நீர்க்கசிவு தடுப்பு ரசாயனங்களின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகளே: விரிசல் தடுப்பு வல்லுநர் தகவல்
நீர்க்கசிவு தடுப்பு ரசாயனங்களின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகளே: விரிசல் தடுப்பு வல்லுநர் தகவல்
ADDED : மார் 18, 2025 05:34 AM

கான்கிரீட்டை அடிப்படையாக வைத்து கட்டப்படும் கட்டடங்களில் விரிசல், நீர்க்கசிவு என்பது பிரதான பிரச்னையாக உள்ளன. கட்டுமானப் பணியின் போது, பொறியாளர்கள், பணியாளர்கள் மட்டுமல்லாது உரிமையாளர்களும் விழிப்புடன் செயல்பட்டால் கட்டட விரிசல்கள், நீர்க்கசிவு பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் இத்துறை வல்லுநர்கள்.
இதுகுறித்து சென்னையை சேர்ந்த கட்டட விரிசல் மற்றும் நீர்க்கசிவு சீரமைப்பு வல்லுநர் எம்.சி.நடராஜன் கூறியதாவது: பொதுவாக கட்டடங்களில் வடிவமைப்பு, மண்ணின் உறுதித்தன்மை, கட்டுமானம் மற்றும் பூச்சு வேலை, கான்கிரீட் கலவை தயாரிப்பு சார்ந்த குறைபாடுகளால் விரிசல்கள் ஏற்படுகின்றன. எந்த காரணத்தால் ஒரு விரிசல் ஏற்பட்டது என்பதை கண்டுபிடித்து அதை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுமானப் பொருட்கள்
கட்டுமானப் பணியில் சிமென்ட், மணல், தண்ணீர் ஆகியவை உரிய விகிதத்தில், மிக சுத்தமான முறையில் ஒன்று சேர்க்கப்பட வேண்டும். தற்போது 'எம் - சாண்ட்' பயன்பாடு பரவலாக அதிகரித்துள்ளதால் அதை தரமானதாக பார்த்து வாங்க வேண்டும். தரமான எம் - சாண்டை வாங்குவதுடன் அதை முறையாக கழுவி சுத்தமான நிலையில் பயன்படுத்தினால் விரிசல்களை தடுக்கலம்.
பராமரிப்பு
கட்டடங்களை குறிப்பிட்ட கால இடைவெளி யில் முறையாக பராமரிக்க வேண்டும். சுவர்கள், மேல்தளம் ஆகியவற்றின் வெளிப்புற பகுதிகளில் பறவைகளின் எச்சம் காரணமாக சில செடிகள் வளர்ந்து இருக்கலாம். அதை அப்புறப்படுத்தும் போது அந்த இடத்தில் ஏற்பட்ட மெல்லிய உடைப்புகளையும் சரி செய்ய வேண்டும். மாடித்தோட்டம் போன்ற காரணங்களால் மண் மற்றும் குப்பைகள் சேரும் போது கட்டடத்தில் பாசி மற்றும் பூஞ்சைகள் உருவாகி கட்டடத்தில் நீர்க்கசிவுக்கு வழிவகுத்துவிடும். தண்ணீர் வெளியேறும் வழிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
வாகனங்கள், தொழிற்சாலை புகை போன்ற காரணங்களால் கட்டடங்களில் படியும் மாசு படிப்படியாக வளர்ந்து கட்டடத்தில் விரிசல், நீர்க்கசிவை ஏற்படுத்த கூடும். பிரச்னை ஏற்படும் வரை காத்திருக்காமல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேல் தளத்தில் வாட்டர் புரூப்பிங் கோட்டிங் அடிப்பது கட்டடத்தின் ஆயுளை அதிகரிக்க உதவும். கட்டடத்தில் மேல் தளம் அமைத்த பின் அதன் வெளிப்புற பாதுகாப்புக்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்று பாருங்கள், அதன் மேல் லேசான பூச்சு கொடுத்து மங்களூரு ஓடு பதித்து இருப்பார்கள்.
சில இடங்களில், சிப்ஸ் போன்ற சிறிய ஜல்லிகளை பயன்படுத்தி மேற்பரப்பை மூடி இருப்பார்கள். இதன் மேல் வாட்டர் புரூப்பிங் கோட்டிங் கொடுக்கலாம். இதில் 'கன்வென்ஷனல் வாட்டர் புரூப்பிங்' பொருட்களை கட்டுமான நிலையிலேயே பயன்படுத்தலாம். இதனால், கட்டத்தில் ஈரப்பதம் இறங்காமல் தடுக்கலாம். மேற்பரப்பில் எந்த கோட்டிங் கொடுத்தாலும் அதன் ஆயுள் காலம், 5 ஆண்டுகள் மட்டும் தான் என்பதை புரிந்து மீண்டும் கோட்டிங் கொடுக்க வேண்டும்.
எதை பயன்படுத்துவது?
வாட்டர் புரூப்பிங் பணிக்கு பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் வந்துள்ளன. இதில் எந்த இடத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு எந்த வகை பொருளை பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். இதில் தற்போது உயர் ரக பாலியூரித்தீன், சிந்தட்டிக், எபாக்சி, அக்ரலிக் என பல்வேறு வகை ரசாயனங்கள் வந்துள்ளன. இதில் மொட்டை மாடியில் எபாக்சி அடிப்படையிலான பொருட்களை பயன்படுத்த கூடாது.
கட்டடத்தின் உட்புறத்தில் மட்டுமே எபாக்சி வகை பொருட்களை பயன்படுத்த வேண்டும். வெயில் படும் இடங்களில் பாலியூரித்தீன் பொருட்களை பயன்படுத்த வேண்டும். வாட்டர் புரூப்பிங் கோட்டிங் அடிக்கும் போது சம்பந்தப்பட்ட பகுதி மிக சுத்தமாக இருக்க வேண்டும். இந்த ரசாயனங்களை இதில் உரிய அனுபவம் உள்ள நபர்கள் வாயிலாக வாங்கி பயன்படுத்துவது நல்லது.
உங்கள் கட்டடத்துக்கு பயன்படுத்தப்படும் வாட்டர் புரூப்பிங் கலவை 'எலாஸ்டிக்' தன்மையுடன் இருக்க வேண்டும். இந்த விஷயத்தை கவனமாக பார்க்க வேண்டும். தற்போது பெயின்ட் தயாரிப்பு நிறுவனங்களும் இதை தயாரிக்க வந்துள்ளதால், எதை தேர்வு செய்வது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
விலையில் கவனம்
கட்டடங்களில் விரிசல்கள், நீர்க்கசிவு தடுப்புக்கான ரசாயனங்களை பூச ஒரு சதுர அடிக்கு, 20 ரூபாய் என்று சொன்னால், எவ்வளவு சதுர அடிக்கு எவ்வளவு லிட்டர் ரசாயனம் பயன்படுத்தப்படும் என்று பாருங்கள். இதில் ரசாயனங்களின் 'டேட்டா ஷீட்' கேட்டு வாங்கி பாருங்கள்.
தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைத்த அளவைவிட, அதிக அளவு தண்ணீர் சேர்க்கப்பட்டால் உரிய பலன் கிடைக்காது. இதில் பணியாளர் கூலி உள்ளிட்ட இதர செலவுகள் குறித்து தெளிவாக கேட்டு விசாரிக்க வேண்டும். குறைந்த செலவு என்று இதில் அலட்சியம் காட்ட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -