4,600 அடி உயரத்துக்கு வந்த முதல் வாகனம்: முதன்முறையாக டிராக்டரை பார்த்த கிராமம்
4,600 அடி உயரத்துக்கு வந்த முதல் வாகனம்: முதன்முறையாக டிராக்டரை பார்த்த கிராமம்
ADDED : மே 22, 2025 12:45 AM

ராஜஸ்தானின் ஷிரோஹி மாவட்டத்தில் உள்ள உத்ராஜ் என்ற மலைக்கிராம மக்கள், வாழ்க்கையில் முதன்முறையாக தங்கள் கிராமத்தில் டிராக்டரை பார்த்தனர்.
ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
ஆரவல்லி மலைத்தொடரின் மவுண்ட் அபு மீது உத்ராஜ் என்ற மலைக்கிராமம் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4,600 அடி உயரத்தில் இருக்கும் இந்த கிராமத்தில் 60 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
சாலையே கிடையாது
அந்த மலை மீதே, 250 ஏக்கரில் விவசாயம் செய்கின்றனர். விவசாய பணிகளுக்கு மாடுகள் மற்றும் பாரம்பரிய கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட தலைநகர் ஷிரோஹியில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் இருக்கும் இந்த கிராமத்துக்கு செல்ல வாகன வசதி இல்லை. காரணம், சாலையே கிடையாது.
எல்லாமே நடைபயணம் தான். இந்த சூழலில், விவசாய பணிகளுக்காக டிராக்டர் வாங்க, கிராம மக்கள் தீர்மானித்தனர். ஆனால், சாலையே இல்லாமல் டிராக்டரை எப்படி கொண்டு வருவது என்ற சிக்கல் எழுந்தது.
அவர்களுக்காக, டிராக்டர் நிறுவனம் ஒரு யோசனையை தெரிவித்தது. அதாவது, அபு சாலையில் உள்ள ஷோரூமில் இருந்து டிராக்டரை, உதிரி பாகங்களாக பிரித்தெடுத்து மலை கிராமத்துக்கு எடுத்துச் சென்று, அங்கு மீண்டும் டிராக்டரை பொருத்தி தருவது என முடிவானது.
இதற்காக, மெக்கானிக்குகளையும் டிராக்டர் நிறுவனம் அனுப்பியது. அதன்படி, குரு ஷிகார் பகுதிக்கு இரண்டு டிராக்டர்களில், உதிரி பாகங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
ஆடிப்பாடி கொண்டாட்டம்
அங்கிருந்து மொத்தம் 1,000 கிலோ எடை உடைய டிராக்டரின் உதிரி பாகங்களை, கிராம மக்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர். 6 கி.மீ., தொலைவுக்கு பாறைகள், அடர்ந்த காடுகள் நிறைந்த பாதை வழியாக எட்டு மணி நேரம் சுமந்த போதிலும், தங்கள் கிராமத்துக்கு புதிதாக டிராக்டர் வருவதால், அவர்களுக்கு சுமையே தெரியவில்லை.
உத்ராஜ் கிராமத்துக்கு அனைத்து பாகங்களும் வந்து சேர்ந்ததும், மெக்கானிக்குகள் அவற்றை ஒன்று சேர்த்து, முழு டிராக்டராக்கினர்.
தங்கள் கிராமத்தின் புதிய வரவான டிராக்டரை, கிராம மக்கள் ஒன்று கூடி உற்சாகமாக வரவேற்று, மேளதாளம் முழங்க ஆடிப்பாடி கொண்டாடித் தீர்த்தனர்.
இந்த டிராக்டரை 60 குடும்பத்தினரும் பணம் வசூலித்து, 1.5 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்து வாங்கியுள்ளனர். டிராக்டரின் மொத்த விலை 7 லட்சம் ரூபாய். மீதி பணம் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
டிராக்டருக்கு டீசல், பழுதானால் சரி செய்வது என நடைமுறை சிக்கல்கள் அடுத்தடுத்து உள்ளன. எனவே, குரு ஷிகாரில் இருந்து 200 லிட்டர் டிரம்மில் டீசலை நிரப்பி, கால்நடையாக சுமந்து எடுத்து வர கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.
டிராக்டர் பழுதை சரி செய்ய, அவ்வப்போது மெக்கானிக்குகளை அனுப்புவதற்கு, டிராக்டர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. 'ஊர் கூடி தேர் இழுப்பது' போல, உத்ராஜ் ஊர் கூடி, டிராக்டரை இழுத்திருக்கிறது.