மக்கள் வரிப்பணத்தை சூறையாடியவர்களுக்கு மத்திய அரசை குறை கூற தகுதியில்லை: முருகன்
மக்கள் வரிப்பணத்தை சூறையாடியவர்களுக்கு மத்திய அரசை குறை கூற தகுதியில்லை: முருகன்
ADDED : ஜூலை 20, 2025 05:00 AM

சென்னை: 'தி.மு.க.,வினரின் போலி நாடகங்களை, தமிழக மக்கள் நம்ப போவதில்லை; மக்கள் வரிப்பணத்தை சூறையாடிய வர்களுக்கு, மத்திய அரசை குறை சொல்ல தகுதியில்லை' என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், நாளை நடக்க உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின், தன் கட்சி எம்.பி.,க்களை கூட்டி, 11 ஆண்டுகளாக, மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாக, வழக்கம்போல வெறுப்பு அரசியல் பேசி, தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்.
சுருட்டல்
டில்லியில், கடந்த மே மாதம் நடந்த, 'நிடி ஆயோக்' கூட்டத்தில் காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளைச் சுத்தம் செய்து மீட்கும் புதிய திட்டம் குறித்து வலியுறுத்தியதாக, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கூவம் ஆறு சுத்தப்படுத்தும் திட்டத்தை காட்டியே, பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டி விட்டனர்.
ஆண்டுகள் பல கடந்தும், தமிழக மக்களுக்கு நாற்றமடிக்கும் கூவம் ஆறு தான் மிச்சம். கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியவர்கள், இன்று வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாகக் கூறி, அடுத்த ஊழலுக்கு அச்சாரம் போட முடியுமா என்று அலைகின்றனர்.
ஒவ்வொரு பிரச்னையிலும், 'மத்திய அரசிடம் கேட்டு விட்டோம், செய்யவில்லை' என்று பழி போட்டு தப்பிக்கலாம் என, ஸ்டாலின் எண்ணுகிறார். ஆனால், தமிழக மக்கள், அவரிடம் கேட்கும் கேள்வி இதுதான்.
'தமிழகத்தை ஆட்சி செய்ய தி.மு.க.,வை, தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தது எதனால்; எதுவும் செய்ய முடியாத நீங்கள் தேர்தலில் நிற்பது எதற்காக; வெற்றி பெறுவது எதற்காக; ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, குடும்பத்தை வளப்படுத்துவதற்காகவா?
அதிக நிதி
தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்று, வழக்கம்போல் தீர்மானம் கொண்டு வந்துள்ள நீங்கள், 'எந்த நிதி தரவில்லை என கூறுங்கள்' என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பலமுறை கேள்வி கேட்டு விட்டார்; பதில் இல்லை.
பிரதமர் மோடி அரசு, தமிழகத்திற்கு, 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி வழங்கியுள்ளது.
ஆனால், 2004 முதல் 2014 வரை தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு செய்தது என்ன; தி.மு.க.,வுக்கு அதை கூற திராணி இருக்கிறதா?
அதுமட்டும் அல்லாமல், தற்போது மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசு பெற்ற, 11 லட்சம் கோடி ரூபாயில், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் என்னென்ன?
தி.மு.க.,வினரின் போலி நாடகங்களை, தமிழக மக்கள் நம்ப போவதில்லை. இந்த கொடூர ஆட்சியில், மக்கள் படும் துயரம் ஒன்றல்ல, இரண்டல்ல.
மக்களை சுரண்டி கொள்ளையடித்து, தி.மு.க., குடும்பம் மட்டுமே குதுாகலமாக வாழும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, மக்கள் தயாராகி விட்டார்கள்.
வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்று, தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.