'சீட்' குறைந்தாலும் தி.மு.க., கூட்டணியே கட்சியினரிடம் திருமாவளவன் தகவல்
'சீட்' குறைந்தாலும் தி.மு.க., கூட்டணியே கட்சியினரிடம் திருமாவளவன் தகவல்
ADDED : ஜூலை 04, 2025 01:30 AM

'கூட்டணியில் நமக்கு குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்காவிட்டாலும், தி.மு.க., கூட்டணியில் தான் தொடருவோம்' என, வி.சி., நிர்வாகிகளிடம் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., கூட்டணியில் முக்கிய கட்சியாக வி.சி., உள்ளது. அக்கட்சியை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர, பா.ஜ., - அ.தி.மு.க., - த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள் முயன்று வருகின்றன. ஆனால், பா.ஜ., - பா.ம.க., இடம் பெறும் கூட்டணியில் வி.சி., இடம் பெறாது என திருமாவளவன் தெரிவித்து வருகிறார்.
அதேநேரம், தி.மு.க., கூட்டணியில், கடந்த சட்டசபை தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்ட வி.சி., வரும் 2026 சட்டசபை தேர்தலில், தென் மாவட்டங்கள், கொங்கு மண்டலங்கள் என, 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.
குறிப்பாக, ஐந்துக்கும் அதிகமான பொது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் கூட்டணியில் அதிக 'சீட்' கிடைக்காவிட்டாலும், தி.மு.க., கூட்டணியில் தொடரப் போவதாக, கட்சி நிர்வாகிகளிடம் திருமாவளவன் தெரிவித்த தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, வி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வலுப்பெற்றுள்ளது. இக்கூட்டணியில், சீமானின் நா.த.க., விஜயின் த.வெ.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்க்க பேச்சு நடந்து வருகிறது.
அவ்வாறு அமைந்தால், 2026 சட்டசபை தேர்தலுக்கான போட்டி, இரு தரப்புக்கும் வலுவாக இருக்கும். தற்போதைய சூழலில் எங்கள் கூட்டணியில், வி.சி.,க்கு இரட்டை இலக்க இடங்களை கேட்டு வருகிறோம்.
எங்கள் கட்சியும் பரவலாக வளர்ச்சி அடைந்திருப்பதால், கேட்கும் இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
அதே நேரம், விரும்பிய எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்காவிட்டாலும், மதவாத சக்திகளை எதிர்க்கும் எங்கள் முடிவில் மாற்றம் இருக்காது.
இதே நிலைப்பாட்டில் தான் திருமாவளவனும் உள்ளார். 'இது தான் என் முடிவு' என்றும் கட்சி நிர்வாகிகளிடம் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதனால், என்ன நடந்தாலும், தி.மு.க., கூட்டணியில் தான் வி.சி., நீடிக்கும். இதில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.