தொண்டர்களே வேட்பாளரை பரிந்துரைப்பர்; புதிய முயற்சியில் பா.ஜ.,!
தொண்டர்களே வேட்பாளரை பரிந்துரைப்பர்; புதிய முயற்சியில் பா.ஜ.,!
ADDED : செப் 17, 2024 04:07 AM

ராஞ்சி : ஹரியானா தேர்தல் வேட்பாளர் தேர்வில் பல அதிருப்திகளை சந்திக்க நேர்ந்தது, பா.ஜ., தலைமையை யோசிக்க வைத்துள்ளது. இதையடுத்து, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை கட்சித் தொண்டர்களையே பரிந்துரைக்க செய்யும் புதிய முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது.
ஹரியானா சட்டசபைக்கு அக்., 5ல் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பாளர்களை கட்சித் தலைமை அறிவித்தபோது, பல அதிருப்திகளை சந்திக்க நேர்ந்தது. போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், கட்சிக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர். பலர், சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளனர். கட்சி அறிவித்துள்ள சில வேட்பாளர்கள் குறித்து, கட்சியினரே அதிருப்தி தெரிவித்தனர்.
வெற்றி வாய்ப்பு
பா.ஜ.,வில் வழக்கமாக, வேட்பாளர்களை அந்தந்த மாநில பிரிவே பரிந்துரைக்கும். ஒவ்வொரு தொகுதிக்கும், மூன்று பேரை மாநிலப் பிரிவு பரிந்துரைக்கும். இதை, கட்சியின் உயர்நிலை குழு ஆய்வு செய்யும். வேட்பாளர்களின் பின்புலம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை அலசப்படும்.
அதைத் தொடர்ந்து, கட்சியின் மத்திய தேர்தல் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அந்தக் குழு, மூன்றில் ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்து அறிவிக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளே ஹரியானாலும் நடந்தது. ஆனால், அதிருப்தி அதிகளவு ஏற்பட்டது.
இதையடுத்து, இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில், வேட்பாளர் தேர்வில் புதிய முறையை பின்பற்ற பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. இதன்படி, கட்சியின் ஒவ்வொரு நிலையிலும் குழுக்கள் அமைக்கப்படும். அந்தக் குழுக்கள், கட்சித் தொண்டர்களிடம் இருந்து பரிந்துரைகளை பெறும். கட்சித் தொண்டர்கள், மூன்று பேரை வேட்பாளராக பரிந்துரைத்து, அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.
அதிருப்தி
இந்தத் தகவல்கள் திரட்டப்பட்டு, மாநில பிரிவுக்கு அனுப்பப்படும். பின், மத்திய தேர்தல் குழுவுக்கு அனுப்பப்படும். இதன் வாயிலாக, வேட்பாளர் மீதான அதிருப்தி எழுவதை தடுக்க முடியும் என்று கட்சித் தலைமை நம்புகிறது.
மேலும், தொண்டர்களே தேர்வு செய்வதால் மக்களிடம் நன்மதிப்பை பெற்றவருக்கு, அவர்களுடன் நல்ல தொடர்பில் இருப்பவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிப்பதாக இருக்கும். தாங்கள் பரிந்துரைத்தவரே வேட்பாளராக நிறுத்தப்படுவதால், அவருடைய வெற்றிக்காக தொண்டர்களும் முழு முயற்சியில் ஈடுபடுவர் என்று கட்சித் தலைமை கருதுகிறது.

