ADDED : மே 03, 2025 01:10 AM

அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை ஏற்க மறுத்ததால், அக்கட்சியில் இருந்து வெளியேறும் நிலைக்கு பன்னீர்செல்வம் தள்ளப்பட்டார்.
வலியுத்தல்
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு உருவாக்கி, சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி கடந்த ஏப்ரல் 11ல் உருவானது. 'தி.மு.க.,வை வீழ்த்த, அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும்.
'சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் அல்லது அவர்களை கூட்டணியில் சேர்க்க வேண்டும்' என பழனிசாமி யிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி வந்தார்.
இரண்டையும் ஏற்க, பழனிசாமி உறுதியாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் தான், கூட்டணி அறிவிப்புக்காக சென்னை வந்த அமித் ஷாவை சந்திக்க, பன்னீர்செல்வம், தினகரனுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பன்னீர்செல்வம், தினகரனை விட அ.தி.மு.க., கூட்டணியே முக்கியம் என அமித் ஷா முடிவெடுத்து விட்டதாகவும், அ.தி.மு.க., உள்விவகாரத்தில் ஒரு எல்லையை மீறி தலையிட முடியாது என அவர் கைவிரித்து விட்டதாகவும், தமிழக பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
அடுத்து என்ன?
இதனால், பா.ஜ.,வை நம்பியிருந்த பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர், அடுத்து என்ன முடிவெடுக்கப் போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில், தன் ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்து வைத்திருக்கும் எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க., என்ற கட்சியை தனதாக்கி, அக்கட்சி வாயிலாக அரசியல் செய்ய வேண்டும் என பன்னீர்செல்வத்தை, அவருடைய ஆதரவாளர்கள் வலியுறுத்தி வரும் தகவல் வெளியாகி இருக்கிறது.
-- நமது நிருபர் -