ADDED : ஜன 11, 2026 04:39 AM

சமீபத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டில்லியில் சந்தித்தார் பழனிசாமி. இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாம். இது குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. அது, 'கூட்டணி ஆட்சி தான் அமையும். பா.ஜ.,விற்கு மூன்று அமைச்சர் பதவிகள் வேண்டும்' என்றாராம் அமித் ஷா.
அத்துடன், எந்த துறைகள் வேண்டும் என்பதையும், இப்போதே சொல்லி விட்டாராம். அறநிலையத் துறை, கல்வி, கலாசாரம் ஆகியவை தான் பா.ஜ.,வின் விருப்ப பட்டியல். இதற்கு பழனிசாமி பதில் எதுவும் சொல்லவில்லையாம். இன்னொரு பக்கம், காங்கிரசும் ஆட்சியில் பங்கு கேட்டுள்ளது.
என்ன துறைகள் வேண்டும் என்பதும் குறித்து, காங்., தலைவர்கள் மத்தியில் அடிபடுவது இது தான். பொதுப் பணித் துறை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் பதவிகள் வேண்டுமாம். நிதி பற்றாக்குறையில் கட்சி செயல்பட்டு வருவதால், பொதுப்பணித் துறை வாயிலாக, அதிகளவில் காசு பார்க்கலாம் என்பது தான் எண்ணம்!
அடுத்த வாரம் டில்லியில், தமிழக காங்., தலைவர்களை சந்திக்கிறார் ராகுல். அப்போது, கூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும். அத்துடன், கூட்டணி ஆட்சி வந்தால், அதில் பங்கு வேண்டும் என்பது குறித்தும், இறுதி முடிவெடுப்பாராம் ராகுல்.

