காவித் துணிக்குள் ஞான ஒளி விடும் தியாகச்சுடர்கள்!
காவித் துணிக்குள் ஞான ஒளி விடும் தியாகச்சுடர்கள்!
UPDATED : ஜூலை 10, 2025 06:49 AM
ADDED : ஜூலை 10, 2025 12:15 AM

ஓவியர் பத்மவாசன்
சாட்சாத் பரமேஸ்வரன் பெருங்கருணை கொண்டு, தன் காலடியை, காலடியில் பதித்து, மெல்ல இறங்கி வந்து, பாரத தேசம் முழுமையும் உலவி, ஓங்கு புகழ், செயல்கள் எல்லாம் புரிந்து வந்தார். அதன் நோக்கங்கள் எல்லாமும் நிறைவேற்றி, காஞ்சி மாநகரிலும், காமகோடி மடம் ஸ்தாபித்து, ஒடுங்கி உறைந்து கொண்டார்.
சீடர்களை வாரிசுகளாக அமைத்து, இந்த தியாகப் பரம்பரை, இன்று வரை வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓடி ஓடி இந்த உலகையும், பாரத தேசத்தையும், வளமோடும், செழிப்போடும் வைத்து, அன்போடும், அருளோடும், கருணையோடும் காத்து வருகிறது. அந்த வகையில், நமக்கெல்லாமும், அடுத்த தலைமுறையை வழி நடத்திச் செல்லப் போகும் குருவானவர் வந்து அமர்ந்து விட்டார்.
கடந்த, ஏப்., 30ம் தேதி, மிக மிக அபூர்வமான, முக்கியமான சுபமுகூர்த்த நாளான, புது வாரயுக்த ரோஹினி அக்ஷயத்ருதியை நாளில், அள்ள அள்ளக் குறையாத, அருள் வெள்ளத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கும், ஸ்ரீ சங்கர பகவத்பாத பரம்பராக, மூலம் ஞாய ஸர்வக்ஞ பீடமாம், ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் அருள்வழியில், அடுத்த குருநாதர் அக்ஷய பாத்திரமாய் அமர்ந்து கொண்டார்.
ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலின், பஞ்சகங்கா திருத்தெப்பக் குளத்தின் அருகே, சன்னியாசம் பெற்றுக் கொண்டு, ஞானப்பரம்பரையின் வாரிசாக அமர்ந்து கொண்டார். ஏகதடபுடலாய், பக்த கோடிகள் அலைமோத, ஆனந்த வெள்ளம் கரைபுரண்டு ஓட, பக்திப் பரவசம் நீக்கமற நிறைந்திருக்க, அன்பர்களின் கண்கள் எல்லாம் ஆனந்தமும், பக்தியும், இன்னும் இனம் புரியாத பல உணர்வுகளின் கலவையில் நீர் வடிக்க, எந்தவித சலனமும் இன்றி, ஐம்பொன் விக்கிரகம் போல் வீற்றிருந்தார், சத்திய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா.
அவருக்கு பொன்னார் மேனியனாய் வீற்றிருந்து, நமது பால பெரியவர், அத்தனை ஞான உபதேசங்களையும் திரட்டி வழங்கி, சிரசின் மேல் சாளக்கிராமம் வைத்து, தங்கப்பூண் போட்ட, வெண் சங்கினால் நீர் வார்த்து, இதயத்தில் கை வைத்து, 'நானே நீ, என் அத்தனையும் இனி உன்னுடயது, நீயும் நானும் வேறில்லை, நான் நினைப்பது, செய்வது எல்லாமும் உனதாகிறது.. மொத்தத்தில் என்னையே உனக்குத் தந்தேன்' என்பதாய், மனதை உருக்கும் விதமாய், ஸ்லோகம் சொல்லி, ஸ்படிகமும், ருத்ராட்சமும் கலந்த மாலை அணிவித்து, லௌகீக குடும்பத்தை விடுத்து, காமகோடிக் குடும்பத்தில் சேர்த்துக் கொண்டார்.
'இதோ வந்துவிட்டார் அடுத்த பீடாதிபதி' என, கையை பிடித்து அழைத்து, உலகுக்காய் அருளினார். முதல் நாளில் பிறந்து, மறுநாளில் மீண்டும் புதிதாய் பிறந்தார் புதிய பெரியவர் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி. கடந்த 1999 ஏப்., 29 சுவாமிகளின் அவதார தினம். இந்த ஆண்டு ஏப்.,30ம் தேதி சன்யாசம் பெற்ற மறுபிறப்பு நாள். புதிய பீடாதிபதிகளுக்கு 26 வயதாகிறது. நமது பாலப் பெரியவர்கள் மடத்திற்குள் வந்து அலங்கரித்த போது, அவர்களின் வயது 13 தான்.
பல காலமாக கண்காணித்து தேர்வு செய்வர் என, என் அருகில் இருந்த சிலர் பேசிக் கொண்டது காதில் விழுந்தது. காஞ்சி மகா பெரியவர், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட அனைத்து பீடாதிபதிகள், அனைத்திற்கும் மேலாக, ஆதிசங்கரரின் அருட்துணை வழிகாட்டுதல் கொண்டு, தெய்வீகத் தன்மையோடு திகழும், பாலப் பெரியவருக்கு பார்த்தவுடன் தெரிந்து விடாதா. அவரது ஞானப் பார்வையினால் தேர்வு செய்யப்பட்டவர் தான் புது பெரியவர். . 'மானிட்டரிங்' எல்லாம் ஒரு நொடியில் முடிந்திருக்கும் என்று அவர்களுக்கு சொன்னேன். அது எனது கடமை. சொல்லாது விட்டால், அது பெருங்குற்றம். அந்தக் குற்றத்தை செய்யாமல், அந்த பரமேஸ்வரன் காத்தருளினார்.
எண்ணிலடங்காத, எளிதில் புலப்படாத, என்னவென்றே அறியப்படாத, பல விஷயங்களை எல்லாம் எளிமைப்படுத்தி, பாமரனுக்கும் புரியும் வண்ணம் சொல்லி, ஹிந்து மதத்தை அடிவரைக்கும் பாய வைத்து, பிடிப்பு, பக்தி, பொறுப்பை ஏற்படுத்தி, சதா சர்வ காலமும், உலக நன்மைக்காகவே முன்னோர்கள் வழியில், சுடரொளிப் பிழம்பாக காரியமாற்றிக் கொண்டும், அருளாசி வழங்கிக் கொண்டும் இருக்கிற, பாலப் பெரியவர் கண்டெடுத்த பொக்கிஷம். ஞானப் பார்வையால் சுட்டெடுத்து புடம் போட்ட சொர்ணம். இனி என்றும் ஜொலிக்கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தில், குருவும், சிஷ்யனுமாக கண்கொள்ளாக் காட்சி, களிப்பேருவகை கொள்ள வைக்கும் காட்சி. ஆனந்த கோலாகலம்.
அனைத்து ஹிந்து மதத்தவரும், சிவனடியார்களும் ஓங்கி உயர்ந்து, தெய்வமாய் திகழும் பாலப் பெரியவர்களையும், அவர் அடியொற்றி அனைத்திலும் ஓங்கி உயரப் போகும், புதிய பீடாதிபதிகளையும், ஒரு தடவை போய் பார்த்து வணங்கி, ஆசி பெற்று வாருங்கள். பல தலைமுறைக்கு, பாவங்கள் அனைத்தும் கரைந்து ஓடிவிடும்.
எங்கே இருந்து கொண்டு, எதையோ பேசாமல், மத வேறுபாடின்றி, மன மாறுபாடின்றி, அவர்களை உற்று நோக்குங்கள். அவர்களின் தியாகம் தெரியும். அவர்களின் சத்தியம் புரியும். தெய்வீகம் புலப்படும். உலகின் மீது அவர்கள் காட்டும் அக்கறை, அன்பு, கவலை, கருணை அத்தனையும் புலப்படும்.
துறவறம் என்பது, குடும்ப உறவுகளை விலக்கி, குருவின் உறவில் புகுந்து கொள்வதே. அந்த உறவு அதி உன்னதமானது. அது போன்ற உறவு, உலகில் வேறு எதுவுமே இல்லை. அனைத்தையும் விடுவதல்ல துறவு. குருவின் உறவில் கலந்து, உலகத்தை நேசிப்பதே துறவு. அந்த உன்னதமான குறைவில், சுடர்விடும் ஒளி பிழம்புகளே நமது காமகோடி பரம்பரை.
பீடாதிபதிகள் என்பதெல்லாம் பெயரளவில்தான். அவர்களது எளிமையும், கருணையும், அன்பும் சொல்லி மாளாது. பார்த்து பழகி அனுபவியுங்கள். அடக்கம் நமக்குள் தன்னாலே வந்துவிடும். ஒரு கோவிலில் இருந்து பிரசாதம் வந்துவிட்டால், அதற்கு கொடுக்கும் மரியாதையை, அருகிலிருந்து பாருங்கள். ஆணவம் நம்மை விட்டு ஓடியே விடும்.
இது தொடர்ந்து வழி வழியாய் வரும் பண்பாடு. ஆனாலும் இன்று நாம் காண்பது பாலப் பெரியவர்களைதான். அவர் நின்று நிதானித்து, விசாரித்து, ஒவ்வொன்றாய் எடுத்து நெற்றியிலும், கழுத்திலும், மார்பிலும் அணிந்து, பூக்களை கண்களில் ஒற்றி, தலைமேல் வைத்து, மாலைகளையும் சிரசில் ஓரிரு நிமிடங்கள் சூட்டி, அடடா! என்ன ஒரு தெய்வீகம்.
தியாகமே வடிவானவர்கள், கோவில் பிரசாதங்களுக்கு கொடுக்கும் மரியாதையை கருத்தில் கொண்டாலே, நாம் நிலை தடுமாறாமல் வாழ்ந்து விடலாம். பிரசாதம் என்பது இங்கு உணவே அல்ல. விபூதி, குங்குமம், சந்தனம் மலர்கள், மாலைகளே.
அதிகாலை மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் கடமைகள், அன்னம், தண்ணீர் இன்றி, சந்திரமவுலீஸ்வரர் பூஜை. அது முடிந்ததும் தீர்த்த பிரசாதம். அதன் பிறகே ஒருபிடி அன்னம். காஞ்சி காமகோடி மடத்தின் தியாகச் செம்மல்களும், சந்திரமவுலீஸ்வரர் பூஜையும், இந்த உலகத்தை காக்கும் பாங்கை, என்னவென்று சொல்வது.
இப்படியான பெருமைமிக்க, தியாகம் கருணை கொண்ட, ஞானமே வடிவான பீடாதிபதிகளின் வரிசையில், இன்று 71வது பீடமாக வந்து அமர்ந்திருக்கிறார். ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். சத்தியமே வடிவாக, சத்தியமே கொள்கையாக, சத்தியமே லட்சியமாக வந்தமர்ந்து அலங்கரிக்கின்ற அவரையும், அவரது குருநாதரான, பாலப் பெரியவர்களையும், முன்னவர்களையும் வணங்கி மகிழ்வோம்.
இனி எல்லாம் ஜெயமே.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.