தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/மீண்டும் சூடுபிடிக்கிறது பெல்லட் குண்டு விவகாரம்!

மீண்டும் சூடுபிடிக்கிறது பெல்லட் குண்டு விவகாரம்!

மீண்டும் சூடுபிடிக்கிறது பெல்லட் குண்டு விவகாரம்!

8


ADDED : ஆக 22, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 04:10 AM

8


8
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது டில்லி நிருபர் -

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில், முதல் தகவலறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தி, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பார்லிமென்ட் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சராக இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர், ஒரு மாதத்துக்கும் மேல் போராட்டம் நடத்தினர்.

வலியுறுத்தல்



ஜூலை 20ல் பார்லி.,யை நோக்கி பேரணி செல்ல முயன்ற அவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். இதில், பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, தர்மேந்திர பிரதான் தன் பதவியை ராஜினாமா செய்தார்; போராட்டமும் கைவிடப்பட்டது. பெல்லட் துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்த உத்தரவிட்டது யார் என்பதை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவிக்க வேண்டும் என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த பிரச்னையால், சமீபத்தில் நடந்து முடிந்த பார்லி., மழைக்கால கூட்டத்தொடரே முடங்கியது.

பரபரப்பு



இந்நிலையில், பெல்லட் குண்டால் பாதிக்கப்பட்ட சாஹில் லோச்சப், 19, என்ற இளைஞருடன், டில்லியில் உள்ள மந்திர் மார்க் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று சென்ற ராகுல், முதல் தகவலறிக்கை பதிவு செய்யும்படி வலியுறுத்தினார்.

கோரிக்கை ஏற்கப்படாததை அடுத்து, பார்லி., தெரு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற அவர், மத்திய டில்லி போலீஸ் கமிஷனர் சச்சின் ஷர்மாவை சந்தித்து பேசினார்.

இதில், சுமுக முடிவு எட்டப்படாததால் அதிருப்தி அடைந்த ராகுல், சாஹிலுடன் போலீஸ் ஸ்டேஷனிலேயே தர்ணாவில் ஈடுபட்டார். இதில், ராகுலின் சகோதரியும், காங்., லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

வழக்கு பதிவு



இதன் பின், ராகுல் கூறியதாவது: அமைதியாக போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள், எலக்ட்ரிக் ஷாக் அடிக்கும் லத்திகள், ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு அனுமதி கொடுத்தது யார்; போலீசுக்கு எங்கிருந்து வந்தது இந்த யோசனை?

இந்த கொடூர தாக்குதலுக்கு அமித் ஷாவே காரணம். 'இந்த விவகாரத்தில் முதல் தகவலறிக்கை பதிவு செய்வது குறித்து, உயர் அதிகாரிகளிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை; எங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என, போலீசார் கூறி விட்டனர்.

போராட்டத்தில் பெல்லட் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கு, சாஹிலின் உடலில் இருக்கும் குண்டுகளே சாட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் ஆறு மணி நேரத்திற்கு பின் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, தர்ணாவை கைவிட்டு புறப்பட்டார் ராகுல்.

நாடகமாடுகிறார்!


டில்லி போராட்டம் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து உள்ளது. அப்படி இருக்கையில், ராகுல் ஏன் விதண்டாவாதம் செய்கிறார்? அவருக்கு சட்டத்தின் ஆட்சி மீது மரியாதை இல்லையா? 'வந்தே மாதரம்' பாடலை அவமதித்த விவகாரத்தில் இருந்து, அனைவரையும் திசை திருப்பவே ராகுல் இது போல நாடகமாடுகிறார்.
- ரவிசங்கர் பிரசாத், லோக்சபா எம்.பி., - பா.ஜ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us