தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தி.மு.க.,வை திட்டித் தீர்க்கும் திருமாவளவன்!

தி.மு.க.,வை திட்டித் தீர்க்கும் திருமாவளவன்!

தி.மு.க.,வை திட்டித் தீர்க்கும் திருமாவளவன்!

18


UPDATED : செப் 12, 2026 06:18 AM

ADDED : செப் 12, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

18

UPDATED : செப் 12, 2026 06:18 AM ADDED : செப் 12, 2026 06:16 AM


18
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி: ''சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., கூட்டணியில் இருந்த கட்சிகள் வெளியேற, தி.மு.க.,வே காரணம். நல்லிணக்க நட்பை தக்கவைக்கும் ஆற்றல் இல்லாததால், அந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் வெளியேறின,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க.,வை கடுமையாக தாக்கி பேசினார்.

தர்மபுரியில், வி.சி.க., தலைமை நிலைய செயலர் தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. விழாவில், திருமாவளவன் பேசியதாவது:

கருணாநிதி தலைமையிலான, தி.மு.க., ஆட்சிக் காலத்தில், பா.ம.க.,வின் ஜி.கே.மணி வாயிலாக, 'வி.சி.க., மக்கள் விரோத சக்தி' என்று குற்றஞ்சாட்டினர். 1999-ல் என்னை தேர்தல் அரசியலுக்கு மூப்பனார் கொண்டு வந்தார்.

பிரசாரம்


அதன்பின், தி.மு.க., - அ.தி.மு.க., என, சூழலுக்கு ஏற்ப கூட்டணியில் இடம் பெற்றோம். நான் யாரிடமும் சென்று, எங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்கவில்லை. எங்கள் கட்சியில் இருந்த ஆதவ் அர்ஜுனா, 2026 சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக என்னை முன்னிலைப்படுத்தி, பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

அப்படியொரு முடிவை நான் எடுத்திருந்தால், அ.தி.மு.க., - -பா.ஜ., கூட்டணி வலுவடைந்திருக்கும். தி.மு.க., கூட்டணி உடைந்து விடக்கூடாது என்பதால், அதற்கு நான் இடம் தரவில்லை.

கூட்டணி கட்சிகள் இடையே நல்லுறவை பாதுகாக்கும் பொறுப்பு, கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிக்கு தான் உள்ளது. காங்., - -தி.மு.க., உறவு ஏன் கசந்தது; கம்யூனிஸ்டுகள் மற்றும் 70 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த முஸ்லிம் லீக் கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியேறின.

ம.தி.மு.க.,-வை சொந்த சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கவில்லை; கமலுக்கு, 'சீட்' ஒதுக்கவில்லை. ஆனால், திடீரென கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க.,-வுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மற்ற கட்சிகளுக்கு, ஏற்கனவே கொடுக்கப்பட்ட தொகுதிகளை விட குறைவாக கொடுக்கப்பட்டன.

இவை, பல ஆண்டுகளாக, கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்கு எப்படி மகிழ்ச்சி தரும்? இவற்றைப் பற்றி யாரும் பேசவில்லை. கூட்டணியில் இருந்து, கட்சிகள் வெளியேறியதற்கு, தி.மு.க., தான் காரணம். அதேபோல, தி.மு.க., தான் எங்களை கைவிட்டது; நாங்கள் வெளியேறவில்லை.

தேர்தலில் வெற்றி, தோல்விகளை விட நல்லிணக்க நட்பு தான் அரசியலில் முக்கியம். அனைத்து கதவுகளையும் திறந்து வைத்து விட்டு, ஆடுகளை காணவில்லை என்று கூறுவது, உங்களுக்கு ஆற்றல் இல்லை என்பது தான் அர்த்தம். தேர்தல் சமயத்தில் புதிய கட்சியான த.வெ.க.,-வை, தி.மு.க.,வினர் குறைத்து மதிப்பிட்டனர்.

கரூர் சம்பவத்தில் 42 உயிர்கள் பலியான போது, த.வெ.க., தலைவர் விஜய் மீது வழக்கு தொடுக்குமாறு, நான் வலியுறுத்தினேன்; அதை, தி.மு.க., கேட்கவில்லை; வழக்கு நட வடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க.,வை விஜய் நேரடியாக தாக்கி பேசிய போது, 'ஆர்.எஸ்.எஸ்., வளர்ப்பு பிள்ளை விஜய்' என, நான் தான் விமர்சித்தேன்.

வலிமை பெறும்


அவர் தேர்தலில் அதிக இடங்களில் வென்ற பின், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., போன்ற கட்சிகளின் ஆதரவை நாடாமல், காங்., இடதுசாரிகளை அவர் உள்வாங்கிக் கொண்டார். எனவே, அங்கே தான், வி.சி.க., இருக்க வேண்டுமென முடிவெடுத்தோம்.

தேர்தலுக்கு பின் எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்த போது வாழ்த்தியவர்கள், இன்று பதவிக்காக நாங்கள் கூட்டணி மாறிவிட்டோம் என்று அவதுாறு பேசி, துரோகி பட்டம் கட்டுவதுடன், வன்மத்தை பரப்புகின்றனர் .

நான் திரை கதாநாயகனும் இல்லை; எங்களுக்கு முட்டுக் கொடுக்கவும் ஆள் இல்லை. விஜய் தலைமையிலான கூட்டணி, கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் உருவாகி இருக்கிறது. இனி தமிழக அரசியலில், வி.சி.க., இடம்பெறும் கூட்டணி வலிமை பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னணி என்ன?


த.வெ.க., கூட்டணியில் சேர்ந்து, அமைச்சரவையிலும் இடம் பெற்ற பின்னர், தி.மு.க.,வைப் பற்றி அதிகமாக விமர்சிப்பதை, திருமாவளவன் தவிர்த்து வந்தார். சமீபத்தில் கூட, 'மிசா' கைது விவகாரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை தாக்கி, சட்டசபையில் முதல்வர் விஜய் பேசினார். அந்த சர்ச்சையில் கூட, விஜய்க்கு எதிராகவே திருமாவளவன் பேசினார். அதை, த.வெ.க., தலைமை ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த தகவல், திருமாவளவனுக்கும் சொல்லப்பட்டு உள்ளது.
இச்சூழலில், திடீரென மீண்டும் தி.மு.க.,வை விமர்சிக்கும் விதமாக, இந்த நிகழ்ச்சியில், வி.சி., பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி பேசினார். ''கூட்டணி மாறியதால் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை; எங்கள் கொள்கையை மாற்றாததால், நாங்கள் கூட்டணி மாறினோம்,'' என, அவர் பேசினார்.
அதை மையமாக வைத்தே, திருமாவளவன் தி.மு.க.,வை மீண்டும் மிக கடுமையாக தாக்கிப் பேசினார்.



திமுக - தவெக மனநிலையால் வி.சி.க.,வினர் இடையே பிரிவினை


வி.சி.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள், தி.மு.க., - த.வெ.க., ஆதரவு என, இரண்டு பிரிவுகளாக இருப்பதால், திருமாவளவன் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில், 10 ஆண்டுகளாக நீடித்து வந்த வி.சி.க., சட்டசபை தேர்தலுக்கு பின், த.வெ.க., கூட்டணியில் சேர்ந்தது; தமிழக அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது.
தி.மு.க., கூட்டணியில் இருந்து வி.சி.க., வெளியேறியதை, அக்கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் ஏற்கவில்லை. அவர்கள் தி.மு.க., ஆதரவு நிலையிலும், மற்றொரு பிரிவினர் த.வெ.க., ஆதரவு மன நிலையிலும் உள்ளனர். கட்சி நிர்வாகிகள், இரண்டு பிரிவுகளாக பிரிந்திருப்பது, கட்சி தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, வி.சி.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: வி.சி.க.,வில், தற்போது பாலாஜி, வன்னிஅரசு என, குறிப்பிட்ட சிலர் மட்டுமே, திருமாவளவனுடன் முன்னர் போல நெருக்கமாக உள்ளனர்; மற்றவர்கள் பெயரளவுக்கு வந்து செல்கின்றனர். இருவேறு நிலைப்பாடுகளால், கட்சியில் ஒருங்கிணைப்பு இல்லாத சூழல் உள்ளது. தாட்கோ வாரிய தலைவர் பதவியை, வி.சி.க.,வுக்கு கொடுக்க த.வெ.க., முன்வந்துள்ளது. ஆனால், கட்சியினர் இரண்டு பிரிவாக இருப்பதால், ஒருவருக்கு கொடுப்பதை, மற்றொரு தரப்பினர் எதிர்க்கின்றனர். இதனால், வாரிய தலைவர் பதவியை ஏற்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் திருமாவளவன் இருக்கிறார்.
கட்சிக்குள் நிலவும் பிரிவினையை முடிவுக்கு கொண்டு வர, தி.மு.க.,வை கடுமையாக எதிர்க்க, திருமாவளவன் முடிவு செய்துள்ளார். இனி வரும் காலங்களில், திருமாவளவனின் பேச்சு, தி.மு.க.,வுக்கு எதிராகவே இருக்கும். இதன் வழியே, கட்சிக்குள் ஒரு தெளிவு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us