உறையும் குளிரில் உண்ணாவிரதம்; ஓட்டம் பிடித்த இண்டி கூட்டணி எம்பிக்கள்!
உறையும் குளிரில் உண்ணாவிரதம்; ஓட்டம் பிடித்த இண்டி கூட்டணி எம்பிக்கள்!
UPDATED : டிச 21, 2025 08:10 AM
ADDED : டிச 21, 2025 04:31 AM

நமது சிறப்பு நிருபர்
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட, 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' என்ற மசோதா பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது. 'காந்தி பெயரை மாற்றுவதா?' என, 'இண்டி' கூட்டணி கொதித்து எழுந்தது. பார்லி., வளாகத்தில் இரண்டு நாட்கள் போராட்டம் என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., அறிவித்தது. இதில், எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் என, அறிவிக்கப்பட்டது.
டில்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகம்; இன்னொரு பக்கம் கடும் குளிர். படுக்கை விரிப்புகள், கம்பளி, தலையணை மற்றும் குல்லாவுடன், பார்லி., வளாகத்தில் எம்.பி.,க்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். துவக்கத்தில் காங்., தலைவர்கள் சோனியா, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா என பலரும், 'போட்டோ'வுக்கு போஸ் கொடுத்து கிளம்பி விட்டனர். தி.மு.க., - எம்.பி., சிவா, ஹிந்தி பாட்டு பாடி விட்டு சென்றார். சமாஜ்வாதி, உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவிலிருந்து யாரும் போராட்டத்துக்கு வரவில்லை. ஜெர்மனியில் இருந்ததால் ராகுலும் பங்கேற்கவில்லை.
இரவு 9:00 மணிக்கு பின், திரிணமுல் காங்., - எம்.பி.,க்களில் பலரும் சென்று விட, ஐந்து பேர் தான் குளிரில் படுத்துக் கொண்டிருந்தனர். அடுத்தாண்டு ஏப்ரலில் தமிழகத்துடன், மேற்கு வங்கத்துக்கும் சட்டசபை தேர்தல் நடப்பதால், 'காந்தி பெயரால் ஓட்டுகளை கவர்ந்துவிடலாம்' என்பதற்காகவே இந்த போராட்டமாம்.
போராட்டம் நடந்த சமயத்தில், லோக்சபாவில் நள்ளிரவை தாண்டியும் விவாதம் நடந்து மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால், போராட்டம் பிசுபிசுத்துப் போக தலையணை, படுக்கை விரிப்புகளுடன் இடத்தை காலி செய்தனர், திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள்.வட மாநிலங்களில் உள்ள கிராமங்களில், ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, 'ராம் ராம்' என, சொல்வர்; இது அவர்களின் பழக்கம்.
'விக்சித் பாரத் ஜி ராம் ஜி சட்டத்தை எதிர்ப்பதால், பகவான் ராமரை எதிர்க்கின்றனர், 'இண்டி' கூட்டணியினர். ஏற்கனவே, அயோத்தி ராமர் கோவிலை எதிர்த்தவர்கள் தான்' என, பா.ஜ., இப்போதே பிரசாரம் செய்ய துவங்கி விட்டது.

