தலைமுறைகளுக்கு எழுச்சியூட்டும் சுபாஷ் சந்திரபோஸின் மாண்பு
தலைமுறைகளுக்கு எழுச்சியூட்டும் சுபாஷ் சந்திரபோஸின் மாண்பு
UPDATED : ஜன 23, 2025 09:18 AM
ADDED : ஜன 23, 2025 12:33 AM

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128-வது பிறந்தநாளைக் குறிக்கும் வீரதீர தினத்தை, முன்னிட்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது அளப்பரிய பங்களிப்புகளை நாம் போற்றுகிறோம். ஈடு இணையற்ற அவரது தேசப்பற்று, இன்றளவும் இளைஞர்களுக்கு தொடர்ந்து எழுச்சியூட்டுகிறது.
தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவரின் வாழ்க்கை மற்றும் கோட்பாடுகளைக் கொண்டாடுவதற்காக அறிவிக்கப்பட்ட பராக்கிரம தினம், நமது தனிநபர் மற்றும் தேசிய லட்சியங்களுடன் அவரது கொள்கைகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பதை பிரதிபலிப்பதற்கான தருணமாக அமைகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நேதாஜியின் பங்களிப்புகள் கொண்டாடப்படுவதுடன், முன் எப்போதும் இல்லாத வகையில் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது.
நேதாஜியின் மாண்புகளை கவுரவிப்பதற்காக, வருடந்தோறும் தேசிய அளவிலான கொண்டாட்டங்களை மேற்கொள்ளும் நோக்கத்துடன், ஜனவரி 23-ஆம் தேதியை பராக்கிரம தினமாக 2021-ல் இந்திய அரசு அறிவித்தது.
கடமைப்பாதை புனரமைப்புத் திட்டத்தின் கீழ், இந்தியா கேட்டில் நேதாஜியின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது, அவரது தொலைநோக்குப் பார்வைக்கு வழங்கப்பட்ட குறிப்பிடத்தக்க மரியாதையாகும்.
முற்றுப்புள்ளி
நேதாஜியின் 304 கோப்புகளை வெளியிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வால், அவரது வாழ்க்கை மற்றும் பணி குறித்த முக்கிய ஆவணங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு, பல தசாப்த கால யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல், இந்திய தேசிய ராணுவம் முதன் முதலில் மூவர்ணக் கொடியை ஏற்றிய மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில், இந்திய தேசிய ராணுவத்தின் நினைவுச் சின்னம் புனரமைக்கப்பட்டது, நேதாஜியின் புகழைப் போற்றி பாதுகாப்பதில் அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
சுபாஷ் சந்திரபோஸால் உலகளவில் ஏற்பட்ட தாக்கத்தை சுட்டிக்காட்டி, 'நேதாஜியின் வாழ்க்கை, விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்டது; தன்னிறைவான, நம்பிக்கையான இந்தியாவை உருவாக்க அவர் விரும்பினார்' என்று மாண்புமிகு பிரதமர் மோடி தெரிவித்தார்.
கட்டாக்கில் மதிப்புமிக்க குடும்பத்தில் பிறந்த போஸ், புத்திசாலியான மாணவனாகத் திகழ்ந்தார். கட்டாக்கில் உள்ள ராவென்ஷா பள்ளி, கொல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லுாரி மற்றும் இந்திய குடிமைப்பணிகள் தேர்வு ஆகியவற்றில் அவர் சிறந்து விளங்கினார்.
எனினும் நாட்டுப்பற்று உணர்வால் ஈர்க்கப்பட்டு, தேசத்திற்கு சேவையாற்றும் தாகத்துடன் இந்திய குடிமைப் பணிகளில் இருந்து விலக அவர் முடிவு செய்தார். பிறகு, இந்திய மக்களிடையே சுதந்திர உணர்வை ஊட்டுவதற்காக, 1921-இல் 'ஸ்வராஜ்' என்ற பத்திரிக்கையை அவர் தொடங்கினார்.
சுதந்திர இந்தியாவுக்கான நேதாஜியின் தொலைநோக்குப் பார்வை வெறும் கனவல்ல, அது செயல்பாட்டிற்கான அறைகூவல்.
கடந்த, 1941-இல் வீட்டுக்காவலில் இருந்து தப்பித்து சர்வதேச ஆதரவை அவர் நாடியது, வெறும் ஒரு உத்தி சார்ந்த நடவடிக்கை அல்ல; உறுதிப்பாடு, நெகிழ்வுத்தன்மை மற்றும் தேவை ஏற்படும்போது வழக்கத்திற்கு மாறான பாதைகளைத் தேர்வு செய்யும் உறுதி ஆகியவற்றை துணிச்சலாக வலியுறுத்தும் செயல்பாடாக இருந்தது.
உண்மையான சுதந்திரம் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, செயல்பாடுகளின் அடிப்படையிலானது என்ற கருத்தை முன்வைக்கும் வகையில், 'உங்கள் உதிரத்தைக் கொடுங்கள்; சுதந்திரக் காற்றை நான் சுவாசிக்க வைக்கிறேன்' என்று அவர் கூறியது, உலகம் முழுதும் பேசப்பட்டது.
கூட்டுமுயற்சி
இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியதன் வாயிலாகவும், 'ஆசாத் ஹிந்த்' வானொலியில் தமது உரைகள் மூலமாகவும், சுதந்திரம் அடைவதற்கு கூட்டுமுயற்சி, தியாகம் மற்றும் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவு ஆகியவை தேவை என்பதை போஸ் விளக்கினார்.
நெகிழ்வுத்தன்மை மற்றும் புத்தாக்கத்தின் தேவைகள் அதிகரித்துள்ள உலகில், தன்னிறைவான, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் பங்களிக்குமாறு அவரது வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கு ஆற்றல் மிக்க சக்தியாக உள்ளது.
அவரது மாண்புகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில், வளமான, வலுவான எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்.
சிந்தனைக்களம்: கஜேந்திரசிங் ஷெ காவத்,
மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர்

