உங்களில் ஒருவன்: பாதங்களை கட்டிப் போட்ட தமிழக காவல் துறை!
உங்களில் ஒருவன்: பாதங்களை கட்டிப் போட்ட தமிழக காவல் துறை!
ADDED : பிப் 13, 2024 12:06 AM

'என் மண்; என் மக்கள்' யாத்திரை, 200 தொகுதிகளை கடந்திருக்கிறது. இதை எண்ணிப் பார்க்கும் போது, என் புருவங்கள் வியப்பு குறிகளை சந்திப்பதை, என்னால் தவிர்க்க முடியவில்லை. இதுவரை கடந்து வந்த பாதைகளை எல்லாம் அரிமா நோக்கிலே, நான் அலசி பார்க்கிறேன். கடந்து வந்து பாதைகள் கனவு போல இருக்கின்றன. ஆனால், அந்த கனவுகள் என் இதயத்திற்குள் கனமாக இருக்கின்றன.
அற்புத அனுபவம்
எத்தனை எத்தனைமனிதர்கள், எத்தனை விதமான தொகுதி பிரச்னைகள்.ஆளும் தி.மு.க., அரசின் திறமையின்மையால், எத்தனை விதமானமக்கள் பிரச்னைகள் என்று மலைத்திருக்கிறேன்.
ஆனால், பிரதமர் மோடி மீது நம்பிக்கை கொண்டு இத்தனை இன்னல்களையும் மீறி, எக்கச்சக்கமான எதிர்பார்ப்புடன், ஏராளமான அன்புடன், பாதயாத்திரையை எதிர்நோக்கி, கால நேரம், சுற்றுச்சூழல், வெயில், மழை என்று எதையும் பொருட்படுத்தாமல், கோடிக்கணக்கான மக்களை சந்தித்த, இந்த அற்புதமான அனுபவத்தை வாழ்நாளில் மறக்க இயலாது.
பாதயாத்திரையில் கடந்து வந்த தொகுதிகளை, ஊடகங்களில் நிழற்படமாக பார்த்திருப்பீர்கள். நான் அவற்றை எல்லாம் நிஜப் பாடமாக பார்க்கிறேன்.
பின்னணி சக்திகள்
பாதயாத்திரைக்கு பின்னணியில் எத்தனை மனித சக்திகள் இருக்கின்றன; எத்தனை உழைப்புகளும், எத்தனை தியாகங்களும் இதன் பின்னே மறைந்திருக்கின்றன என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறேன். இது, சரித்திரத்தை மாற்றக்கூடிய வல்லமை படைத்த பாதயாத்திரை என்றால், அதை ஒற்றை மனிதனாக சாதிக்கவில்லை.
பா.ஜ., மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட, ஒரு திறமையான குழு இந்த பயணத்தை வெற்றிப் பயணமாக, சரித்திர சாதனையாக, எவரும் செய்யாத தொடர் முயற்சியாக, வெற்றிகரமாக செய்து காட்டி இருக்கிறது.
ஒவ்வொரு தொகுதியிலும், அப்பகுதியின் பெரிய மனிதர்களை சந்திக்க முடியவில்லை. ஆனால், இந்த பயணம் முழுதும் சாமானியமக்களோடு பயணித்து இருக்கிறேன்
ஏழை எளிய மக்களோடு பழகி இருக்கிறேன்; விவசாய பெருமக்களின் வேதனைகளை உணர்ந்திருக்கிறேன்; சாலையோர வியாபாரிகளின் சங்கடங்களை சந்தித்திருக்கிறேன். மகளிர் படும் துன்பங்களை மனச்சுமையோடு கண்டிருக்கிறேன்; கேட்டிருக்கிறேன்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், பயன் கருதாத துாய்மையான அன்பை தரிசித்து இருக்கிறேன். எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு சிறப்பான வாய்ப்பு?
எந்தவிதமான சங்கடங்களுக்கும் இடம் தராமல், திறமையாக இந்த பாதயாத்திரையை வழிநடத்தி வந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு குழுவினருக்கும், அனைத்து மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளுக்கும் என் அன்பை காணிக்கையாக்குகிறேன்.
பல வழிகளில் தடை
இந்த பாதயாத்திரைக்கு மக்களிடமிருந்து இப்படியொரு 'ரியாக்ஷன்' இருக்கும் என அரசு தரப்பினரும், ஆளுங்கட்சியினரும் எதிர்பார்க்கவில்லை. அதனால், ஒரு கட்டத்துக்கு மேல் பாதயாத்திரையை தொடர்ந்து நடத்த விடக்கூடாது என திட்டம் போட்டு செயல்படத் துவங்கினர்.
ஆனாலும், உறுதியாக பாதயாத்திரை வாயிலாக திட்டமிட்டபடி மக்களை சந்தித்தே ஆவது என்ற உறுதியோடு, தொண்டர்கள் சகிதம் நடந்தேன்.
ஒரு கட்டத்துக்கு மேல், அவர்களால் பொறுக்க முடியவில்லை. சென்னையில் பாதயாத்திரைக்கு எப்படியாவது தடை ஏற்படுத்த வேண்டும் என, பல வழிகளிலும் திட்டமிட்டனர்.
சென்னையில் இந்த பாதயாத்திரை எப்படி நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோமோ, அதைச் செய்ய விடாமல், காவல் துறையின் துணை கொண்டு, மாநில அரசு எங்கள் பாதங்களை கட்டிப் போட்டு விட்டது.
சென்னையில் பொது மக்கள் வழங்கும் ஏகோபித்த ஆதரவு, தி.மு.க.,வின்வீழ்ச்சிக்கு வித்திட்டு விடுமோ என்ற அச்சத்தை என்னால் உணர முடிகிறது. இப்படி பாதயாத்திரையின் முக்கியத்துவத்தை குறைப்பதால், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறைந்தா போய் விடும்?
ஆனால், இப்படிப்பட்ட அடக்குமுறைகளை கண்டு, பா.ஜ., ஒருபோதும் அஞ்சாது என்பதை, எங்களின் துணிச்சல் வாயிலாக அரசுக்கும், தி.மு.க.,வுக்கும் காட்டுவோம்.
வீரியத்துடன் வேகமாக வெளிப்படுவோம். தாமரையின் மலர்ச்சியையும், வளர்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது.
பயணம் தொடரும்...