ADDED : பிப் 02, 2025 02:17 AM

எதிர்பார்ப்பு அதிகம் உள்ள பட்ஜெட் பெரும்பாலும் ஏமாற்றத்தையே விட்டுச்செல்லும். எதிர்பார்ப்பு இல்லாத பட்ஜெட் மக்களிடம் அதிக வரவேற்பை பெறக்கூடும். அதுதான் இம்முறை நடந்திருக்கிறது.
கடந்த, 1996ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், முதல் வகை. அதிக வாக்குறுதிகள் தரப்பட்டன; ஆனால், பெரிதாக எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால், இந்த நிதி ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், இரண்டாம் வகை.
'அப்படி என்ன செய்துவிடப் போகின்றனர்?' என்று ஆணவமாக கேள்வி எழுப்பி வந்த பலரையும், வாய் அடைக்க செய்யும் வகையில் அமைந்தது இந்த பட்ஜெட். ஒரு பட்ஜெட் பெறும் வரவேற்பு, அது எந்த அளவு நடுத்தர வர்க்கத்தை கவரும் என்பதை பொறுத்தே அமையும். அந்த வகையில் இந்த ஆண்டு பட்ஜெட், நெடுங்காலம் பேசப்படும்.
கூடுதல் அம்சம்
எவ்வளவு வருமானம் இருந்தால் ஒருவர் வருமான வரி கட்ட வேண்டும் என்ற கேள்விக்கான அரசின் பதில்... வரும் ஆண்டு முதல், பலரும் ஏற்க கூடிய, 12 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் என்பதாக இருக்கிறது.
மாதம், 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்க கூடிய ஒருவர் எவ்வளவு வரி கட்டினால் சரியாக இருக்கும் என்ற கேள்விக்கும், ஒரு நியாயமான விடையை இந்த பட்ஜெட் தந்திருக்கிறது. மக்களே ஏற்கக்கூடிய வரி கொள்கையை உருவாக்கும் போது, அதற்கு கிடைக்கும் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதையும் இப்போது தெளிவாக பார்க்க முடிகிறது.
அதுமட்டுமல்லாமல் பலதரப்பட்ட பிரிவினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதிலும், ஒவ்வொரு பிரிவினருக்கும் பொருளாதார நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
மேலும், முக்கியமான செலவினங்களை தக்க வைத்துக்கொண்டு, அதேநேரம் பொது முதலீடுகளை தொடர்ந்தபடியே, கார்ப்பரேட் வரிகளை உயர்த்தாமலும் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பது கூடுதல் அம்சம். தற்போது நடுத்தர வர்க்கம், தன் செலவினங்களை சுதந்திரமாக செய்யக்கூடிய வகையில் அறிவிப்புகள் வந்துள்ளன. அது மட்டுமல்லாமல், முதலீடு குறித்து முன்பு இருந்ததுபோல் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி, தாங்களாகவே தங்களது முதலீட்டுப் பாதையை அமைத்துக் கொள்ளவும், இந்த வரிச்சலுகை வழிவகை செய்கிறது. இது மிக முக்கியமான நகர்வு; அதேசமயம் நடுத்தர வர்க்கத்தினரிடம் வரிச்சலுகை வாயிலாக பணத்தை அவர்களிடமே கொடுத்திருப்பதன் வாயிலாக அரசு அதிக மதிப்பை பெற்றுள்ளது.
சிறப்பம்சங்கள்
குறிப்பாக ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்குகிறார் என்றால், அவர் முழுவதுமாக வரிச்சலுகை பெற வாய்ப்புள்ளது. இந்த வரிச்சலுகையால் இந்த வருமான வரி வரம்புக்குள் இருக்கும் நபர்களின் வளர்ச்சி, முன்னெப்போதையும் விட துரிதமாக இருக்கும். தங்களது வருவாயை மறைக்காமல் தெரிவிக்க தயங்காத சூழலை இது உருவாக்கும்.
இந்த பட்ஜெட் அதிகமாக செலவினங்களை மேற்கொள்ளும் மற்றும் வாங்கும் சக்தியுடைய ஒரு புதிய வகையான வரி செலுத்துபவர்களை உருவாக்கியுள்ளது.
மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர், ஆண்டுக்கு வெறும், 2.80 லட்சத்தை மட்டும் வரியாக செலுத்த வேண்டும். இதன்வாயிலாக ஒரு புதிய நுகர்வு வர்க்கம் உருவாகும்.
இந்த வர்க்கம் அதிக கடன் வாங்கும் சக்தியும், செலவினங்களை மேற்கொள்ளும் சக்தியும்
கொண்டிருக்கும் என்பது, மிகப் பெரிய மாற்றமாக, வரும் காலங்களில் அமையும்.
சுயதொழில் செய்பவர்கள் தங்களுடைய உண்மையான வருமானத்தை தெரிவிப்பதையும் வரி செலுத்துவதையும் வெறுக்கின்றனர் என்ற நம்பிக்கை, இந்த அறிவிப்பின் வாயிலாக தவறென நிரூபணம் ஆகும். இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்க வரிச் சலுகைகளை கடந்து, பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன.
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கு ஒதுக்கீடு, உள்கட்டமைப்புக்கு 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, போதுமான ஒதுக்கீடு பெறும் முக்கிய துறைகள், விவசாயம் மேம்பட பல புதிய திட்டங்கள், மாநிலங்களும் முதலீடு செய்ய அவர்களுக்கு சிறப்பு கடன் வசதிகள், வேலை வாய்ப்பு பெரும் உதவும் திட்டங்கள், இளைய சமூகம் முன்னேற திறன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம், உணவு தன்னிறைவு நிலை, எல்லா உணவு பொருட்களிலும் உருவாக புதிய முயற்சிகள் என நிறைய உள்ளன.
உயர்கல்வியில் பெருமுதலீடுகள் என்று முழுமையான முன்னேற்றம் உருவாக்கும் அரசின் தெளிவான நோக்கம் நீடிக்கிறது.இப்படி, எல்லா முக்கிய அம்சங்களுக்கும் நிதி ஒதுக்கும் போது, பட்ஜெட்டில் பற்றாக்குறை உயராமல் பார்த்துக் கொள்வது, மிகக் கடினம்.
இத்தகைய சூழலில், நிதி அமைச்சர், நிதி பற்றாக்குறை ஜி.டி.பி., அளவில் 4.8 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறையப் போவதாக அறிவித்து உள்ளார். இது, கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர் ஏற்கனவே சாதித்த விஷயம் தான் என்றாலும், போகப்போக கடினமாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், நிதி அமைச்சர் இந்த பற்றாக்குறை இலக்கை அடைவதில் உறுதி காட்டுகிறார் என்பது, இந்த பட்ஜெட்டின் சிறப்பம்சம் ஆகும் மேலும், நாட்டின் மூலதன செலவினத்தில் அரசினுடைய பங்கு என்ன என்பதை, இந்த பட்ஜெட் தெளிவுபடுத்திஉள்ளது.
கொரானாவுக்குப் பிறகு, மத்திய அரசு, மூலதன செலவினத்துக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது. ஆனால் தற்போது தனியார், அதிக ரிஸ்க் எடுத்து முதலீட்டை மேற்கொள்ளும் வகையில் இந்த பட்ஜெட்டில் சமிக்ஞை விடப்பட்டுள்ளது.
தெளிவான பாதை
நிதிச் சூழலில் முதலீட்டாளர் எதிர்பார்ப்புகளை அமைப்பதில் இந்த முடிவு தெளிவான தாக்கத்தை கொண்டிருக்கும். தனியார் முதலீடுகள் உயரும் பட்சத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் மீதான தங்களது மதிப்பை மாற்றிக்கொள்ள வாய்ப்புகளை இது ஏற்படுத்தும். தனது பங்கை கட்டுப்படுத்திக் கொள்வது, வளர்ச்சிக்கான பொறுப்பை நிர்ணயித்துக் கொள்வது, நுகர்வை அதிகப்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்துவது, நீண்டகால நோக்கில் பொருளாதார தேவைகளை பொறுத்து நடவடிக்கைகளை ஏற்படுத்துவது போன்றவற்றினால் இந்த பட்ஜெட் தெளிவான பாதையை வழங்கி உள்ளது.
ஒற்போதைய சூழலில் சந்தை இதைவிட பெரியதாக எதிர்பார்ப்பை வைத்திருக்கும். சாத்தியமற்றதை எதிர்பார்ப்பதுதான் இயல்பு. ஆனால் சந்தை உணர்ந்துகொள்ளும். அப்படி உணர்ந்து கொள்கையில், எதிர்பார்ப்புகள் மறுசீரமைப்பு அடையும். அப்படி அடையும் போது பங்கு முதலீடு வேகமாக நடைபெற வாய்ப்புஉள்ளது.மொத்தத்தில், இந்த பட்ஜெட் நாட்டுக்கு சரியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. சுவாரசியமான எதிர்காலத்துக்கான பாதையையும் ஏற்படுத்தி உள்ளது.