ADDED : பிப் 09, 2025 05:31 AM

தமிழகத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அத்துடன், நம் பக்கத்து மாநிலமான கேரளாவிற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த 2016, 2021 சட்டசபை தேர்தலில் தோற்ற காங்கிரஸ், இந்த முறை எப்படியாவது கேரளாவில் ஆட்சியைப் பிடிக்க இப்போதே களத்தில் வேலையை துவங்கிவிட்டது.
அதே சமயம், வேறொரு பிரச்னையும் ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ் வெற்றி பெற்றால், யார் முதல்வர் என்ற சண்டை இப்போதே காங்கிரசில் துவங்கிவிட்டது.
காங்கிரசின் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீஷன், ரமேஷ் சென்னிதலா, காங்., பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் ஆகிய மூவருமே முதல்வர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இதில், 'ராகுல் மற்றும் பிரியங்காவிற்கு மிகவும் நெருக்கமானவர் வேணுகோபால்; எனவே, இவர்தான் முதல்வர் ஆவார்' என, டில்லி காங்., தலைவர்கள் அடித்து சொல்கின்றனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் கூட்டணியில் உள்ள, இந்தியன் முஸ்லிம் லீக், ஒரு குண்டை துாக்கிப் போட்டுள்ளது. 'காங்., கூட்டணி எங்கள் தலைமையில் இருக்க வேண்டும்' என, கூறியுள்ளார், முஸ்லிம் லீக் தலைவர் சாதிக் அலி. அப்படியானால், இவர் கட்சியிலிருந்துதான் முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; இதற்கு காங்கிரஸ் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
கடந்த 1979ல் இந்தியன் முஸ்லிம் லீக் கூட்டணி ஆட்சி அமைத்தது; அப்போது முகமது கோயா முதல்வர் ஆனார். ஆனால், மூன்று மாதங்களுக்குள் அவர் பதவி விலகும்படியானது. கேரளாவின் வடக்கு பகுதியில் முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகம். காங்கிரஸ் கூட்டணியின் உயிர்நாடி என முஸ்லிம் லீக் கருதப்படுகிறது; எனவே, இந்த கட்சியின் ஆதரவு காங்கிரசுக்கு அவசியம்.
'தேர்தல் நடைபெற ஓராண்டு உள்ளது; இப்போதே முதல்வர் பதவிக்கு சண்டை. அதனால், முதலில் காங்., கூட்டணி வெற்றி பெறட்டும்' என, கிண்டலடிக்கின்றனர் டில்லியில் உள்ள இடதுசாரி தலைவர்கள்.