தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/பரந்துாரில் கையகப்படுத்திய நிலங்களை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது: சுட்டிக்காட்டிய திமுக - பாமக

பரந்துாரில் கையகப்படுத்திய நிலங்களை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது: சுட்டிக்காட்டிய திமுக - பாமக

பரந்துாரில் கையகப்படுத்திய நிலங்களை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது: சுட்டிக்காட்டிய திமுக - பாமக

13


ADDED : ஆக 26, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 05:42 AM

13


13
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'பரந்துார் புதிய விமான நிலைய திட்டத்தை ரத்து செய்து விட்டதால், அதற்கு கையகப்படுத்திய நிலத்தை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது' என, தி.மு.க., - பா.ம.க., கட்சிகள் சுட்டிக்காட்டின.

சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:



தி.மு.க., - ஆஸ்டின்: சபை நடவடிக்கைகளை முதலீட்டாளர்கள் பார்த்துக் கொண்டிருப்பதால், தவறுதலாக பேசக்கூடாது என, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கூறினார். பரந்துார் புதிய விமான நிலைய திட்டத்தை, முதல்வர் விஜய் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இதை முதலீட்டாளர்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்களா?

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: பரந்துார் விமான நிலையமா, விவசாயிகளின் கண்ணீரா என்ற நிலை வந்தால், முதல்வர் விவசாயிகள் பக்கம் தான் நிற்பார். கூடிய விரைவில் புதிய விமான நிலையத்திற்கான இடம் அறிவிக்கப்படும். பரந்துார் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், தொழில் முதலீடுகள் போய் விடும் என, தி.மு.க.,வினர் சொல்கின்றனர். 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் பற்றி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி நேற்று பேசினார். பரந்துார் விமான நிலையத்தை சுற்றி, ரியல் எஸ்டேட் மோசடி நடந்துள்ளது.

அ.தி.மு.க., - பழனிசாமி: பரந்துார் விமான நிலையத்திற்கு, 90 சதவீதம் நிலம் கையகப்படுத்தி இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. இப்போது திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அந்த நிலம் விவசாயிகளிடம் வழங்கப்படுமா; இழப்பீடு திரும்ப பெறப்படுமா என்பதை, அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அமைச்சர் நிர்மல்குமார்: பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு இதுவரை, 1,802 ஏக்கர் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இது, 48 சதவீதமே. சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை பெறப்படவில்லை. 'ஜி ஸ்கொயர்' மாப்பிள்ளைக்காகவும், கருப்பு பணத்தை முதலீடாக செய்தவர்களுக்காகவும், இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

தி.மு.க., - தங்கம் தென்னரசு: அப்படியென்றால், நீங்கள் லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையத்தை, வேறு இடத்திற்கு கொண்டு போகிறீர்களா என, நான் கேட்கிறேன். பரந்துார் விமான நிலையம் அமைப்பதற்கு பல இடங்களை ஆய்வு செய்தோம். இறுதியில் பன்னுார், பரந்துார் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. குறைந்த அளவில் மக்கள் பாதிக்கப்படுவர் என்பதாலும், சாத்தியக்கூறுகள் இருந்ததாலும், இறுதியாக பரந்துார் தேர்வு செய்யப்பட்டது. நிலத்தின் விலையும் கருத்தில் கொள்ளப்பட்டது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்வது போல, வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.

புதிய இடத்தில் விமான நிலையம் அமைக்கும் போது, அங்கும் விவசாய நிலங்கள் இருக்கும். உங்களுக்கும் இதே நிலை ஏற்படும். இத்திட்டத்திற்கு, 2,100 ஏக்கருக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டு விட்டது. இப்போது திட்டத்தை கைவிடுவது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது. சென்னை விமான நிலையத்தில், இரண்டாவது ரன்வே வருவதற்கு வாய்ப்பில்லை. அவ்வாறு செய்தால், மீனம்பாக்கத்தை சுற்றியுள்ள பலரை வெளியேற்ற வேண்டியிருக்கும்.

அ.தி.மு.க., - பழனிசாமி: நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக முழுமையான விளக்கம் தேவை. விவசாயிகளுக்கு கொடுத்த இழப்பீடு திரும்ப பெறப்படுமா?

அமைச்சர் நிர்மல்குமார்: முதல்வரிடம் ஆலோசித்து, பின்னர் முடிவு எடுக்கப்படும்.

அமைச்சர் கீர்த்தனா: பரந்துார் விமான நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில், மூன்று போக நெல் சாகுபடி நடக்கிறது. நிலக்கடலை, கரும்பு, பருப்பு வகை சாகுபடியும் நடக்கிறது. மழை பெய்யாவிட்டாலும் சாகுபடி நடக்கும் அளவிற்கு செழிப்பான நிலங்கள் அங்கு உள்ளன.

செம்பரம்பாக்கம், அடையாறுக்கு செல்லும் இரண்டு முக்கிய கால்வாய்கள் உள்ளன. அவற்றை அழித்தால், சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படும். கொச்சியில் இவ்வாறு விவசாய நிலங்களை அழித்து அமைக்கப்பட்ட விமான நிலையம் தொடர்ச்சியாக, 14 நாட்கள் மூடப்பட்டது; அதேபோன்று இங்கும் நடக்கும்.

சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது. ஐந்து ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியில் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, 49 சதவீத எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி பொருட்கள், மீனம்பாக்கம் விமான நிலையம், கடல் வழியாகவே ஏற்றுமதியாகின்றன. பரந்துார் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதால் தொழில் பாதிக்கும் என்பதை ஏற்க முடியாது.

தி.மு..க., - எ.வ.வேலு: விமான நிலையம் அமைப்பது, மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. நிலத்தை கையகப்படுத்தும் பணியை மட்டுமே, தமிழக அரசால் மேற்கொள்ள முடியும். பரந்துாரில் விமான நிலையம் அமைப்பதால், தி.மு.க.,வினர் மட்டுமே செல்லப் போகின்றனர் என்பதை போல பேசுகின்றனர்.

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு, பொருளாதார வளர்ச்சி நாளுக்கு நாள் கூடுகிறது. தமிழகத்தையும் அதுபோன்று முன்னேற்ற தி.மு.க., அரசு முயற்சி எடுத்தது. திட்டத்தை ரத்து செய்து விட்டதால், அதற்கு கையகப்படுத்திய நிலத்தை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது.

பா.ம.க., - கணேஷ்குமார்: பரந்துார் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்தது, அரசின் கொள்கை முடிவு. ஆனால், தமிழகத்திற்கு கூடுதல் விமான நிலையம் அவசியம். ஒரு திட்டத்திற்கு கையகப்படுத்திய நிலத்தை, வேறு பயன்பாட்டிற்கு மாற்ற சட்டத்தில் இடமில்லை. இன்னொரு விமான நிலையம் இல்லாமல், 1.50 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவது சாத்தியமில்லை.

அமைச்சர் கீர்த்தனா: ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு கையகப்படுத்தபட்ட நிலங்களை, வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த சட்டத்தில் இடம் உள்ளது. மாற்று திட்டத்திற்கு பரந்துாரில் தேர்வு செய்யப்பட்ட நிலம் பயன்படுத்தப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

'ரூ. 145 லட்சம் கோடி வராது'


சட்டசபையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது: தமிழகத்தில் லட்சகணக்கான இளைஞர்கள் படித்து வேலைக்கு காத்திருக்கின்றனர்.
அவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பில்லை. தொழிற்சாலைகள் வர வேண்டும். அப்போது தான், அவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழிற்சாலைகள் வருவதற்கு, சாலைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் தேவை.
ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு; எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு என்ற நிலையில், இங்குள்ள கட்சிகள் உள்ளன. தமிழகத்தில், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை அமைக்க, மத்திய அரசு, 10 ஆண்டுகளுக்கு முன் முயற்சித்தது. அப்போது, விவசாயிகள் பாதிப்பதாகக் கூறி, தி.மு.க., ஆட்சியில், அந்த திட்டம் கைவிட்டது.
இப்போது பரந்துார் புதிய விமான நிலைய திட்டத்தை, ஆளும் கட்சி கைவிட்டு உள்ளது. எங்கு சென்றாலும், விவசாய நிலங்களை எடுத்து தான் பணி செய்ய வேண்டும். தமிழகத்தில் அரசியல் நடப்பதால், எந்த வளர்ச்சியும் இல்லாமல் தடுக்கப்படுகிறது. இந்த போக்கு காரணமாக, ஒரு டிரில்லியன், 1.50 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி, தமிழகத்திற்கு வராது. இவ்வாறு அவர் பேசினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us