UPDATED : ஜன 06, 2026 05:41 AM
ADDED : ஜன 06, 2026 05:09 AM

சென்னை: ''தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, வாழ்வில் முன்னேற வேண்டியது மாணவர்களின் வேலை,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லுாரி மாணவ - மாணவியருக்கு இலவசமாக 'லேப்டாப்'கள் வழங்கும், 'உலகம் உங்கள் கையில்' திட்டம் துவக்க விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். முதல் கட்டமாக, 10 லட்சம் மாணவ - மாணவியருக்கு, இலவச லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
அடுத்த தலைமுறையினரை மனதில் வைத்து தான், இன்றைய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். மாணவர்களை வளர்த்தெடுத்தால் தான், மாநிலம் வளரும்; நாடு வளரும்.
தொழில் நுட்பம்
அதற்காகவே, 'நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப் பெண்' ஆகிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், இலவச லேப்டாப் திட்டமும் சேர்ந்துள்ளது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, ஒட்டுமொத்த உலகையும் நம் கைகளுக்கு எட்டும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது. அதை, தமிழக அரசு உங்கள் கைகளுக்கு கொண்டு வந்து கொடுக்கிறது. தமிழர்கள் எப்போதும் கடந்த கால பெருமைகளை பேசுவோம். அதேபோல், எதிர்காலத்துக்காக உழைப்போம். ஆனால், ஒருபோதும் போலி பெருமைகளை பேசி தேங்கிட மாட்டோம்.
மனித இனம் நெருப்பையும், சக்கரத்தையும் கண்டுபிடித்த காலத்தில், இது போதும் என சுணங்கி இருந்தால், இப்போது விண்வெளியில் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு சாதனை படைத்திருக்க முடியாது.
மனிதர்களுக்கு காலம் கொடுத்திருக்கும் இரண்டாவது நெருப்பு, செயற்கை நுண்ணறிவு என்ற ஏ.ஐ., தொழில்நுட்பம். எதிர்காலம் மாணவர்கள் கையில் வைத்திருக்கும் லேப்டாப், பரிசு பொருள் கிடையாது; உலகை ஆள்வதற்கான உங்களின் வாய்ப்பு. இது செலவு திட்டம் அல்ல; எதிர்கால தலைமுறையின் கல்வியில் செய்யப்படக்கூடிய முதலீடு.
மாணவர்கள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் படிக்கும் பட்டப்படிப்புகள் மட்டுமே போதும் என நினைத்து விடக்கூடாது. அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப மாற்றங்கள் வருகின்றன. அதற்கு ஏற்றாற்போல், மாணவர்கள் தங்களை மேம்படுத்த வேண்டும்.
தொழில்நுட்பத்தை படிப்பது என்பது விருப்பம் கிடையாது. உங்கள் துறையில் நீங்கள் நிலைத்து நிற்க தொழில்நுட்பம் அவசியம். அதை மாணவ - மாணவியர் பயன்படுத்தி, முன்னேற வேண்டும். ஏ.ஐ., தொழில்நுட்பம், மனிதர்களுக்கு என்றும் ஈடாகாது. நம் வேலைகளை இன்னும் விரைவாக செயல்படுத்தவே, ஏ.ஐ., துணை நிற்கும்.
கடந்த கால தலை முறையினர், அறிவுக்காக பல புத்தகங்களை தேடி அலைந்தனர். ஆனால், இன்று உங்களுக்கு தேவையான தகவல்கள் எங்கும் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. வளர்ச்சிகளை குறை சொல்லி முடங்கிப்போவது, முட்டாள்களின் பாதை; ஆனால், வளர்ச்சியை பயன்படுத்தி, வாழ்வின் உச்சத்தை தொட வேண்டியது உங்களின் வேலை.
மாணவர்கள் கையில் வைத்திருக்கும் லேப்டாப்களை, படம் பார்க்க, 'கேம்' விளையாட பயன்படுத்த போகிறீர்களா; இல்லை, வாழ்க்கைக்கான 'லாஞ்ச் பேடு' ஆக பயன்படுத்த போகிறீர்களா?
அனைத்து விஷயங்களிலும் நல்லது, கெட்டது என்ற இரண்டு பக்கங்கள் உண்டு. அதில், நீங்கள் எந்த பக்கத்தை தேர்ந் தெடுக்க போகிறீர்களோ, அதை வைத்தே உங்கள் வெற்றி உங்கள் பக்கம் வந்து சேரும்.
உலகத்தோடு போட்டி போடுங்கள். அந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான கருவியைத் தான், உங்கள் கையில் கொடுத்து இருக்கிறோம். வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது.
தமிழகம் உங்களை நம்பித்தான் இருக்கிறது. உலகம் உங்கள் கையில் இருக்கிறது. நீங்களும் வெற்றி பெற்று வாருங்கள். நாங்களும் வெற்றி பெற்று வருகிறோம். எப்போதும் உங்கள் கூடவே இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி வரவேற்புரை ஆற்றினார். நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி, மணிகண்டன், விளையாட்டு வீரர்கள் பிரக்ஞானந்தா, விஸ்வநாதன் ஆனந்த், வைஷாலி, கார்த்திகா பங்கேற்றனர்.

