ADDED : அக் 15, 2025 04:33 AM

சென்னை : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தார்.
அவர் அளித்த பேட்டி:
சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு, ஜாதி பெயர்களை நீக்க வேண்டும் என, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை முறைப்படி நடைமுறைப்படுத்துமாறு முதல்வரை சந்தித்து வலியுறுத்தினோம்.
கடந்த காலங்களில் சில தலைவர்களின் பெயருடன், ஜாதி பெயரும் நிலைப்பெற்று விட்டது. அதனாலேயே , அந்த தலைவர்கள் ஜாதி பார்த்தனர் என கூற முடியாது. உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர், மா. கம்யூ., மூத்த தலைவரான நம்பூதிரிபாட் ஆகியோர், ஜாதி ஒழிய வேண்டும் என குரல் கொடுத்தனர்.
ஈ.வெ.ராமசாமி, ராமசாமி நாயக்கர் என அறியப்பட்டார்; திரு.வி.க., முதலியார் என அழைக்கப்பட்டார்; வ.உ.சிதம்பரம் பிள்ளை என இப்போது போடுவது இல்லை. வ.உ.சி., என நிலைப்பெற்று விட்டது.
எனவே, கோவை அவினாசி மேம்பாலத்திற்கு, ஜி.டி.நாயுடு பெயருக்கு பதிலாக, ஜி.டி., என்ற இனிஷியலுடன் அவரது புகைப்படத்தை போடலாம். ஜி.டி.நாயுடு என பெயரை அடையாளப்படுத்துவது, ஜாதியை வளர்ப்பதற்காக இருக்காது என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.