கவனமுடன் செயல்பட வேண்டும்: த.வெ.க.,வுக்கு திருமா 'அட்வைஸ்'
கவனமுடன் செயல்பட வேண்டும்: த.வெ.க.,வுக்கு திருமா 'அட்வைஸ்'
ADDED : மே 27, 2026 05:23 AM

கோவை: ''பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரும் அ.தி.மு.க.,வினரை, தமிழக வெற்றிக் கழகம் சேர்த்து கொள்ளக் கூடாது. இது த.வெ.க.,வின் நம்பகத்தன்மையை பாதிப்படையச் செய்யும்,'' என, வி.சி.க., தலைவர் திருமாவளவன் அறிவுரை கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையவும், ஜனாதிபதி ஆட்சி வருவதை தடுக்கவும் இடதுசாரிகளோடு இணைந்து த.வெ.க.,விற்கு ஆதரவு அளித்தோம்.
அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என த.வெ.க.,வின் அழைப்பை ஏற்று, அமைச்சரவையில் இடம்பெற்றோம். எந்த சூழ்நிலையிலும் த.வெ.க., ஆட்சி கவிழ இடம் தர மாட்டோம்.
பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்திருந்தால், அ.தி.மு.க.,வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க த.வெ.க.,வினர் முயன்று இருப்பர்.
காங்கிரசையும், இடதுசாரிகளையும் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க., - பா.ஜ., உறவே காரணம். இதனால் தான் அ.தி.மு.க.,வும் நெருக்கடி நிலையை சந்திக்கிறது.
அ.தி.மு.க.,வினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்தாலும், அவர்களை த.வெ.க., சேர்த்துக் கொள்ளக் கூடாது; ஊக்கமளிக்கக்கூடாது.
இது த.வெ.க.,வின் நம்பகத்தன்மையை பாதிக்கும். இனி கவனமாக இருக்க வேண்டும். அ.தி.மு.க.,வில் இருந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.,விற்கு வருவது அரசியலுக்கு உகந்ததல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
