ADDED : ஜன 28, 2024 03:19 AM

ஜனவரி 22ம் தேதி ராமர் பிறந்த இடமான அயோத்தியில், அவருக்கென பிரமாண்டமான கோவில் திறக்கப்பட்டுவிட்டது. அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டியே தீருவோம் என, பல வருடங்களாக பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் இருந்த ஒரு விஷயம், இப்போது நிறைவேற்றப்பட்டு விட்டது. சரி ராமர் கோவில்தான் கட்டியாகிவிட்டது...
இனிமேல் அடுத்தது பா.ஜ.,வின் இலக்கு என்ன? அதற்கு முன்பாக அயோத்திக்கும் காங்கிரசுக்கும் உள்ள தொடர்புகளைப் பார்க்கலாம்.
தேர்தல் பிரசாரம்
பாபர் மசூதி- - ராம் ஜென்ம பூமி இருந்த இடம், இந்து - -முஸ்லிம்களுக்கிடையே எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதற்காக பூட்டப்பட்டிருந்தது. இந்த இடத்தில் ராமரின் சிலை வைக்கப்பட்டிருந்தது.
கடந்த, 1986 பிப்ரவரி மாதம் இந்த பூட்டைத் திறக்க வழி செய்தது, அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ். ராஜிவ் தான் பிரதமர்.
மசூதியின் பூட்டைத் திறக்க எந்த ஒரு நீதிமன்றமும் தடை விதித்திருக்கவில்லை என்பதை காரணம் காட்டி, பூட்டைத் திறக்க வழி செய்தார் ராஜிவ். விளைவு,- ஹிந்துக்கள் உள்ளே சென்று ராம் லல்லாவை தரிசனம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
அயோத்தி- பைடாபாத்திலிருந்துதான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் ராஜிவ். தான் ஆட்சிக்கு வந்தால் ராம ராஜ்ஜியத்தைக் கொண்டு வருவதாக உறுதியளித்தார். ஆனால் துரதிருஷ்ட வசமாக, 1991 மே மாதம் ஸ்ரீபெரும்புதுாரில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்.
'பூட்டை திறந்தது ராஜிவ் அல்ல. அவருக்கு இந்த விஷயமே தெரியாது; இதற்கு காரணம் ராஜிவுக்கு நெருக்கமாக இருந்த அருண் நேரு தான்' என, இப்போது சப்பை கட்டு கட்டுகிறார் மணி சங்கர அய்யர்.
சிறுபான்மையினர் அரசியல்
சிறுபான்மையினரை தாஜா செய்து அவர்களது வாக்குகளை அள்ளும் பணியை, பாரதத்தின் முதல் பிரதமர் நேருதான் தொடங்கி வைத்தார். மதச்சார்பின்மை என சொன்னவர், எந்த ஒரு மதத்திற்கும் முக்கியத்துவம் கிடையாது என்றார். ஆனால் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
காஷ்மீருக்கு 370 சட்டம் மூலமாக சிறப்பு அந்தஸ்து கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்தினார் நேரு.
கடந்த, 2014 பார்லிமென்ட் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ். தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை கொடுத்தார் சீனியர் தலைவர் ஏ.கே. அந்தோணி.
'சிறுபான்மையினருக்கு ஆதரவாக மட்டுமே காங்., செயல்படுகிறது என ஒரு எண்ணம் மக்களிடையே உள்ளது; அதை மாற்ற வேண்டும்' என அறிக்கையில் சொல்லியிருந்தார் அந்தோணி. ஆனால் சோனியா உட்பட யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. விளைவு-, 2019 தேர்தலில், வட மாநிலங்களில், காங்., காணாமலே போனது.
சிறுபான்மையினரை வைத்துதான் கர்நாடகா, தெலுங்கானாவில் ஆட்சி அமைத்தோம் என காங்கிரஸ் சொல்லலாம். ஆனால் அயோத்தி ராமர் கோவிலுக்கு பின் இது எடுபடுமா என்பது சந்தேகமே.
வட மாநில கடவுளா?
தமிழகத்தில் சிலர் இப்படித்தான் சொல்லிக் கொண்டு திரிகின்றனர். கடவுளுக்கு ஏது, வடக்கு தெற்கு பிரச்னை?
தென்னகத்தில் ராமர் வழிபாடு இருந்தாலும் அதிக அளவில் இல்லை என்பது உண்மை. ஆனால் வடக்கில் ராமர்தான் பிரசித்தம். இங்குள்ள கிராமங்களில் காலையில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, 'நமஸ்தே'விற்கு பதிலாக, 'ராம் ராம்' என்று தான் சொல்வர்.
ஆனால் தென் பாரதத்தில் ராமர் பாதம் பட்ட இடங்கள் பல உள்ளன. இவை அனைத்திற்கும் சென்று வந்தார் மோடி. அத்தோடு வேறொரு விஷயத்தையும் செய்துள்ளார்.
வட மாநிலங்களில், பளிங்கு சிலையாக தான் விக்ரகங்கள் காணப்படும். ஆனால் தென்னகத்தில் சிற்ப வேலைப்பாடுகளோடு கற்சிற்பங்களாக கருவறைக்குள் கடவுள் சிலைகள் இருக்கும்.
அயோத்தி கோவிலுக்கு சிலை, தென்னகத்திலிருந்து வர வேண்டும் என அயோத்தி டிரஸ்ட் முடிவெடுத்தாலும், அதன் பின்னணியில் இருந்தவர் பிரதமர் மோடி. வட இந்தியாவின் பிரசித்தி பெற்ற கோவில்களில் தென்னிந்தியாவிலிருந்து சிலைகள் வைத்ததே கிடையாது. அயோத்தி மட்டும் விதிவிலக்காக உள்ளது.
கருவறையில் வைக்க, மூன்று சிலைகள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில் இரண்டு, வட மாநிலங்களில் செய்யப்பட்டவை; ஒன்று, மைசூரிலிருந்து.
அயோத்தி மூலமாக தென்னகத்தில் ராமர் பாதம் பட்ட இடங்களை பிரபலப்படுத்துவதோடு, வட, தென் பாரதத்தை கலாசாரம் மூலமாக ஒன்றிணைக்க, அயோத்திக்கான பால ராமர் சிலை தென்னிந்தியாவில் செய்யப்பட வேண்டும் என விரும்பி, அதை நிறைவேற்றியும் உள்ளார் மோடி என்கின்றனர் பா.ஜ.,வின் சீனியர் தலைவர்கள்.
ராம ராஜ்ஜியம்
ராமர் சிலை ஸ்தாபித்த பின் மோடி ஆற்றிய உரை, மிகவும் முக்கியமானது. ஆன்மிகத்தை தொட்டே மோடியின் உரை இருந்தது. அரசியல் எதுவும் கலக்கவில்லை என்றாலும், ஒரு விஷயத்தை பிரதமர் தெளிவுபடுத்திவிட்டார்.
ராம் என்றால் பிரிவினை அல்ல; அது அனைவரையும் இணைக்கும் சக்தி என்று சொன்னார். அதே சமயம் பாரதம் இந்துக்களின் ராஜ்ஜியம் என்பதை, மறைமுகமாக தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோவிலை வைத்து அரசியல் செய்து வரும் எதிர்க்கட்சிகளுக்கு, இனிமேல் பாரதத்தில் ராம ராஜ்ஜியம்தான், என தன் உரையில் பதில் சொல்லிவிட்டார் பிரதமர்.
அதென்ன ராம ராஜ்ஜியம்? நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது, ஏழைகளுக்கு உதவும் திட்டங்களை அமல்படுத்துவது, நல்லாட்சி வழங்குவது, ஊழலை ஒழிப்பது, வெளிநாட்டு உதவியை நாடாமல் தன் காலில் நிற்பது... இதுதான் ராம ராஜ்ஜியம்!
நடக்கவிருக்கும் பார்லிமென்ட் தேர்தலில், ராம ராஜ்ஜியம்தான் பா.ஜ.,வின் பிரசார கோஷமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் நிலை?
அயோத்தி ஒரு அரசியல் நிகழ்வு என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. கோவில் கும்பாபிஷேகத்திற்கு வர மாட்டோம் என காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் சொன்னாலும், உத்தர பிரதேசத்தில் உள்ள காங்கிரசார் பலர், ராமர் சிலை பிரதிஷ்டையை வரவேற்றுள்ளதோடு, கோவிலுக்கும் சென்றுள்ளனர்.
காரணம், வட மாநிலத்தில், ராமர் என்பது எவ்வளவு முக்கியம் என்பது, அனைத்து கட்சியினருக்கும் தெரியும். ராமர் கோவிலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பேச பேச, அது பா.ஜ.,விற்குத்தான் சாதகமாக இருக்கும்.
கோவில் விழாவில் மோடி அரசியல் பேசவில்லை என்றாலும், தேர்தல் பிரசாரத்தில் ராமர் குறித்து எதிர்க்கட்சிகள் சொன்னதை நிச்சயம் குறிப்பிட்டு, அயோத்தி விவகாரத்தை முக்கிய விவாதப் பொருளாக்கி விடுவார். எப்போது எதைப் பேச வேண்டும் என்பதை நன்கு தெரிந்தவர் மோடி.
பா.ஜ., வெற்றி பெறுமா?
பார்லிமென்ட் தேர்தலில் அயோத்தி ராமர் கோவில் பா.ஜ.,வின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்குமா? வட மாநிலத்தைப் பொறுத்தவரை, பா.ஜ.,விற்கு லாபம் கிடைக்கலாம். இதற்கு முக்கிய காரணம் அயோத்திக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம்.
ராமர் கோவிலுக்குப் பின் மோடியின் கை ஓங்கிவிட்டது என்பதை, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் புரிந்து கொண்டார். 'இண்டியா' கூட்டணியோடு போட்டியிட்டால் எதுவும் கிடைக்காது என்பது ஒரு பக்கம்; இவருடைய கூட்டணியான லாலுவோடு சில பிரச்னைகள்.
இதையெல்லாம் மனதில் வைத்து, அணி மாற தயாராகிவிட்டார் நிதீஷ் குமார். தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள எந்த பக்கமும் போக தயாரானவர் நிதீஷ். இவருக்கு பல்டி குமார் என பட்டப் பெயரும் உண்டு.
தென் மாநிலங்களில், கர்நாடகா, பா.ஜ.,விற்கு சாதகமாக இருக்கலாம். தமிழகத்தில் அயோத்தி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தாக்கம், வாக்குகளாக மாறி பா.ஜ.,விற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்துமா என்பது சந்தேகம்தான்.
பா.ஜ.,வின் வாக்கு சதவீதம் அதிகரிக்க, ராமர் கோவிலும் அண்ணாமலையும் நிச்சயம் உதவுவர் என்பதில் சந்தேகமில்லை. கேரளாவிலும் பாதிப்பு இருக்காது. தெலுங்கானா, ஆந்திராவில் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வரும் லோக்சபா தேர்தலில், அயோத்தி ஒரு பிரசாரப் பொருளாகிவிடும் என்பது மட்டும் உண்மை!
அருணாசலம், வைத்தியநாதன், பத்திரிகையாளர்

