UPDATED : ஜன 01, 2025 05:36 AM
ADDED : ஜன 01, 2025 05:15 AM

லோக்சபா தேர்தல், மாநகராட்சி சொத்து வரி உயர்வு விவகாரம் என 2024ம் ஆண்டு, திருப்பூர் மாவட்டத்தில் அரசியல் 'புயல்' ஆர்ப்பரித்த ஆண்டாக இருந்தது. அடுத்தாண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்கள் செல்வாக்கை வலுப்படுத்த அரசியல் கட்சியினர் தீவிரக் களம் இறங்க வேண்டிய தருணமாக ஆங்கிலப் புத்தாண்டு மாறியிருக்கிறது.
வாய்ப்புகளை நழுவவிடவிரும்பாத தி.மு.க.,வினர்
திருப்பூர் 2வது குடிநீர் திட்டம் அப்போதைய முதல்வர்எம்.ஜி.ஆர்., தலைமையிலும், 3வது குடிநீர் திட்டம் அப்போதைய முதல்வர் ஜெ., தலைமையிலும் துவங்கப்பட்டது. கடந்தாண்டு 4வது குடிநீர் திட்டம் உதயநிதி தலைமையில் துவங்கப்பட்டது. இதில், தி.மு.க.,வினருக்கு மகிழ்ச்சி. லோக்சபா தேர்தலில் இ.கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் வெற்றி பெற்று, தி.மு.க., கூட்டணியின் பலத்தை உணர்த்தினார்.
திருப்பூர் மாவட்டத்தில், தி.மு.க.,வில் அமைச்சர் சாமிநாதன், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோரை மையமாகக் கொண்டு நிர்வாகிகள், தொண்டர் இடையே அதிகார மோதல்களும், ஆர்ப்பரிப்புகளும் அவ்வப்போது எழுகின்றன. இவை நீறுபூத்த நெருப்பாகவும், சில சமயங்களில் வெள்ளிடை மலையாகவும் வெளிப்படுவதுண்டு.
கூட்டணி பலத்தை தி.மு.க., நம்பியிருந்தாலும், தனிப்பட்டு செல்வாக்கை உயர்த்த இளைஞர்களை ஈர்த்தாக வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க., உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் இந்த முறை வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் தி.மு.க.,வினர் உறுதியாக உள்ளனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோரும் இதில் அக்கறை காட்டி வருகின்றனர்.
தேசிய கட்சியான காங்கிரசில், திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் பழனியப்பன் தேசிய செயலாளராக உயர்ந்திருக்கிறார். சட்டசபை தேர்தலில் கூட்டணிக் கணக்கில் கிடைக்கும் தொகுதி 'ஒன்னோ, ரெண்டோ' என்ற நிலைதான், காங்கிரசுக்கு. சுதாரிக்காவிட்டால், அது கூட கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. கம்யூ., கட்சிகள், தலா ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதில் முனைப்புடன் உள்ளன. இதற்கேற்ப காய் நகர்த்தியாக வேண்டும்.
வெற்றி அறுவடைஅ.தி.மு.க., துவக்குமா?
திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியை சந்திக்க நேர்ந்தது. கட்சி மாவட்டம் சீரமைத்த காலத்தில் இருந்தே, தோல்வி அடைந்தது அதிகம். கோஷ்டிகளை மறைத்து, அரசியல் பயணம் சென்று கொண்டே இருக்கிறது. பொதுச்செயலாளர் பழனிசாமி, சட்டசபை தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தைப் பெரிதும் நம்புகிறார்.
சமீபத்தில் திருப்பூர் அ.தி.மு.க., வினர், சொத்துவரி உயர்வு பிரச்னையில் 'அரசியலை' கச்சிதமாக காய் நகர்த்தி, மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துள்ளனர். குறிப்பாக, நடுத்தர மக்கள் மத்தியில் அ.தி.மு.க.,வின் போராட்டம் வெகுவாக பேசப்பட்டது.
சொத்துவரி உயர்வுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மக்களின் அதிருப்தியை, சாதகமான ஓட்டுகளாக அறுவடை செய்யலாம். 2026ம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் ஆண்டாக, 2025ம் ஆண்டை நகர்த்தலாம் என்று தீர்க்கமான முடிவுடன், புத்தாண்டை அ.தி. மு.க.,வினர் எதிர்நோக்கியுள்ளனர்.
![]() |
விதை விருட்சமாகும்எண்ணத்தில் பா.ஜ.,
கடந்தாண்டு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண்; என் மக்கள்' யாத்திரை மாவட்டத்தின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு , யாத்திரை நிறைவை திருப்பூர் மாநகரில் நடத்தப்பட்டது. யாத்திரையின் நிறைவையொட்டி பல்லடத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இதே உற்சாகத்தில் லோக்சபா தேர்தலில், மூன்றாவது அணியாக பா.ஜ., தலைமையில் கூட்டணி உருவாகியது. திருப்பூர் தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் களமிறக்கப்பட்டு மூன்றாவது இடத்தை பிடித்தார்.
தோல்வியை தழுவினாலும், அவர் பெற்ற வாக்குகள், கட்சியினருக்கு அடுத்த தேர்தலுக்கான நம்பிக்கையை விதைத்தது. மத்திய அரசின் திட்டங்களை, கட்சியையும் கிராமங்களுக்கு கொண்டு செல்ல உறுப்பினர் சேர்க்கை, சந்திப்பு கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.
சட்டசபை தேர்தலை முன்னெடுத்து, புத்தாண்டு முதல் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், தி.மு.க., அரசின் குறைகளை கொண்டு செல்லும் முனைப்பிலும் பா.ஜ.,வினர் உள்ளனர். இதுதவிர, மக்களை சந்திக்கும் வகையில் ஏராளமான கூட்டங்களை திட்டமிட்டு உள்ளனர்.
வெற்றி நோக்கியஇலக்குடன் கட்சியினர்
பா.ம.க.,வைப் பொறுத்தவரை திருப்பூர் மாவட்டத்தில் காலுான்ற வேண்டுமானால், கட்சியினரின் கடும் உழைப்பு தேவைப்படும்.
நாம் தமிழர் கட்சியினர், கடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், 8 சதவீத வாக்கு, அதாவது, 36 லட்சம் வாக்காளர்களை பெற்றதாகவும், திருப்பூர் தொகுதியில், 95,726 ஓட்டுகள், 8.38 சதவீதம் ஓட்டுகளை பெற்றதாகவும் கூறுகின்றனர்.
''தமிழகத்தில், 2026ல், ஒரு கோடி வாக்காளர்களை இணைக்க வேண்டும் என்ற கட்சி தலைமை வகுத்துள்ள இலக்கை நோக்கி பயணிக்கிறோம்'' என் கிறார்கள் இக்கட்சியினர்.
''லோக்சபா தேர்தலுக்கு பின் மீண்டும் எழுச்சியுடன் புறப்பட்டிருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டத்திலும் இது நிதர்சனமாகியிருக்கிறது'' என்று கூறுகின்றனர் தே.மு.தி.க.,வினர்.
த.வெ.க.,வில் பிரதி ஞாயிறு தோறும் கட்சி கொடியேற்று விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ''தமிழகத்தில், 2 கோடி பேரை கட்சியில் இணைக்க வேண்டும் என்பது இலக்கு; அதை நோக்கி பயணிக்கிறோம். புதிய உறுப்பினர்களை முறைப்படி இணைத்து வருகிறோம். இந்தாண்டு கட்சியின் வளர்ச்சி வேகமெடுக்கும்'' என்கின்றனர் த.வெ.க.,வினர்.
- நமது நிருபர் குழு -