ராகுல் கனவை தகர்த்த அகிலேஷ் திட்டம்; ராஜ்யசபாவில் இடம் பெறப்போகும் தந்தை, மகன்
ராகுல் கனவை தகர்த்த அகிலேஷ் திட்டம்; ராஜ்யசபாவில் இடம் பெறப்போகும் தந்தை, மகன்
UPDATED : அக் 04, 2026 11:36 AM
ADDED : அக் 04, 2026 05:28 AM

புதுடில்லி: டில்லியில், 'இண்டி' கூட்டணி கூட்டம் நடப்பதற்கு முன்னதாக, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தன் கட்சி சார்பாக, ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு போட்டியிடுபவரின் பெயரை அறிவித்தார். இது, டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, காங்கிரசை குழப்பத்தில் ஆழ்த்தியது.
சமாஜ்வாதி வேட்பாளர் தன்ராஜ் பரிமல் நாத்வானி. இவர், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின், 'ரிலையன்ஸ்' நிறுவனத்தின் குழு தலைவராக உள்ளார். 40 வயதாகும் இவர், அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் நெருங்கிய நண்பர். 'வேட்பாளர் பெயரை ரகசியமாக வைத்து, கடைசி நேரத்தில் அறிவியுங்கள்' என, அனந்த் அம்பானி தான் ஆலோசனை அளித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த தன்ராஜின் அப்பா பரிமல் நத்வானி. இவர், நான்காவது முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். இரு முறை ஜார்க்கண்டிலிருந்து சுயேச்சையாக போட்டியிட்டு, ராஜ்யசபா எம்.பி.,யானார். ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆதரவுடன், ஆந்திராவிலிருந்து மூன்றாவது முறையாக எம்.பி., ஆனார். சமீபத்தில் ஜார்க்கண்டிலிருந்து, பா.ஜ., ஆதரவோடு நான்காவது முறையாக எம்.பி.,யாகி உள்ளார். இவரும், ரிலையன்ஸ் குழுமத்தின் உயரிய பதவியில் உள்ளார். முகேஷ் அம்பானிக்கு படுநெருக்கம். இனிமேல் அப்பாவும், மகனும் பக்கத்திலேயே ராஜ்யசபாவில் உட்காரலாம்.
தன்ராஜை வேட்பாளராக அறிவித்ததன் பின்னணியில், உ.பி., அரசியல் உள்ளதாக டில்லியில் பரவலாக பேசப்படுகிறது. 403 தொகுதிகள் அடங்கிய உ.பி.,யில் காங்கிரசுக்கு, 200 தொகுதிகள் தேவை என, விரும்புகிறாராம் ராகுல். ஆனால், இண்டி கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சியோ, 40 தொகுதிகளுக்கு மேல் விட்டு தர தயாராக இல்லையாம்.
பிப்ரவரியில் தேர்தல் என்பதால், அக்., இறுதியில் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்ய ராகுல் விரும்புகிறார். ஆனால், அகிலேஷ் யாதவோ ராகுலை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். இதனால் தான், இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காமல், வேறு ஒரு தலைவரை அனுப்பி வைத்தாராம் அகிலேஷ் யாதவ்.
அத்துடன், 'உ.பி., சட்டசபை தேர்தல் செலவுகளை, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரின் நிறுவனமே பார்த்துக்கொள்ளும்' என்கின்றனர்
சமாஜ்வாதி எம்.பி.,க்கள். காங்கிரசார் ராகுலை, 'யுவராஜ்' அதாவது இளவரசர் என்றும், 'அவர் தான் அடுத்த பிரதமர்' எனவும் சொல்கின்றனர். ஆனால், யுவராஜின் கனவை, புதிய ராஜ்யசபா எம்.பி., தன்ராஜ் தகர்த்து விட்டார் என, சமாஜ்வாதி கட்சியினர் கிண்டலடிக்கின்றனர்.
