சிலிண்டர் தட்டுப்பாடால் சிக்கித் தவிக்கும் ஓட்டல் தொழில்!
சிலிண்டர் தட்டுப்பாடால் சிக்கித் தவிக்கும் ஓட்டல் தொழில்!
ADDED : மார் 13, 2026 05:28 AM

மதுரை: தமிழகத்தில் நிலவி வரும் வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில், குறிப்பாக அசைவ ஓட்டல்களில் உணவுப் பட்டியல் (மெனு) பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் நெருப்பு தேவைப்படும் உணவுகளைத் தயாரிக்க ஓட்டல்கள் ஆர்வம் காட்டாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்
மேற்காசிய பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர்ச் சூழல் காரணமாக சமையல் எரிவாயு (எல்பிஜி) இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுதும் வணிக சிலிண்டர்களின் விநியோகம் சீரற்று இருப்பதால்ஓட்டல் உரிமையாளர்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். பல சிறிய ஓட்டல்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன
டீ, காபி தயாரிப்பது முதல், அசைவ ஓட்டல்களில் நள்ளிரவு வரை ப்ரைடு ரைஸ், நுாடுல்ஸ் போன்ற 'சைனீஸ்' வகைகள், பரோட்டா, தோசை போன்ற கல் பயன்பாடுள்ள உணவுகளுக்கு அதிக எரிவாயு தேவைப்படுகிறது.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இவை தவிர்க்கப்பட்டு இட்லி, பிரியாணிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
நவீனத் தொழில்நுட்பத்திற்கு மாறிய பல ஓட்டல்கள், தற்போது பழைய காலத்தைப் போன்று மீண்டும் விறகடுப்புகளைத் தேடிச் செல்கின்றன. இதனால் விறகின் விலையும் உயர்ந்து வருகிறது.உணவுகளின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மெனு குறைப்பு
ஓட்டல் தரப்பில் கூறியதாவது: கூட்டு, பொரியல், பாயாசம் அடங்கிய தென்னிந்திய 'மீல்ஸ்' வகைகள், பூரி எண்ணெய்யில் பொரிக்கப்படும் உணவுகள், சைனீஸ் வகைகள், க ல் பயன்பாடு அதிகமுள்ள தோசை, பரோட்டா, சப்பாத்தி உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன.
குறைந்தளவு எரிவாயுவை பயன்படுத்தி பெரிய பாத்திரங்களில் ஒரே நேரத்தில் சமைக்கக்கூடிய பிரியாணி, தயிர் சாதம், சாம்பார் சாதம், இரவில் இட்லி, பொங்கல் என 'உணவே இல்லை' என்று கூறாத அளவுக்கு வழங்கி வருகிறோம் டீ, காபிக்கு மட்டும் மின்சார அடுப்பு (இண்டக் ஷன்) பயன்படுத்துகிறோம். 5 நாட்களுக்கு மட்டுமே எரிவாயு இருப்பு உள்ளது. மாற்று ஏற்பாடாக விறகடுப்பு மூலம் கல்லில் தயாரிக்கும் உணவுகளை மீண்டும் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம் என்றனர்.

