சிந்தனைக்களம்: கட்சி தாவலால் உருமாறும் பா.ஜ., கொள்கை
சிந்தனைக்களம்: கட்சி தாவலால் உருமாறும் பா.ஜ., கொள்கை
ADDED : ஏப் 01, 2026 03:04 AM

ராஜ்தீப் சர்தேசாய் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் நம் நாட்டு அரசியலில் ஆறு வாரம் என்பது மிக அதிகமான காலம். கடந்த பிப்., 10ல் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை, காங்., - எம்.பி., பிரத்யோத் போர்டோலோய் சமூக வலைதளத்தில் கடுமையாக சாடியிருந்தார். முஸ்லிம் போல உடையணிந்த நபரை, பிஸ்வ சர்மா துப்பாக்கியால் சுடுவது போன்ற சர்ச்சைக்குரிய வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியானதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவரது பதிவு இருந்தது.
'உங்களுக்கு வெட்கமாக இல்லையா, அசாமின் புகழ்பெற்ற சமூக கட்டமைப்பை ஒற்றை ஆளாக சேதப்படுத்திய ஒரு அரசியல்வாதியை, இதற்கு முன் நாங்கள் பார்த்தது இல்லை' என விமர்சித்து இருந்தார்.
அதே போர்டோலோய், மார்ச் 18ல், பா.ஜ.,வின் கட்சித் துண்டு அணிந்து வெட்கம் கலந்த புன்னகையுடன், முதல்வர் பிஸ்வ சர்மாவுக்கு அருகில் நின்று கொண்டிருந்தார்.
அசாம் மாநில பா.ஜ.,வில் பிரபலமான முகமாக மாறி இருக்கும் முதல்வர் சர்மா, ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். அதன் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியில் வளர்ந்தவர்.
ஆனால், கால மாற்றத்தில் தனக்கென தனி பாதையை உருவாக்கிக் கொண்டார். செல்லப் பிராணிக்கு அளிக்கும் பிஸ்கெட்டை கொடுத்து, ராகுல் தன்னை அவமானப்படுத்தியதால் தான், காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியதாக, காரணம் சொன்னார் சர்மா.
இந்த நாடகம் சிறப்பாக அரங்கேறினாலும், முதல்வர் வேட்பாளராக தானே அறிவிக்கப்பட வேண்டும் என்ற அவரது ஏக்கத்தை, மறைக்காமல் வெளிச்சம் போட்டுக்காட்டியது.
காங்கிரஸ் இல்லாத பாரதம்
அசாமில் பா.ஜ., வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர், ஒரு காலத்தில் காங்கிரஸின், 'கை' சின்னத்தில் போட்டியிட்டவர்கள். எனவே, இப்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' என்ற பேச்சு, காங்கிரஸ் நிறைந்த பா.ஜ., என்று உருமாறிவிட்டதா?
கடந்த 2024 பொதுத்தேர்தலில், பா.ஜ., அறிவித்த நுாற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், கட்சி மாறி வந்தவர்கள். முக்கியமாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள். கடந்த 10 ஆண்டுகளில், 200க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் மோடி தலைமையில் பா.ஜ.,வில் ஐக்கியமாகி உள்ளனர்.
அப்படி கட்சி மாறியவர்களில் காங்கிரசில் இருந்து வந்தவர்கள் மட்டும், 40 சதவீதம் பேர். இது ஒரு கட்சி வீழ்ச்சி அடைவதையும், மற்றொரு கட்சி எழுச்சி பெறுவதையும் காட்டுவது மட்டுமல்ல; அதையும் கடந்தது.
பா.ஜ., இப்போது காங்கிரஸை மட்டும் இடமாற்றம் செய்யவில்லை; பல வழிகளில் அதன் தலைவர்கள், அதன் வலைப்பின்னல்கள், அதன் சமூக வலைதளத்தின் சில பகுதிகளை கூட விட்டு வைக்காமல், தனக்கு ஏற்றபடி தகவமைத்துக் கொண்டுள்ளது.
ஒரு காலத்தில் காங்கிரஸ் தன்னை மதச்சார்பற்ற மற்றும் நடுநிலை கட்சியாக நிலைநிறுத்தியது. பா.ஜ., தனித்துவமான கலாசார வேருடன், தேசியவாத கட்சியாக முன் நின்றது. எனினும், இன்றைய அரசியல் குழப்பத்தில், இந்த எல்லைகள் வியக்கத்தக்க வகையில் நெகிழ்வு அடைந்து இருக்கின்றன.
பா.ஜ.,வின் ஹிந்துத்துவா கொள்கைக்கும், அரசியலுக்கும் எதிராக நின்ற தலைவர்கள், இப்போது அதற்கு ஆதரவு தருபவர்களாக மாறிவிட்டனர்.
'ஆதிக்க சக்தியுடன் இணைந்து இருங்கள்; அல்லது அரசியல் ரீதியாக வழக்கொழிந்து போகும் அபாயத்தை எதிர்கொள்ளுங்கள்' என்ற சூழல் தான் இன்றைய அரசியலில் நிலவுகிறது.
இந்திய அரசியலில் கோலோச்சிய காங்கிரஸ், முக்கிய மாநிலங்களில் தலைமையை தக்கவைக்கவும், வீழ்ச்சியை தடுக்கவுமே பெரும் போராட்டத்தை நடத்தும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால், கட்சித் தாவல் என்பது ஒரு துரோகம் என்பதை கடந்து, இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு கணக்காக இங்கே நியாயப்படுத்தப்படுகிறது.
தேர்தல் வெற்றிக்கு பின், ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர், மற்றொரு கட்சிக்கு தாவும்போது, மக்களின் தீர்ப்பு அவர்களது சம்மதம் இல்லாமலேயே மாற்றப்படுகிறது.
இருப்பினும், இது முற்றிலும் வாக்காளரின் கையறு நிலை பற்றிய கதை அல்ல. ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் கட்சி மாறியவர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்ட அதே வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அரசியலில் நிகழும் இந்த அலங்கோலங்களை தடுக்க சீர்திருத்தம் அவசியம். கட்சி மாறினால், எதிர்பார்க்கும் பதவி உடனடியாக கிடைக்காது என்ற விதி அமல்படுத்தப்பட்டால், கணக்குகள் எல்லாம் மாற ஆரம்பித்துவிடும்.
தன்னாட்சி அதிகாரம்
உதாரணமாக, கட்சி மாறுபவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு அமைச்சர் பதவி வகிக்க தடை விதிக்கும் விதி இருந்தால், கட்சி தாவலுக்கு பெரும் முட்டுக்கட்டை ஏற்படலாம். அதே நேரம், கட்சித் தாவல்களை முழுதாக ஒழிக்காது; எனினும் உடனடியாக கிடைக்கும் வெகுமதிகளை பறிக்கும்.
பிளவுகள் என்ற போர்வையில் கட்சித் தாவல்களை அனுமதிக்கும் ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும். தீர்ப்பு வழங்கும் அதிகாரம், அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
அதாவது கட்சி தாவும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை சபாநாயகரிடம் ஒப்படைக்காமல், ஒரு சுதந்திரமான, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பிடம் ஒப்படைக்கலாம்.
ஆனால், இறுதியில், எந்த சட்ட சீர்திருத்தமும் அரசியல் மறுமலர்ச்சிக்கு ஈடாகாது என்பது தான் நிதர்சனம். சிதறுண்ட எதிர்க்கட்சிகள், அமைப்பு ரீதியாக பலவீனமாக இருக்கும் வரை, கட்சித் தாவலுக்கான துாண்டுதல்கள் நிச்சயம் குறையாது. அரசியல் ரீதியாக பா.ஜ.,வின் எழுச்சி, சந்தேகத்துக்கு இடமின்றி, வெற்றி பெற்ற கதையாகவே இருக்கும்.
ஆனால், 'வித்தியாசமான கட்சி' என ஒரு காலத்தில் வலம் வந்த பா.ஜ.,வின் அந்த பெருமை, வெற்றி கதையில் நிச்சயம் இடம் பெறாது. மற்ற கட்சிகளை உறிஞ்சி வளர்ந்த கதையே, பிரதானமாக அதில் இடம் பிடித்து இருக்கும்.
பா.ஜ., இப்போது வலிமையான ஒரு தேர்தல் இயந்திரமாக உள்ளது. அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றை மிக வேகமாக அணுக விரும்புவோருக்கு, சரியான தேர்வாக, பா.ஜ., மாறி இருக்கிறது.
இந்த கட்டமைப்பில் ஜனநாயகம் என்பது ஒருவழிப் பாதையாக மாறும் அபாயம் இருக்கிறது. வாக்காளர்கள் விரும்பும் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் ஓட்டளிக்கின்றனர்.
ஆனால், அரசியல்வாதிகளோ, தாங்கள் விரும்பும் பதவியை தரும் கட்சிக்கு தாவுகின்றனர். இது மக்கள் அளித்த தீர்ப்பையே மாற்றுகிறது.
காற்றில் கரைந்த சத்தியம்!
கோவாவில் நடந்த கட்சித் தாவல், ஒட்டுமொத்த நாட்டையுமே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. 2022ல் சட்டசபை தேர்தல் நடந்தபோது, காங்கிரஸ் வேட்பாளர்கள், அவரவர் மத நம்பிக்கைக்கு ஏற்றபடி கோவில், சர்ச், மசூதி என வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று, 'வெற்றி பெற்றதும் கட்சி மாறமாட்டோம்' என சத்தியம் செய்திருந்தனர்.
ஆனால், தேர்தல் முடிந்ததும், அவர்களது சத்தியம் எல்லாம் நீரில் எழுதிய எழுத்து போல அழிந்து போனது. பெரும்பாலானவர்கள் காங்., வேட்பாளர்கள் பா.ஜ.,வுக்கு மாறினர்.
அவர்களில் ஒருவர், 'கடவுள் எங்களை மன்னிப்பார். ஏனெனில், மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்தின் பக்கத்தில் இருக்க வேண்டும். அதை கடவுளும் உணர்ந்திருப்பார்' என, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நியாயப்படுத்தினார்.
ராஜ்தீப் சர்தேசாய்
rajdeepsardesai52@gmail.com
