'10:00 மணிக்கு கடையை சாத்திட்டாங்க சார்!' டாஸ்மாக் முன் 'செல்பி' எடுக்கும் போலீஸ்
'10:00 மணிக்கு கடையை சாத்திட்டாங்க சார்!' டாஸ்மாக் முன் 'செல்பி' எடுக்கும் போலீஸ்
UPDATED : அக் 24, 2024 04:11 AM
ADDED : அக் 23, 2024 11:05 PM

சென்னை:'ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு குறித்த நேரத்திற்கு செல்வது இல்லை. ரோந்து பணிக்கு மட்டம் போட்டு விடுகின்றனர்' என, புகார் எழுந்துள்ளதால், பணியிடத்தில் சீருடையுடன், 'செல்பி' எடுத்து, உயர் அதிகாரிக்கு அனுப்பி வைக்கும் நடைமுறையை போலீசார் பின்பற்றுகின்றனர்.
ஆண் போலீசார் காலை, 7:00 மணிக்கு, பெண் போலீசார், 8:00 மணிக்கும் பணிக்கு வர வேண்டும். அவர்களுக்கு காவல் நிலையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 'ரோல் கால்' நடத்தி, ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
அவர்கள் குறித்த நேரத்தில், அந்த இடங்களுக்கு செல்வது இல்லை. சொந்த வேலை காரணமாக, காலதாமதமாக செல்வதாகக் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு
போலீசாரை கண்காணிக்க வேண்டிய இன்ஸ்பெக்டர், உதவி, துணை கமிஷனர்கள், 'ரவுண்ட்ஸ்' வரும்போது, சக போலீசார், 'அலெர்ட்' செய்து விடுகின்றனர். இதனால், குறித்த நேரத்தில் பணிக்கு சென்று விட்டது போல விறைப்பாக நின்று, 'சல்யூட்' அடித்து விடுகின்றனர்.
இத்தகைய போலீசாரை விட, ரோந்து போலீசாரின் மாயாவித்தனங்கள் ஏராளம். மர நிழலில், அவர்களுக்கு தரப்பட்ட வாகனங்களில், ஒளிரும் விளக்குகள் மட்டும் எரியும். ஆட்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியாது.
ரோந்து போலீசார், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 'பீட்' எனப்படும் இடங்களில் கடிகார முட்கள் போல வலம் வர வேண்டும். ஏ.டி.எம்., மையங்கள், பூட்டி கிடக்கும் வீடுகள், முதியோர் வசிக்கும் வீடுகளை கண்காணிக்க வேண்டும். ஆனால், அவர்கள் ரோந்து பணிக்கு மட்டம் போட்டு விடுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல, டாஸ்மாக் கடைகள், மதியம், 12:00 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு, 10:00 மணிக்கு மூடப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேணடும். ஆனால், 'கவனிப்பு' காரணமாக, இத்தகைய கண்காணிப்பு பணி சரிவர நடப்பது இல்லை
சட்டம் - ஒழுங்கு பிரச்னை
இதனால், போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு குறித்த நேரத்திற்கு சென்று, விளம்பர பலகை தெரியும்படி, சீருடையுடன் 'செல்பி' எடுத்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாநிலம் முழுதும் போலீசார், தங்களுக்கு உரிய, 'வாட்ஸாப்' குழுக்களில், பணியிடத்தில் இருந்து, 'செல்பி' எடுத்து அனுப்பி வைக்கின்றனர்.
ரோந்து போலீசார், டாஸ்மாக் கடைகள் முன் நின்று, 'சார், சரியா 10:00 மணிக்கெல்லாம் மூடிட்டாங்க...' என, 'வாய்ஸ்' கொடுத்து, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில், 'செல்பி' எடுத்து அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து, உயர் அதிகாரிகள் கூறுகையில், 'போலீசாரை கண்காணிப்பதில் இதுவும் ஒரு வகை. இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல், குற்றங்களை தடுக்கவும் முடியும்' என்றனர்.