அனைத்து பணிகளுக்கும் மாநில அரசுதான் பொறுப்பு: பரந்துார் விமான நிலையம் குறித்து மத்திய அரசு பதில்
அனைத்து பணிகளுக்கும் மாநில அரசுதான் பொறுப்பு: பரந்துார் விமான நிலையம் குறித்து மத்திய அரசு பதில்
ADDED : பிப் 04, 2025 07:38 AM

'பரந்துாரில் விமானநிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி உட்பட அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து, அமல்படுத்தி நிறைவேற்ற வேண்டிய முழு பொறுப்பும் தமிழக அரசையே சார்ந்தது' என்று, பார்லிமென்டில் மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில் நேற்று அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, ''தமிழகத்தின் பரந்துாரில் புதிதாக கிரீன் பீல்டு ஏர்போர்ட் அமைக்கும் திட்டத்தின் தற்போதைய நிலவரம் என்ன; விமான நிலையம் அமைக்கப்படும் இடத்தில் வசித்து வரும் கிராம மக்கள், தங்கள் நிலங்களை அளிப்பதில் விருப்பமில்லை என்றும், அரசு தரும் இழப்பீட்டுத் தொகையில் திருப்தி இல்லை என்றும் கூறப்படுகிற தகவல் மத்திய அரசுக்கு தெரியுமா,'' என, கேள்வி எழுப்பி இருந்தார்.
ஒப்புதல்
இதற்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மோகுல் அளித்த பதில்:
தமிழகத்தில் கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான 'டிட்கோ' எனப்படும், தமிழக தொழில் வளர்ச்சிக் கழகம் ஒரு இடத்தை தெரிவித்து இருந்தது.
அந்நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்ட பரந்துார் என்ற இடத்தில் நிலம் தேர்வு செய்வதற்கான ஒப்புதலை,
கடந்த 2024 ஆகஸ்டிலேயே மத்திய அரசு வழங்கி விட்டது.இதன்பின், அந்த கிரீன் பீல்டு விமான நிலைய திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை மற்றும்
அதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் 'டிட்கோ' நிறுவனத்திடம் இருந்துபெறப்பட்டு, அதற்கான ஒப்புதலையும், அதுகுறித்த கொள்கை ரீதியான ஒப்புதலையும், 2024 செப்டம்பரில் மத்திய அரசு வழங்கி விட்டது.
நாடு முழுதும்கிரீன் பீல்டு ஏர்போர்ட்டுகள் அமைப்பது குறித்து, 2008ல் மத்திய அரசு கொள்கை ரீதியான ஒரு வரையறையை உருவாக்கியது.
இதன்படி, கிரீன் பீல்டு ஏர்போர்ட் அமைக்கும் திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்துதல், நிதி ஒதுக்கீடு மற்றும் அது சார்ந்த அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து, அந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டிய முழு பொறுப்பும் மாநில அரசையே சார்ந்தது.மேலும், அந்த விமான நிலையத்தை அமைக்கும் கட்டுமான நிறுவனத்துக்கும், இந்த பொறுப்பு
உள்ளது.
இந்த கொள்கை வரையறை, தமிழகத்தின் பரந்துார் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கும் பொருந்தும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விலை குறையுமா
''தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைப்புக்கு நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டு வருகிறதா. மத்திய அரசு, பெட்ரோல் விலையை குறைப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்,
அது சார்ந்த பயன்கள் மக்களுக்கு சென்றடையவில்லை என்பதில் எந்தளவுக்கு உண்மை,'' என, அ.தி.மு.க., - எம்பி., தம்பிதுரை ராஜ்யசபாவில் மற்றொரு கேள்வி எழுப்பியிருந்தார்.அதற்கு பதிலளித்த பெட்ரோலியத்துறை இணையமைச்சர் சுரேஷ்கோபி, ''பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 94 ரூபாய் 77 காசுகள் வரை குறைந்துள்ளது. மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள்,
எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்டவை எடுத்த நடவடிக்கைகளால் இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2021 நவம்பர் மற்றும் 2022 மே மாதங்களில் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, ஒரு லிட்டருக்கு 13ரூபாய் வரை குறைந்துள்ளது.
இதன் பலன், முற்றிலுமாக நுகர்வோருக்கு செல்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில மாநிலங்கள் 'வாட்' வரியை குறைத்து, மக்களுக்கு சற்று நிவாரணம் வழங்கியுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் அதை செய்யவில்லை,'' என்றார்.
-- நமது டில்லி நிருபர் -