sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 சிந்தனைக்களம்: நியாயத்துக்காக போராடிய நல்லவர் நல்லகண்ணு!

/

 சிந்தனைக்களம்: நியாயத்துக்காக போராடிய நல்லவர் நல்லகண்ணு!

 சிந்தனைக்களம்: நியாயத்துக்காக போராடிய நல்லவர் நல்லகண்ணு!

 சிந்தனைக்களம்: நியாயத்துக்காக போராடிய நல்லவர் நல்லகண்ணு!

2


ADDED : மார் 01, 2026 03:34 AM

Google News

2

ADDED : மார் 01, 2026 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.நடராஜன்



கட்டுரையாளர், அமெரிக்கத் துாதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்.

தாமிரபரணி நதிக்கரையில் சைவமும் வைணவமும் தழைத்தோங்கும் ஒரு சிறிய ஊர், ஸ்ரீவைகுண்டம்; நவ திருப்பதிகளில் ஒன்று. ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் அவதரித்த திருத்தலமும் கூட.

இந்த ஊரில், வறுமைக்கும் வளமைக்கும் இடைப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் தோழர் நல்லகண்ணு. இவர், 1925 டிசம்பர் 26ம் தேதி பிறந்தவர்; டிசம்பர் 26ம் தேதி தான், கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனன தினம்.

நுாறு வயதைத் தொட்டு மறைந்த பெருந்தலைவர்களில், எனக்குப் பழக்கமான மூவரில், இவர் ஒருவர். மற்ற இருவர், நீதிமான் வி.ஆர்.கிருஷ்ணய்யர், துணை வேந்தர் சை.வே.சிட்டிபாபு.

கடந்த 1984ல், நல்லகண்ணுவை முதன்முதலாக சந்தித்தேன். முதல் சந்திப்பு , வெறும் சம்பிரதாய அறிமுகமே. அடுத்ததாக, சில பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து நல்லகண்ணுவைச் சந்தித்தேன்.

சோவியத் யூனியன் உடைந்த நேரம் அது. அது குறித்து அவர், 'இது ஒரு சர்வதேச வரலாற்றுப் பிழை. உடைப்பது எளிது; ஒட்டுவது சிரமம்' என்றார். அப்போதும்கூட நான், நல்லகண்ணுவுக்கு வெளிநபர் தான்.

நேரடி மாணவர்


அடுத்து நிகழ்ந்த சந்திப்பு சற்றும் எதிர்பாராதது... ஸ்ரீவைகுண்டம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தனது 125வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய சமயத்தில், ஒரு மலர் வெளியிட்டது. முன்னாள் மாணவன் என்ற முறையில், பள்ளித் தலைமை ஆசிரியர், என்னையும் ஒரு கட்டுரை எழுதக் கேட்டிருந்தார்.

'ஒரு ஞான ஆலயத்தின் பிரதான தெய்வங்கள்' என்ற தலைப்பில் பள்ளியின் ஆசிரியர்களைப் பற்றி விரிவாக எழுதியிருந்தேன். தாமதமாக நான் அனுப்பிய கட்டுரை அங்கு சேர்வதற்குள், மலர் அச்சிடப்பட்டு விட்டது.

இருந்தாலும் எல்லா ஆசிரியர்களைப் பற்றியும் எழுதி இருந்ததால், பள்ளி நிர்வாகம், தனியாக அச்சிட்டு மலருடன் சேர்த்துக் கொடுத்தது.

நல்லகண்ணுவின் கண்ணில் , அந்த சிறு புத்தகம் தென்பட்டிருக்கிறது. அதைப் படித்துப் பார்த்த அவர், தலைமை ஆசிரியரிடம், 'இவரைப் பார்த்திருக்கிறேனே... இவர் நம் பள்ளி மாணவரா?' என்று கேட்டிருக்கிறார். ஏனெனில், அவரும் அதே பள்ளியில் படித்திருக்கிறார்.

பள்ளியின் அப்போதைய பெயர், 'காரனேஷன்' உயர்நிலைப் பள்ளி. அடுத்த சில ஆண்டுகளில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம் பள்ளி நிர்வாகத்தை ஏற்றுக் கொண்ட பின், பள்ளிக்கூடத்தின் பெயர், 'குமரகுருபர ஸ்வாமிகள் ஆண்கள் உயர் நிலைப்பள்ளி' என்று மாறியது.

சென்னை திரும்பிய நல்லகண்ணு, அந்த சிறு புத்தகத்திலிருந்த தொலைபேசி எண்ணை வைத்துக்கொண்டு, என்னைத் தொடர்பு கொண்டார். அவரைச் சந்தித்து, பள்ளிக்கூடம் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். 'பெரிய தமிழ் பண்டிட்' என்று அழைக்கப்பட்ட குழந்தைவேல்சாமி பிள்ளை பற்றி நினைவுகூர்ந்தார். அந்த தமிழாசிரியர், உ.வே.சாமிநாதைய்யரின் நேரடி மாணவர். அவருக்கு ஓய்வு வயதே நிர்ணயிக்காமல், பள்ளிக்கூடம் தொடர்ந்து பணியில் வைத்துக் கொண்டிருந்தது.

வரலாற்றில் முதல் முறை


அந்த ஊரின் முக்கிய கம்யூனிஸ்ட் பிரமுகரான முத்தையா, நீதிமன்றத்திற்கு எதிரே ஒரு சிறு கட்டடத்தில், சிறிய இலவச வாசகசாலை வைத்திருந்தார். அதில் நாளேடுகளும், வாரப் பத்திரிகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அது எப்போதும் திறந்திருக்கும்; பொறுப்பாளர் யாரும் கிடையாது. ஊர் மக்கள், தாமாகவே வந்து படித்துவிட்டு, அங்கேயே பத்திரிகைகளை மடித்து வைத்துவிட்டுச் செல்வர்.

அந்த வாசகசாலைக்கு நல்லகண்ணு வந்திருந்தார். அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அவர் ஒரு கம்யூனிஸ்ட் பிரமுகர் என்பதைத் தவிர. அவர் எங்கள் பள்ளியின் மூத்த முன்னாள் மாணவர் என்பது, பின்தான் தெரிய வந்தது.

நல்லகண்ணு மறைந்த தினத்தில், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பள்ளியில், அவருக்காக ஒரு அஞ்சலிக் கூட்டம் நடந்தது. அவரது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை சூட்டப்பட்டது. மறுநாள், பள்ளிக்கூடத்திற்கு துக்க விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பொதுவாக நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் மறைந்தாலோ அல்லது தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் யாராவது மறைந்தாலோ துக்கம் அனுசரிப்பது மரபு. ஆனால், 83 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ஒரு மாணவருக்காக துக்க விடுமுறை அளிக்கப்பட்டது, பள்ளிக்கூட வரலாற்றில் இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.

நான்காண்டு காலம் மட்டுமே ஸ்ரீவைகுண்டத்தில் வசித்தேன் என்று நல்லகண்ணுவிடம் சொன்னபோது, அவர் என் தந்தையைப் பற்றியும், உறவினர்கள் பற்றியும் கேட்டார். அப்போது, அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்தை துவங்க ஏற்பாடுகள் செய்தவர்களில் ஒருவரான வக்கீல் சுப்பையரின் புதல்வரும், வக்கீலுமான ராஜாங்கம் அய்யர் பற்றி பேச்சு வந்தது.

ராஜாங்கம் அய்யர், மகாகவி பாரதியாரின் மைத்துனி மகளும், தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளும் அறிந்திருந்த கோமதி என்ற ஒரு ஞானப் பெண்மணியின் கணவர். அப்போது நல்லகண்ணு, 'ராஜாங்கம் அய்யரின் கல்விப் பணிதான் உங்களுக்குத் தெரியும். விவசாய சங்கத் தலைவர் என்ற முறையில் அவர், விவசாயிகளுக்கு இரக்க உணர்வுடன் உதவி வந்ததை நான் அறிவேன்' என்றார்.

விவசாயிகள் ஓராண்டு, இரண்டாண்டு இடைவெளியில், நிலத்தை அடகு வைத்துத் தான், உழவு, நடவு வேலைகளைச் செய்வர். நிலத்தின் பத்திரங்களை, அந்த விவசாயிகளால் பத்திரமாக வைத்துக்கொள்ள முடியவில்லை. அவை கசங்கியிருக்கும்; மடிந்திருக்கும்; ஓரம் கிழிந்திருக்கும்.

அந்தக் காலகட்டத்தில், ராஜாங்கம் அய்யர்தான், நில அடமான வங்கியின் தலைவர்.

வேறு யாரேனும் இருந்திருந்தால், அந்தப் பத்திரங்களை பிணையாக ஏற்கத் தயங்கியிருப்பர்; ஆனால் அவர் அவற்றை வாங்கி, 'செலபோன்' தாளில் ஒட்டி, ஏதாவது நோட்டுப் புத்தக அட்டையில் வைத்து, பத்திரமாகக் கொடுத்து அனுப்புவாராம். இந்த விஷயத்தை நல்லகண்ணு நினைவுகூர்ந்தார்.

நல்லகண்ணுவிடம், ஜாதி காழ்ப்புணர்வு இருந்ததில்லை. பாராட்ட வேண்டியவர்களைப் பாராட்டியிருக்கிறார்; பொது பிரச்னை என்றால், வரிந்து கட்டி களமிறங்குவார்.

தாமிரபரணியின் குறுக்கே அமைந்த ஸ்ரீவைகுண்டம் பாலத்தின் மதகுகளின் தெற்கு புறம் உள்ள மணலை, மணல் கொள்ளையர்கள் குவியல் குவியலாக கடத்திச் சென்றபோதெல்லாம், இரண்டு திராவிடக் கட்சிகளும் வாய் திறக்கவில்லை. கட்சிகளுக்கான, 'கவனிப்பு' அப்படி!

மணல் கொள்ளை தொடர்ந்தது. அதை எதிர்த்து ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு போராட்டம் நடத்தினார் நல்லகண்ணு. அதற்காக, மேடையில் தன்னுடன் சேர்ந்து குரல் கொடுக்க அவர் அழைத்தது, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகராகிய வேலுஜி என்பவரையே.

லட்சியப்பிடிப்பு


விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வேலுஜி, ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த ஆழ்வார்திருநகரியில், 'மாளவியா வித்யா கேந்திரம்' என்ற தொடக்கப் பள்ளியை லட்சியப்பிடிப்புடன் நடத்தி வருகிறார்.

போராட்ட தினத்தன்று மேடையில் வேலுஜியை வைத்துக்கொண்டு பேசிய நல்லகண்ணு, 'வேறு தளங்களில் நானும், வேலுஜியும் எதிரெதிர் முகாம்கள். ஆனால், பொதுநலனில் ஒன்றுபடுகிறோம்; மணல் கொள்ளைத் தடுப்புப் போராட்டம் அதில் ஒன்று' என்றார்.

மேலும், 'இங்கு கூடியுள்ள இளைஞர்களே, மாணவர்களே... இயற்கை வளம் இப்படி சுரண்டப்பட்டால், எதிர்காலத்தில் இந்த நிலம் விவசாயத்திற்குப் பயன்படாமல் போய்விடும்' என்றார்.

அன்று நல்லகண்ணு பேசியது, ஒரு தாத்தா தன் பேரனுக்கு இதமான அறிவுரை சொன்னதுபோல் இருந்தது என்கிறார், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த வி.சுப்ரமணியன் என்ற, 80 வயது பெரியவர்.

நல்லகண்ணுவின் மறைவைப் பற்றி கேட்ட உடனேயே, சென்னைக்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் வேலுஜி.

நல்லகண்ணு, யாரையுமே எதிர்தரப்பு என்று கருதியதில்லை. எல்லாரும் அவரவர் போக்கில் செயல்படுகின்றனர் என்று தான் கருதினார்.

பல எழுத்தாளர்களுக்கு நண்பரான அவர், இலக்கியத்தையும், கட்சி சித்தாந்தத்தையும் சேர்த்து குழப்பிக் கொண்டதில்லை.

'சோறு போடும் சொற்கள்' என்ற தலைப்பிலான என் சிறுகதைத் தொகுதியை, மார்க்.கம்யூ., கட்சி சார்ந்த, பாரதி புத்தகாலயம் பதிப்பிக்க முன்வந்தது. எதிர் தரப்பு கம்யூனிஸ்ட் பிரமுகரான நல்லகண்ணுவிடமிருந்து அணிந்துரை பெறலாமா, அவர் தருவாரா என்று கேட்டபோது, பதிப்பாளர் நாகராஜன், 'நல்லகண்ணு சம்மதிப்பார்' என்று சொல்லி, என்னுடன் அவர் வீட்டுக்கு வந்து, சிறுகதைத் தொகுதியின் முன்னோட்டப் பிரதியைக் கொடுத்து, அணிந்துரை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படியே, எந்த வேறுபாடும் பார்க்காமல், சிறுகதைத் தொகுதியைப் படித்துவிட்டு, அணிந்துரை வழங்கினார் நல்லகண்ணு.

இலக்கிய ஒருமைப்பாடு


கதாசிரியர் நான், முதலாளித்துவ நாடாகிய அமெரிக்க அரசாங்கத்தில் பணிபுரிந்தவன்; வெளியிட்டவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர்; அணிந்துரை வழங்கியவர், வலது கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு. இது, தமிழ்நாட்டின் அரசியலுக்கு அப்பாற்பட்ட இலக்கிய ஒருமைப்பாட்டை உணர்த்துகிறது.

அவரும் எளிமை, அவரது வீடும் எளிமை. அவர் வாழ்ந்து கொண்டிருந்த சி.ஐ.டி., நகர் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். சிறிய வீடு, உபயோகப் பொருட்கள் எல்லாம் அதிகம் இல்லை. அமருவதற்கு இரண்டு நாற்காலிகள் மட்டுமே இருந்தன; அவையும் சாதாரணமானவையே.

எல்லாவற்றிற்கும் மேலாக, சுதந்திரப் போராட்டத்திற்குப் பின்னரும் தியாகியாக வாழ்ந்து வந்தவர், நல்லகண்ணு. கட்சிப்பற்று, நாட்டுப்பற்று தவிர வேறு எந்த பற்றும் இல்லாமலேயே வாழ்ந்து வந்தவர்.

அவர் தனக்குக் கிடைத்த விருதுகளுக்கான அடையாளங்களை மட்டும் வைத்துக் கொண்டு, ரொக்கப் பணத்தை, அந்தந்த அமைப்புகளுக்கு தானமாக வழங்கிவிட்டார்; மரணத்திற்குப் பின், உடலையும் தானமாகக் கொடுக்க சாசனம் எழுதி வைத்தார்.

அவர் உயிர் போகவில்லை; அது நம் நினைவில் வாழ்கிறது. அவரது உடலும் மரிக்கவில்லை; அது மருத்துவமனையில் மாணவர்களுக்காக வாழ்கிறது.






      Dinamalar
      Follow us