சிந்தனைக்களம்: ஐகோர்ட் பாராட்டிய கொலை வழக்கு விசாரணை
சிந்தனைக்களம்: ஐகோர்ட் பாராட்டிய கொலை வழக்கு விசாரணை
ADDED : ஏப் 27, 2025 03:27 AM

மனைவியை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்த கணவரையே, அவரே மனைவியை கொன்றதாக போலீசார் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்று, வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்த பின், ஜாமினில் வெளிவந்த அந்த கணவர், தற்செயலாக ஒரு ஹோட்டலில் தன் மனைவி அவளது காதலனுடன் இருந்ததை பார்த்து போலீசில் தெரிவிக்க, அவள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வழக்கை மறு விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நடந்த சம்பவம் இது.
இந்தச் சம்பவம், புலன் விசாரணை அதிகாரியின் படுமோசமான செயல்பாட்டிற்கு உதாரணம். தமிழகத்திலும் பல ஆண்டுகளுக்கு முன், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக, போலீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பில் குறிப்பிடுவர். இப்போது நான் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்...
அப்போது நான், நாகப்பட்டினம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருந்தேன். ஒரு நாள் இரவு ரோந்து பணியில் இருந்த போது, சிலர் வந்து, 'நாங்கள் வசிக்கும் தெருவில் குடியிருக்கும் காவலர் வீட்டில் குழந்தை அழுது கொண்டிருக்கிறது. பக்கத்தில் படுத்திருக்கும் அதன் தாய் எழுந்திருக்கவில்லை; நாங்கள் குரல் கொடுத்தும், கதவை தட்டிப் பார்த்தும் பயனில்லை; இறந்து போயிருப்பாரோ என்று சந்தேகமாக உள்ளது' என்றனர்.
அந்தக் காவலர், அருகில் வெளிப்பாளையத்திலுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருப்பதால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர். அப்போது, மொபைல் போன் எல்லாம் கிடையாது என்பதால், காவல் நிலையத்திலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, அந்த காவலருக்கு தகவல் சொன்னேன்.
சிறிது நேரம் கழித்து, அந்த காவலர் குழந்தையை துாக்கிக்கொண்டு காவல் நிலையம் வந்தார். அவரின் மனைவி உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், இறந்து போய் விட்டதாகவும் கூறினார்.
நான் அவருக்கு ஆறுதல் கூறியதுடன், அவரின் மனைவி உடலை அடக்கம் செய்ய அருகே வசிப்பவர்களை உதவிசெய்யும்படி கூறியதுடன், ஏதும் உதவி தேவை என்றால், என்னை அணுகும்படியும் கூறி அனுப்பி வைத்தேன்.
மறுநாள் காலை 10:00 மணிக்கு, காவலரின் வீட்டருகே வசிக்கும் சிலர் வந்து மனு கொடுத்தனர். அதில், 'காவலரின் மனைவி மரணத்தில் சந்தேகம் உள்ளது; விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
சந்தேக மரணம் என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து எடுத்துக் கொண்டு, அந்தக் காவலர் வீட்டிற்கு சென்றேன். பிரேதத்துக்கு மாலை போட்டு அடக்கம் செய்வதற்கான ஏற்பாட்டுடன் இருந்தது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு விட்டதால், பிரேத பரிசோதனை செய்யாமல், அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்ற விபரத்தை காவலரிடம் சொன்னேன்.
பின், பிரேதத்தை பார்வையிட்ட போது, கழுத்து பகுதியிலும், முகத்தின் இருபுறத்திலும், கருஞ்சிவப்பில் நிறமாற்றம் தெரிந்தது. வாயைப்பொத்தி கழுத்தை நெரித்தால் மட்டுமே, அதுபோன்ற அடையாளம் தெரியும்.
அந்த விபரத்தை என் அறிக்கையில் குறிப்பிட்டு, உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தேன். பிரேத பரிசோதனையின் போது, மருத்துவ அதிகாரியுடன் இருந்து கவனித்தேன்.
பரிசோதனை செய்த பெண் மருத்துவர், 'இந்த மரணம், பன்னிரெண்டு மணி நேரத்துக்கு முன்னதாக நிகழ்ந்துள்ளது; கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்' என, உறுதியாக தெரிவித்தார். அதற்கு ஆதாரமாக, கழுத்துப்பகுதி உள்உறுப்பு பாகங்களில் காணப்பட்ட தடயங்களையும் சுட்டிக்காட்டினார்.
பின், வெளியே வந்த நான், 'பிரேதத்தை அடக்கம் செய்து விட்டு, விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு வாருங்கள்' என்று கூறி அந்த காவலரை அனுப்பி வைத்தேன்.
மாலையில், காவல் நிலையம் வந்த காவலரை அமைதியாக விசாரித்து, என்ன நடந்தது உண்மையை சொல் என்றேன். அவரோ சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி சாதித்தார். பிறகு விசாரிக்க வேண்டிய விதத்தில், கடுமையாக மருத்துவ ஆதாரத்தை சுட்டிக்காட்டி விசாரித்ததும், உண்மையை ஒப்புக் கொண்டார்.
அந்தக் காவலர் பணி நிமித்தமாக, கிராமம் ஒன்றில் தன் சக காவலர்களுடன் தங்கியிருந்த போது, அருகே குடியிருந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார்.
ஒரு நாள் இருவரும் ஒன்றாக இருந்த போது, கிராமத்தினர் கையும் களவுமாகப் பிடித்து, காவலருக்கு அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டனர். இருவரும் ஒன்றாக வாழ்ந்து, ஒரு பெண் குழந்தையும் பிறந்து விட்டது.
அவசரகதியில் நடந்த திருமணத்தில், சற்றும் வசதியில்லா பெண்ணை மணந்ததில், காவலருக்கும், அவரது பெற்றோருக்கும் கொஞ்சமும் விருப்பம் இல்லை. எப்படியாவது அப்பெண்ணை கொன்று விட வேண்டும் என தீர்மானித்துள்ளனர்.
நாட்டு வைத்தியர் ஒருவரிடம் யோசனை கேட்க, அவர் மெதுவாக செயல்படும் விஷத்தை கொடுத்து, அதை அப்பெண்ணின் உணவில் கலந்து கொடுத்து விட்டால், வாந்தி, பேதி ஏற்பட்டு, நாளடைவில் மரணம் அடைந்து விடுவாள் என்று சொல்லியுள்ளார்.
அந்த மருந்தை காவலர், தன் மனைவியின் சாப்பாட்டிலும், டீயிலும் சிறிது சிறிதாக கலந்து கொடுத்திருக்கிறார். இதனால், வாந்தி, பேதி ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கவே, அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டு, உஷாராகி விட்டாள். உணவில் அடுத்தடுத்து விஷத்தை கலக்கும் வாய்ப்பு காவலருக்கு கிடைக்கவில்லை.
அதனால், தன் தந்தையுடன் ஆலோசித்து, தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பழைய குற்றவாளியை கூட்டு சேர்த்து, மனைவியை கொல்ல தீர்மானித்தார். சம்பவத்தன்று சம்பந்தப்பட்ட காவலர், காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருக்க, அவரின் தந்தையும், பழைய குற்றவாளியும் அங்கு சென்று அவரை சந்தித்துள்ளனர்.
பின், மூவருமாக காவலர் வீட்டிற்கு சென்று, அங்கு உறங்கிக் கொண்டிருந்த அவரின் மனைவியை, தந்தை வாயை அமுக்கிக் கொள்ள, பழங்குற்றவாளி காலைப்பிடித்துக்கொள்ள, காவலர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின், அந்த காவலர், ஏதும் தெரியாதவர் போல கட்டுப்பாட்டு அறைக்கு பணிக்கு சென்று விட, அவரின் தந்தையும், பழைய குற்றவாளியும் ஊர் திரும்பியுள்ளனர்.
இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்து, காவலரையும், அவரின் தந்தையையும், அவர்களுக்கு உதவியாக இருந்த பழைய குற்றவாளியையும் கைது செய்தேன்.
காவலரின் தந்தையை, சீர்காழி அருகேயுள்ள அவரது வீட்டில் கைது செய்த போது, அந்த வீட்டின் கூரையில் செருகியிருந்த கடிதங்கள் என் கண்ணில் பட்டன; எடுத்துப் பார்த்தேன். அவை எல்லாம், காவலர் அவரின் தந்தைக்கு எழுதிய கடிதங்கள்; இரண்டு மட்டும், கொலை செய்யப்பட்ட மருமகள் மாமனாருக்கு எழுதியவை.
காவலர் தன் தந்தைக்கு, 'எனக்கு இவளுடன் வாழப்பிடிக்கவில்லை; அவள் கதையை முடிக்க நான் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. நான் சொன்னபடி ஆளை ஏற்பாடு செய்து அழைத்து வாருங்கள்; கதையை முடித்து விடலாம்' என, திரும்ப திரும்ப எழுதப்பட்ட கடிதங்கள் அவை.
மாமனாருக்கு மருமகள் எழுதியிருந்த கடிதம் ஒன்றில், 'நீங்கள் உங்கள் மகனை துாண்டி விட்டால், ஒரு நாள் அவர் என்னை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போவது உறுதி. நீங்கள் இருவரும் கடிகாரத்தில் சின்ன முள்ளும், பெரிய முள்ளும் போல. நான் உங்கள் இருவரையும் சுற்றி வரும் நிமிட முள். உங்களை கண்காணித்து கொண்டு தான் இருக்கிறேன்' என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் கடிதங்களுடன், கொலை நடந்த தினத்தன்று, குற்றவாளிகள் மூவரையும் ஒன்றாக பார்த்த ஒரு சாட்சி, சம்பவத்துக்கு சற்று முன் காவலரின் தந்தையை, அந்த தெரு பக்கம் பார்த்த உண்மையான இரண்டு சாட்சிகளை வைத்து, இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், முதல் எதிரிக்கு மரண தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றத்தில், முதல் குற்றவாளியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் மிகப்பிரபலமான வழக்கறிஞர் குற்றவாளிகளுக்காக வாதாடிய போது, தீர்ப்பளித்த நீதிபதிகள் அவரை கேட்ட கேள்வி, 'இந்த கடிதங்கள் எல்லாம் போலீசார் தயாரித்தது என்று சொல்கிறீர்களா? நாங்கள் விசாரித்த வழக்குகளிலேயே செயற்கையாக எந்த சாட்சியையும் புகுத்தாமல், உள்ளது உள்ளபடியே நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த புலன் விசாரணை இது' என்று குறிப்பிட்டனர்.
இத்தகைய பாராட்டுகள் தான் ,விசாரணை அதிகாரிகள் மேற்கொள்ளும் சிரமமான முயற்சிகளுக்கு கிடைக்கும் மகத்தான பரிசு.
மா.கருணாநிதி
காவல்துறை கண்காணிப்பாளர் - ஓய்வு
இ-மெயில்: spkaruna@gmail.com

