4 தொகுதிகள் அவசியம் 'உடும்புபிடி' காட்டுகிறார் திருமா
4 தொகுதிகள் அவசியம் 'உடும்புபிடி' காட்டுகிறார் திருமா
UPDATED : பிப் 20, 2024 03:57 AM
ADDED : பிப் 20, 2024 01:48 AM

''பொதுத் தொகுதிகளை கேட்பது எங்களுக்கு புதிது அல்ல. தி.மு.க., கூட்டணியில் நான்கு தொகுதிகளை வேண்டுமென்பது எங்களது ஆசை மற்றும் நோக்கம்.சொந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதில் ஒருபோதும் மாற்றமில்லை,'' என்று விடுதலை, சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
டில்லியில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியாவது:
தமிழக பட்ஜெட்டில் எட்டு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. ஒரு வீட்டிற்கான மதிப்பீட்டு தொகையான, 3.5 லட்ச ரூபாய் என்பதை, 5 லட்ச ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்.
நவீன கட்டமைப்புடன், பிரமாண்டமாக கிளாம்பாக்கம் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அங்கே சிறு சிறு குறைகள் இருந்தாலும், அவற்றுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்தியதற்கும், தி.மு.க.,விடம் தொகுதிகள் கேட்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்த மாநாட்டை நடத்தவில்லை என்றாலும், நான்கு தொகுதிகளை கேட்டிருப்போம். பொதுத் தொகுதிகளை நாங்கள் கேட்பது ஒன்றும் புதிது அல்ல.
மூன்று தனித் தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத் தொகுதி என்பது எங்களது ஆசை.
நான்கு தொகுதிகளில் போட்டியிடுவதான் எங்களது நோக்கம். சட்டசபை தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டு ஏற்கனவே நான்கு பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
எனவே சொந்த சின்னம் என்பதில் உறுதியாக உள்ளோம். அதில் துளி கூட ஊசலாட்டம் கிடையாது.
ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதற்காக, வரும் 23ல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
எங்கள் கட்சியில் ஆதவ் அர்ஜுனாவுக்கு பதவி தரப்பட்டுள்ளது குறித்து பரப்பப்படும் அவதுாறுகள் காலப்போக்கில் காணாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

