'இதைத்தானே நானும் சொன்னேன்' புலம்பும் செங்கோட்டையன்
'இதைத்தானே நானும் சொன்னேன்' புலம்பும் செங்கோட்டையன்
ADDED : ஜன 25, 2026 04:44 AM

இன்று பழனிசாமி செய்திருப்பதை தான், அன்று நான் செய்யச் சொன்னேன். ஆனால், என்னை வெளியே அனுப்பி விட்டனரே' என்று, தன் ஆதரவாளர்களிடம், த.வெ.க.,வில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குமுறி வருகிறார்.
இது தொடர்பாக, அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:
அ.தி.மு.க., வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால், மனமாச்சரியங்களை மறந்து, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, செங்கோட்டையன் தான் முதலில் வலியுறுத்தினார்.
அது குறித்து, அவர் தலைமையில் ஆறு முன்னாள் அமைச்சர்கள், 20௨௫ம் ஆண்டு ஜூலையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து பேசினர்.
நெருக்கடி ஆனால், அக்கருத்தை பழனிசாமி ஏற்கவில்லை. தன் எண்ணத்துக்கு எதிராக செயல்படுவதாக செங்கோட்டையன் மீது பழனிசாமி கோபம் அடைந்தார். இதையடுத்து, செங்கோட்டையனுக்கு தன் உறவினர்கள் வாயிலாக நெருக்கடி கொடுக்க துவங்கினார்.
பசும்பொன் தேவர் குரு பூஜைக்கு, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனுடன் சென்றதோடு, அ.தி.மு. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருப்பதாக சொல்லி, செங்கோட்டையனை கட்சியிலிருந்தும் நீக்கினார் பழனிசாமி.
இதனால் தான், செங்கோட்டையன் த.வெ.க-.,வுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால், இன்றைக்கு தினகரனை சகோதரர் என பாசத்தை கொட்டுகிறார் பழனிசாமி; நாளை பன்னீரையும் இதேபோல சொல்லுவார்.
'நானும் இதைத் தானே சொன்னேன். என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசி என்ற பெயரை இழந்து, இன்று த.வெ.க-.,வில் இருக்கிறேன்.
'தினகரனுடன் இணையும் இந்த முடிவை பழனிசாமி முன்பே எடுத்திருந்தால், நான் அங்கேயே இருந்திருப்பேன்' என்கிறார் செங்கோட்டையன்.
நடந்ததை மாற்ற முடியாது. இனி அ.தி.மு.க.,வுக்கோ, தி.மு.க.,வுக்கோ போனால், இருக்கும் கொஞ்சம் மரியாதையும் போய் விடும் என, அவருக்கு ஆறுதல் கூறி வருகிறோம்.
கடும் அதிருப்தி ஆனாலும், தனக்கு நெருக்கமான அ.தி.மு.க., சீனியர்களிடம் போனில் பேசி, குமுறிக் கொண்டே இருக்கிறார்.
இதற்கிடையில், அ.தி.மு.க.,வில் செங்கோட்டையன் ஆதர வாளர்களாக இருந்த முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும், அவருடைய பேச்சை நம்பி த.வெ.க.,வில் இணைந்தனர்.
இணைந்து சில மாதங்களாகியும், கட்சியில் அவர்கள் யாருக்கும் பொறுப்பு தரப்படவில்லை. த.வெ.க., தலைமையிடம் பேசி, செங்கோட்டையனால் அதை செய்யவும் முடியவில்லை.
இதனால், அவரை நம்பி வந்த ஆதரவாளர்கள் பலரும், செங்கோட்டையன் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுவும் அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான மனப் புழுக்கத்திலும் அவர் உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர் - '
