருந்தால், அதன் உரிமையாளர்களுக்கு 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆக்ரோஷ மனநிலை
சாலையில் செல்லும், 80 சதவீத வாகன ஓட்டிகள், தேவையற்ற இடங்களிலும், தேவையில்லாத நேரத்திலும், 'ஹாரன்' அடிக்கின்றனர். இது, ஆக்ரோஷ மனநிலையையே காட்டுகிறது. வாகனம் ஓட்ட கற்றுக் கொள்ளும்போதே, வேகமாக செல்ல ஹாரன் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. அது, நாளடைவில் பழக்கமாகி விடுகிறது.
அதாவது, 10 நிமிடத்தில் அங்கு போய் விட வேண்டும் என்ற மனநிலையோடு வாகனத்தை இயக்குபவர்கள், வேகமாக செல்கின்றனர்; அப்போது, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அடிக்கடி ஹாரன் அடிப்பது வழக்கம். மேலும், சாலை சிக்னல்களில் நிற்பவர்கள், சிவப்பு விளக்கு அணைய துவங்கும் போதே, முன் இருப்பவர்களை உஷார்படுத்த, ஹாரன் அடிப்பர்.
அவர்களின் செயல், ஆக்ரோஷ மனநிலை என்று அழைக்கப்படுகிறது. வாகனம் ஓட்ட கற்று தரும் போதே, தேவையின்றி ஹாரன் அடிக்கக் கூடாது என்ற பயிற்சியும், அறிவுரையும் வழங்குவது அவசியம். மேலும், ஹாரன் அடித்தால் அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் அவசியம். சாலை சிக்னல்களில் அதிக ஒலி எழுப்பும் போது, சிவப்பு விளக்கு தொடர்ந்து எறியும் வகையிலான, 'சென்சார்'கள் ஏற்படுத்த வேண்டும்.
- டாக்டர் வெங்கடேஷ் மதன்குமார்,
மனநல மருத்துவர், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை.