பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
UPDATED : அக் 05, 2025 07:04 AM
ADDED : அக் 05, 2025 12:03 AM

புதுடில்லி: பிரதமர் மோடி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தனக்கு கிடைக்கும் பரிசு பொருட்களை ஏலம் விடுவார். அதன் வாயிலாக கிடைக்கும் பணத்தை மக்களுக்காக செலவிடுவார். இந்த நடைமுறையை, ஜனாதிபதி திரவுபதி முர்முவும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கிடைத்த பரிசு பொருட்கள் அனைத்தையும் ஏலம் விட முடிவெடுத்துள்ளாராம் திரவுபதி முர்மு. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, ஏலம் வாயிலாக விற்பனை செய்ய, 250 பரிசு பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஏலத்தில், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள யாரும் பங்கேற்கலாம். இணையம் வாயிலாக இந்த ஏலம் நடக்கும். பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பணியாற்றிய போது, அவருக்கு, 1935ல் ஆங்கிலேய அரசு வெளியிட்ட 10,000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி பரிசாக அளித்தது. இதையும் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நோட்டின் மதிப்பு தற்போது, 10 லட்சம் ரூபாய் என்கின்றனர். இப்படி கிடைக்கும் பணத்தை ஏழை, எளிய மாணவர்களின் படிப்பிற்காக செலவழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அப்துல் கலாம் தவிர, முன்னாள் ஜனாதிபதிகள் சிலர், தங்களுக்கு கிடைத்த பரிசு பொருட்களை பணி ஓய்வு பெறும் போது வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டனர். 2014லிருந்து இதுவரை, பிரதமரின் பரிசு பொருட்கள் வாயிலாக, 200 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தன் சக அமைச்சர்களுக்கும் மோடி அட்வைஸ் வழங்கியுள்ளாராம். 'உங்களுக்கு கிடைக்கும் அனைத்தையும் ஏலம் விடுங்கள். பரிசாக துணிகள் கிடைத்தால், வெள்ளம், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவற்றை கொடுங்கள்' என அறிவுறுத்தியுள்ளாராம் மோடி.