தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை: கவர்னர் ரவி குற்றச்சாட்டு
தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை: கவர்னர் ரவி குற்றச்சாட்டு
ADDED : ஏப் 15, 2025 04:15 AM

சென்னை: “தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தலித் பெண்களை பலாத்காரம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை வீதம், தமிழகத்தில் நாட்டின் சராசரியை விட பாதியாக உள்ளது,” என கவர்னர் ரவி தெரிவித்தார்.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள அவரது சிலைக்கு, கவர்னர் ரவி மலர் துாவி மரியாதை செலுத்தினார். மாலை அங்கு நடந்த விழாவில், அவர் பேசியதாவது:
அம்பேத்கர் பேச்சை கேட்டாலே, இன்றும் தனி உத்வேகம் பிறக்கும். தன் வாழ்வை நாட்டுக்காகவே அர்ப்பணித்தார். அப்படிப்பட்டவரையே மக்கள் தோற்கடித்து விட்டனர். அவர் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய பின் அவமானப்படுத்தப்பட்டார்.
பார்லிமென்ட் உள்ளே அவரை அனுமதிக்காமல் தடுத்தனர். அரசியலமைப்பை எழுதியவருக்கே அந்த கதி. தன்னால் பதில் அளிக்க முடியாமல் போகும் என்பதால், நாட்டின் முதல் பிரதமர் அம்பேத்கரை வெறுத்தார்.
சமூகத்தில் ஒதுக்கப்பட்டோரை, நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற அம்பேத்கரின் எண்ணம், இன்னமும் நிறைவேறவில்லை. தேர்தலுக்கான ஓட்டு வங்கியாக மட்டுமே, அம்பேத்கரை பயன்படுத்துகின்றனர்.
தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள், நாடு முழுதும் நடக்கின்றன. அவை இல்லை என சொல்லவில்லை.
ஆனால், தமிழகத்தில் சமூக நீதி குறித்து பேசுகின்றனர். காலணியுடன் நடந்து சென்ற தலித் நபரை துன்புறுத்துவது; பைக் ஓட்டினால் அச்சுறுத்துவது; பள்ளியில் சிறப்பாக படிக்கும், தலித் மாணவர்களை துன்புறுத்துவது; குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது போன்ற சம்பவங்கள், தமிழகத்தில் மட்டும் தான் நடக்கின்றன.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த 66 பேரும் தலித் மக்கள் தான். இதற்கு யார் பொறுப்பு? தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், 1,800 வழக்குகள் பதிவாகி உள்ளன. தலித் பெண்களை பலாத்காரம் செய்தவர்களுக்கான தண்டனை வீதம், நாட்டின் சராசரியை விட தமிழகத்தில் பாதியாக உள்ளது. எப்போது இந்த நிலை மாறும்; சமூக நீதி எப்போது கிடைக்கும்.
தலித் மாணவர்கள் அதிகம் பேர், இன்றும் அரசு பள்ளிகளில்தான் படிக்கின்றனர். தமிழகத்தில் கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
திறமை மற்றும் கல்வி இல்லாமல், இந்த 1,000 ரூபாய் எவ்வளவு நாட்களுக்கு உதவும்? தனியார் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. அரசு பள்ளிகள் நாடு முழுதும் சிறப்பாக செயல்படவில்லை. இதில், பாதிக்கப்படுவது தலித் மாணவர்கள். அவர்கள் படித்து பட்டம் வாங்கினாலும், அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. மாதம் 1,000 மற்றும் 500 ரூபாய் தருவதை விட, அவர்களின் கல்வி சிறக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பறையர் பேரியக்கம் தலைவர் சிவகுரு பறையனார், ஆலோசகர் ரகுராம் சர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.