ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படும்?
ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படும்?
UPDATED : டிச 18, 2024 03:39 AM
ADDED : டிச 18, 2024 02:58 AM

* ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம், இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும். முதல்கட்டமாக, லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். அடுத்தபடியாக, இந்த தேர்தல் முடிந்த, 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும்.
* அனைத்து தேர்தலுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் இருக்கும். மாநில தேர்தல் கமிஷனுடன் கலந்தாலோசித்து தலைமை தேர்தல் கமிஷன், வாக்காளர் அடையாள அட்டையை தயாரிக்கும்.
* நாடு முழுதும் விரிவான விவாதங்களை மத்திய அரசு துவங்கும். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அமலாக்கக் குழு அமைக்கப்படும்.
ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகள் என்ன?
* வரும், 2029 லோக்சபா தேர்தல் முடிந்த பின் நடக்கும் முதல் கூட்டத் தொடரில், ஒரே நாடு; ஒரே தேர்தல் நடைமுறையை ஜனாதிபதி முறைப்படி அறிவிப்பார். அன்று முதல் அது நடைமுறைக்கு வரும்.
* அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து ஐந்தாண்டுகளுக்கு லோக்சபாவின் பதவிக்காலம் இருக்கும். நியமன தேதிக்கு பின் தேர்வான அனைத்து சட்டசபைகளின் பதவிக்காலமும், லோக்சபாவின் பதவிக்காலத்துடன் நிறைவடையும்.
* 2024 முதல் 2028க்கு இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்படும் மாநில சட்டசபைகள், 2029 லோக்சபா தேர்தல் வரை மட்டுமே ஆட்சியில் இருக்கும். அதன் பின், லோக்சபா - சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.
* ஒரே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட இடைப்பட்ட காலத்தில், தொங்கு சட்டசபை, நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது வேறு காரணங்களால் ஆட்சி கவிழ்க்கப்பட்டால், லோக்சபா அல்லது மாநில சட்டசபைக்கு தனியாக தேர்தல் நடத்தப்படும்.
* மொத்தம், 18 சட்ட திருத்தங்களை உயர்மட்ட குழு பரிந்துரைத்துள்ளது. இதில் பெரும்பாலானவற்றுக்கு சட்டசபைகளின் ஒப்புதல் தேவையில்லை.
மாநிலங்களுக்கான அதிகாரம்
* லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக, சட்டசபைகளின் அனுமதியை பார்லிமென்ட் பெறத் தேவையில்லை. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதலை பெறவேண்டும்.
* ஒரே வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான சில முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கு 50 சதவீத மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- நமது டில்லி நிருபர் -