கோவை மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தின் முன்பக்கம் கமிஷனர்; கடைசி பக்கம் மேயர்
கோவை மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தின் முன்பக்கம் கமிஷனர்; கடைசி பக்கம் மேயர்
ADDED : மார் 30, 2025 04:31 AM

கோவை: கோவை மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தின் முன்பக்கத்தில் கமிஷனர் படமும், கடைசி பக்கத்தில் மேயர் படமும் அச்சிடப்பட்டுள்ளது. இது, தி.மு.க., கவுன்சிலர்களிடம் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இது, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் சமர்ப்பிக்கப்பட்ட நான்காவது பட்ஜெட்.
முகப்பு அட்டையில், செம்மொழிப் பூங்காவை சுற்றிப் பார்க்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் விளக்கும் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.
கடைசி பக்க அட்டையில், முதல்வரிடம், மேயர் ரங்கநாயகி நற்சான்றிதழ் பெறும் புகைப்படம் அச்சிடப்பட்டிருக்கிறது. இது, கவுன்சிலர்கள் மத்தியில் புகைச்சலை உருவாக்கியிருக்கிறது.
அவர்களில் சிலர் கூறியதாவது:
கோவை மேயரும், கமிஷனரும் மென்மையான சுபாவம் கொண்டவர்கள்; எளிதில் அணுகும் தன்மையுள்ளவர்கள். அதிகாரிகளும், அலுவலர்களும் செய்யும் சின்னச் சின்ன தவறுகள், அவர்களுக்கு இடையே மனஸ்தாபத்தை உருவாக்குகின்றன.
சில நாட்களுக்கு முன் நடந்த மாநகராட்சி பள்ளி ஆண்டு விழா அழைப்பிதழில், மேயர் பெயர் இடம் பெறவில்லை. தவறு சுட்டிக்காட்டப்பட்டதும், அவசர அவசரமாக அழைப்பிதழ் மாற்றப்பட்டது; சிண்டு முடியும் வழக்கத்தை அதிகாரிகள் விட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.