நிறைவு பெறுகிறது தேர்தல் திருவிழா! திரும்புவார்களா வடமாநில தொழிலாளர்கள்
நிறைவு பெறுகிறது தேர்தல் திருவிழா! திரும்புவார்களா வடமாநில தொழிலாளர்கள்
UPDATED : மே 30, 2024 06:11 AM
ADDED : மே 30, 2024 12:35 AM

திருப்பூர் : லோக்சபா தேர்தல் கடைசி கட்டத்தை எட்டியுள்ளதால், வடமாநில தொழிலாளர் விரைவில் திரும்புவார்களா என, திருப்பூர் பனியன் தொழில்துறையினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நாட்டின், 18வது லோக்சபா தேர்தல், மார்ச் மாதம் துவங்கி, 75 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. கடைசி கட்டமான, ஏழாவது கட்ட தேர்தல், வரும் 1 ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை, 4ம் தேதியும் நடைபெற உள்ளது.
ஆறு கட்டமாக, 487 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது; ஏழாவது கட்டமாக, 57 தொகுதிகளுக்கு, ஜூன் 1ம் தேதி நடக்கிறது. தேர்தல் அறிவித்த சில நாட்களிலேயே, திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு, அழைப்பு வரத் துவங்கியது.
தமிழகம் உட்பட, தென்மாநிலங்களில், முதல் மூன்று கட்டமாக தேர்தல் முடிந்தது; வடமாநிலங்களில், கடைசி கட்டமாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. பீஹார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், ஏழு கட்ட தேர்தலும் நடந்து வருகிறது.
தொழிலாளர் 'பிஸி'
ஒடிசாவில், கடைசி நான்கு கட்டமாக தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. இப்படி, மாதக்கணக்கில் தேர்தல் நடப்பதால், சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் திருப்பூரை மறந்து, தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரில், 21 மாநிலங்களை சேர்ந்த மக்கள், பனியன் தொழிலாளர்களாக இருக்கின்றனர். நுாற்பாலைகள் துவங்கி, எம்ப்ராய்டரிங், பேக்கிங் வரையில், வடமாநில தொழிலாளர் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 2 லட்சம் தொழிலாளர்கள் பனியன் தொழிலில் பணியாற்றி வருகின்றனர்.
திருப்பூர் திரும்புவார்களா?
லோக்சபா தேர்தல் துவங்கியதும், சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள், ஓட்டு எண்ணிக்கை முடிந்து, தங்களது எம்.பி., யார் என்பதை தெரிந்து, கொண்டாடிய பிறகே, திருப்பூர் திரும்புவார்கள். இருப்பினும், மார்ச் மாதம் துவங்கி, 10 வாரங்களாக, சொந்த ஊரிலேயே தங்கியிருக்கின்றனர்.
திடீரென தொழிலாளர்கள் ஊருக்கு சென்றதால், ஏற்றுமதியாளர்கள் உட்பட, அனைத்து தொழில்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். கோடை கால ஆர்டர் உற்பத்தி நிறைவு பெற்று, குளிர்கால ஆர்டர் மீதான பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது.
சரியான நேரமிது
நீண்ட நாட்களுக்கு பின், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களிலும், 10 சதவீதம் அளவுக்கு, உற்பத்தி பணிகள் உயர்ந்துள்ளன. சரியான நேரத்தில், வடமாநில தொழிலாளர் ஊருக்கு சென்றது பெரிய சோதனையாக மாறிவிட்டது. முழு அளவில் திரும்பி வந்தால் மட்டுமே, பனியன் நிறுவனங்களில், இயக்கம் முழு வேகமெடுக்கும் என்கின்றனர் உரிமையாளர்கள்.
இது, நிரந்தரம் அல்ல
பனியன் தொழிலில், 40 சதவீதம் அளவுக்கு வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர்; அவர்களை சார்ந்தே இயங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளன. இதேநிலை தொடர்ந்தால், ஒட்டு மொத்த பனியன் தொழிலும், வடக்கே நகர்ந்து விடவும் வாய்ப்புள்ளது.
எனவே, தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் சிறப்பு முகாம் நடத்தி, தொழிலாளர்களை தேர்வு செய்து, அரசு திட்டத்தில் பயிற்சி அளித்து, பனியன் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
சரியான நேரத்தில், வடமாநில தொழிலாளர் ஊருக்கு சென்றது பெரிய சோதனையாக மாறிவிட்டது. முழு அளவில் திரும்பி வந்தால் மட்டுமே, பனியன் நிறுவனங்களில், இயக்கம் முழு வேகமெடுக்கும்