காத்திருந்த செங்கோட்டையன்; பேசாமல் தவிர்த்த இ.பி.எஸ்: விரிவடையும் விரிசல்
காத்திருந்த செங்கோட்டையன்; பேசாமல் தவிர்த்த இ.பி.எஸ்: விரிவடையும் விரிசல்
ADDED : மார் 11, 2025 06:19 AM

ஈரோடு : காணொலி கூட்டத்தில், 4:30 மணி நேரம் காத்திருந்த செங்கோட்டையனுடன், பழனிசாமி பேசாமல் தவிர்த்தது, இருவருக்குமிடையிலான விரிசலை மேலும் விரிவடைய செய்துள்ளதாக, கட்சியினர் பரபரப்பாக பேசுகின்றனர்.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க.,வில் உள்ள, 82 மாவட்ட செயலர்கள், அப்பகுதி தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற காணொலி காட்சி கூட்டம், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.
முன் தயாரிப்பு
இதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட செயலர் ராமலிங்கம் தலைமையில் ஈரோட்டிலும், புறநகர் கிழக்கு மாவட்ட செயலர் கருப்பணன் தலைமையில் பவானியிலும், புறநகர் மேற்கு மாவட்ட செயலர் செங்கோட்டையன் தலைமையில் கோபி அருகேயும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கோபி கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன் கூட்டியே வந்து விட்டார். கூட்ட அரங்கு அறையில் நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். பின், கூட்டம் துவங்கிய, காலை 10:00 மணி முதல், மதியம் 2:30 மணி வரை, மொத்தம் 4:30 மணி நேரம் வரை அரங்கிலேயே இருந்து காணொலி முன் பங்கேற்றார் செங்கோட்டையன்.
'பழனிசாமி தன்னைக் குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசினால், அதற்கு என்ன பதில் அளிக்க வேண்டும் என்ற முன் தயாரிப்புடன் செங்கோட்டையன் கூட்ட அரங்கில் இருந்ததாக கூறுகின்றனர்.
ஒருவேளை, செங்கோட்டையனிடம் பழனிசாமி இணக்கமாக பேசினால், இருவருக்கும் இடையே உள்ள பனிப்போர் நீங்கி, பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விடும் என்ற நம்பிக்கை யும் செங்கோட்டையன் ஆதரவாளர்களிடம் இருந்துள்ளது.
முடியும்போது நன்றி
கூட்டத்தில் செங்கோட்டையனிடம் பேசாத பழனிசாமி முடியும் போது மட்டும் 'ஈரோடு புறநகர் மாவட்ட செயலர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோருக்கும் நன்றி' எனக் கூறி, கூட்டத்தை முடித்து விட்டார்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் மாலை முதல், உள்ளூர் நிர்வாகிகளும், கோபியைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் இருந்து ஆதரவாளர்களும், செங்கோட்டையன் வீட்டுக்கு வந்து பேசி செல்கின்றனர்.
இதனால், பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் ஆகியோருக்கு இடையிலான விரிசல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.