செம்மண் சுரண்ட உதவுன அதிகாரிங்க பீதி; ஜாமின் அமைச்சரால இலைக்கட்சிக்கு பேதி!
செம்மண் சுரண்ட உதவுன அதிகாரிங்க பீதி; ஜாமின் அமைச்சரால இலைக்கட்சிக்கு பேதி!
ADDED : செப் 30, 2024 11:44 PM

வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்ட ஆரம்பித்தாள் சித்ரா.
காபி கோப்பையை நீட்டிய மித்ரா, ''என்னக்கா, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மறுபடியும் அதே ரெண்டு துறைகள் ஒதுக்கீடு செஞ்சிட்டாங்க. உடன்பிறப்புகள் என்ன சொல்றாங்க...'' என, விவாதத்தை ஆரம்பித்தாள்.
''மித்து, ஆளுங்கட்சி நிர்வாகிகள் பலரும் கலக்கத்துல இருக்காங்க. அவரு ஜெயில்ல இருந்தப்போ ஆட்டம் போட்டவங்க யார் யாருன்னு, 'ரிப்போர்ட்' போயிட்டே இருந்துச்சாம். போட்டோ இல்லாம போஸ்டர் அச்சடிச்சது யாருங்கிறதையும் விசாரிச்சு வச்சிருக்காரு. கவுன்சிலர்களில் ஆரம்பிச்சு டெபுடி மேயர் வரைக்கும் பலரும் சென்னையில முகாமிட்டு, வரிசையில் காத்திருத்து, அவரை சந்திச்சு, வாழ்த்து சொல்லிட்டு வந்திருக்காங்க.
ஞாயித்துக்கிழமை மட்டும் செந்தில்பாலாஜியை பார்க்குறதுக்கு, நாலு மணி நேரம் கியூவுல நிக்க வேண்டியிருந்துச்சாம். அந்தளவுக்கு ஆதரவாளர்கள், அவரது வீட்டுக்கு திரண்டு வந்திருந்தாங்களாம்,'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் சித்ரா.
உடன்பிறப்புகள் கருத்து
''மதுவிலக்குத்துறையை மறுபடியும் அவருக்கே ஒதுக்கியதில், நம்மூர் உடன்பிறப்புகளில் சிலருக்கு பிடிக்கலை போலிருக்கு. கொஞ்ச நாளா, உள்ளூர் கட்சிக்காரங்க கல்லா நிரப்பிக்கிட்டு இருந்தாங்க. இனிமே, கரூர் டீம் களமிறங்க ஆரம்பிச்சிடுமோன்னு பயப்படுறாங்க. அமைச்சராகிட்டாரு; பழைய துறைகளையே ஒதுக்கிட்டாங்க. அமைச்சரவை குரூப் போட்டோவுல, உதயநிதிக்கு பின்னால செந்தில்பாலாஜி நின்னாரு. அதனால, கோவை மாவட்ட பொறுப்பும் மறுபடியும் கொடுப்பாங்கன்னு சொல்றாங்க,''
''மாவட்ட பொறுப்பும் கொடுத்துட்டா... மத்தவங்க எல்லோரும் அவருக்கு கீழேதானே. மாவட்ட செயலாளர்களை மாத்துனாலும், மாத்தாட்டினாலும் இனிமே பிரச்னையில்லை. தலைமையும் அவரு சொல்றதை தானே கேட்கும்னு, உடன்பிறப்புகள் பேசுறாங்க...''
''ஆபீசர்ஸ் சைடுல ஏதாச்சும் 'ரியாக்சன்' இருக்குதா...''
''இதுநாள் வரைக்கும் அதிகாரிகள் தான் அதிகாரம் செலுத்திட்டு வர்றாங்க. அமைச்சர் செந்தில்பாலாஜி வந்துட்டா, ஆபீசர்ஸ் பலரும் 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு, ஊரை காலி பண்ணிட்டு, கெளம்பிடுவாங்கன்னு சொல்றாங்க,''
ரத்தத்தின் ரத்தங்கள் புலம்பல்
''முன்னாள் அமைச்சர் வேலுமணி என்ன செய்றாரு; சத்தத்தையே காணோமே...''
''ஆமாப்பா... அவருடைய பையனுக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சுட்டு இருக்காரு. இந்த நேரத்துல, மூனு வருஷத்துக்கு அப்புறம், விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட்காரங்க கேஸ் பதிவு செஞ்சதுல 'அப்செட்'டுல இருக்காராம். இப்போ, தி.மு.க.,வுக்கு எதிராவும் பேசுறதில்லை; பா.ஜ.,வுக்கு எதிராவும் பேசுறதில்லை. 'கிரீம் பன்' ஜி.எஸ்.டி., விவகாரத்திலும், கருத்து சொல்லாம நழுவிட்டாரு,''
''செந்தில்பாலாஜி ஜெயில்ல இருந்து வெளியே வந்தது மட்டுமில்லாம, மறுபடியும் மினிஸ்டர் பதவி கொடுத்ததால, அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சியில இருக்காங்க. உள்ளாட்சி தேர்தல்ல, 96 வார்டுல தி.மு.க., ஜெயிச்சது.
2026 சட்டசபை தேர்தல்ல அவரது அதிரடியை தாண்டி, கொங்கு மண்டலத்துல ஜெயிக்க முடியுமான்னு, இலைக்கட்சிக்காரங்க இப்பவே புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க,''
ஆபீசருக்கு எதிரான 'மூவ்'
''அதெல்லாம் இருக்கட்டும் 'துணை'யான ஆபீசரை, எப்படியாவது நம்மூர்ல இருந்து நகட்டுறதுக்கு 'காய்' நகர்த்திட்டு இருக்காங்களாமே...''
''அதுவா... காவல்துறையில முதல்வர் பெயர் கொண்ட 'துணை'யான ஆபீசர் ஒருத்தரு துடிப்பா செயல்படுறாரு. அவரு பொறுப்பேத்ததில் இருந்து, சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்திட்டு வர்றாரு. கமிஷனர் ஆபீசுல இவருக்கு கீழே இருக்கற ஒரு ஆபீசரு, அவரை 'காலி' செய்றதுக்கு 'மூவ்' பண்ணிட்டு இருக்காராம்.
ஆபீசர்ஸ் கலக்கம்
''செம்மண் கடத்துற விவகாரத்துல, நீதிபதிகள் குழு ஆய்வு செஞ்சாங்களே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
''ஆமாப்பா... சட்ட விரோதமா மண் கடத்துற கும்பல் ஆடிப்போயிருக்கு. இந்த விவகாரத்துல, ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க பலரும் இருக்காங்களாம். புதுக்கோட்டையை சேர்ந்த கும்பல், இவ்ளோ நாளா மாமூல் வாங்கிட்டு இருந்துருக்கு. அவுங்களை 'அரெஸ்ட்' பண்ணலை,''
''மண் கொள்ளையில பெரிய புள்ளியா செயல்பட்டவங்க மேலயும், எந்த நடவடிக்கையும் எடுக்கலை. கண் துடைப்புக்காக லாரி டிரைவர், பொக்லைன் டிரைவர்கள் மேல வழக்கு பதிவு செஞ்சிருக்கறதா சொல்றாங்க.
தொண்டாமுத்துார் ஏரியாவிலயும், காரமடை ஏரியாவுலயும் திருட்டுத்தனமா செங்கல் சூளை செயல்பட்டுட்டு இருந்துருக்கு... அடுத்த கட்ட விசாரணையில என்ன நடக்கப் போகுதோன்னு, கவர்மென்ட் ஆபீசர்ஸ் பலரும் கலக்கத்துல இருக்காங்க,''
ஆளுங்கட்சியினர் ஆதரவு
''ஆளுங்கட்சிக்காரங்க ஆதரவோட, நீர் வழிப்பாதையை ஆக்கிரமிக்க முயற்சி நடக்குதாமே...''
''ஆமா, மித்து! உண்மைதான்! சிங்காநல்லுார் பக்கத்துல கள்ளிமடை இருக்கு. இங்க இருக்கற சுடுகாட்டுக்கு தொட்ட மாதிரி, குளத்துக்கு போற கொப்பு வாய்க்கால் இருக்குது. இந்த வழித்தடத்தை மீட்டு தரணும்னு அந்த ஏரியா விவசாயிகள் ரொம்ப நாளா போராடுனாங்க. கவர்மென்ட்டு சைடுல அந்த இடத்தை மீட்டு, வாய்க்கால் ஏற்படுத்திக் கொடுத்தாங்க. இப்போ, ஆளுங்கட்சிக்காரங்க உதவியோட வாய்க்காலையும், சுடுக்காட்டுக்கு போற வழித்தடத்தையும் ஆக்கிரமிக்க முயற்சி பண்றாங்க. இது, அந்த ஏரியா பப்ளிக் மத்தியில கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கு,''
மோதல் போக்கு
''விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி இருக்குதாமே...''
''அதுவா... இப்போ கொஞ்ச நாளா... ரூரல் ஏரியாவுல தில்லா 'கள்' இறக்க ஆரம்பிச்சிட்டாங்க. 'கள்' தேவைப்படுவோர் தொடர்பு கொள்றதுக்கு மொபைல் போன் நம்பரும் 'வாட்ஸ்ஆப்' குழுவுல அனுப்பியிருக்காங்க. டென்ஷனான போலீஸ்காரங்க, கள் இறக்குறவங்களை 'அரெஸ்ட்' பண்றதோடு, பைன் போடுறாங்க.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஏரியாவுல இஷ்டத்துக்கு, பைன் போடுறாங்களாம். அதனால, போலீசுக்கும், விவசாயிகளுக்கும் இடையில சுமுக உறவு அறுந்து போச்சாம். ஸ்டேஷன்களை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துறதுக்கு விவசாயிகள் தரப்புல 'பிளான்' போட்டுட்டு இருக்கறதா சொல்றாங்க...''
'போஸ்டிங்'கிற்கு துடிப்பு
''லட்சக்கணக்குல செலவழிச்சு பதவியை கைப்பத்துறதுக்கு, பேராசிரியர்கள் பலரும் துடியாய் துடிக்கிறாங்களாமே...''
''அதுவா... ஜி.சி.டி., காலேஜ்ல தான் அந்தக்கூத்து நடக்குது. அந்த காலேஜ்ல ஏகப்பட்ட போஸ்டிங் காலியா இருக்குதாம். கைப்பத்துறதுக்கு பேராசிரியர்கள் மத்தியில போட்டி நடக்குது. சம்பளம் மட்டுமில்லாம, 'ரெமுனரேஷன்' நிறைய கெடைக்குமாம்.
பல வழிகளில் சம்பாதிக்கறதுக்கு வழி இருக்கறதுனால, லட்சக்கணக்குல செலவழிச்சு, 'போஸ்டிங்'கை கைப்பத்துறதுக்கு 'டிரை' பண்ணிட்டு இருக்காங்களாம்,'' என்றபடி, ஜாகிங் கிளம்ப ஷூ லேசை கட்ட ஆரம்பித்தாள் சித்ரா.