சிந்தனைக்களம்: உலக அரசியலில் இந்தியா இனி அதிரடி காட்ட வேண்டும் !
சிந்தனைக்களம்: உலக அரசியலில் இந்தியா இனி அதிரடி காட்ட வேண்டும் !
ADDED : ஆக 13, 2025 01:20 AM

சர்வதேச அரசியல் காட்சிகள் தற்போது இந்தியாவை மையப்படுத்தியே சுற்றத் துவங்கி உள்ளன. அதற்கேற்றபடி உலக அரசியலும் வேகமாக மாறி வருகிறது. எனவே, தன் சர்வதேச அரசியல் தலையீடு தொடர்பான உத்தியை இந்தியாவும் மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் நெருங்கியிருக்கிறது.
'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரம், நம் முக்கியமான நட்பு நாடுகளை கூட பாகிஸ்தானுக்கு எதிராக பெரிதும் பேச வைக்கவில்லை. இத்தனைக்கும் ஐ.நா.,வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுக்களை ஏவியே பஹல்காமில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். உலக நாடுகளுக்கும் இது நன்றாகவே தெரியும்.
பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்பரேஷன் சிந்துாரை முன்னெடுத்த நம் ராணுவம், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களையும் அழித்து காட்டியது. ஆனாலும், உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தானை குற்றவாளியாக்குவதில் தொடர்ந்து திணறி வருகிறோம்.
நம்பகமில்லாத அமெரிக்கா இதுநாள் வரை வர்த்தக பேரத்தை பயன்படுத்தியே இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறி வருகிறார். போர் நிறுத்தத்திற்கு தானே காரணம் எனவும் உரிமை கோரி வருகிறார்.
இதில் கசப்பான உண்மை என்ன தெரியுமா? இந்தியா மீதான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா கண்டுகொள்ளவே இல்லை என்பது தான். அதற்கு ஆதாரமும் இருக்கிறது.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்குப் பின் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை அழைத்து அதிபர் டிரம்ப் விருந்து வைத்தார்.
உண்மையில் இந்தியா மீது அக்கறை இருந்திருந்தால் அமெரிக்கா அப்படி செய்திருக்காது. பாகிஸ்தானுடனான உறவில் அமெரிக்கா இப்படி நெருக்கம் காட்டுவது இந்தியாவை சற்று எரிச்சல் அடைய வைத்துள்ளது.
அடுத்ததாக இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திலும் இரண்டு முகத்தை காட்டுகிறது அமெரிக்கா. ஒருபக்கம் இந்தியாவிடம் வர்த்தக உறவுக்கான பேச்சுவார்த்தையை நடத்தும்போது, மறுபக்கம், இந்தியாவில் யாரும் முதலீடு செய்யக் கூடாது என அமெரிக்க நிறுவனங்களுக்கு உத்தரவு பறக்கிறது.
இந்தியர்களுக்கு இனி வேலை தரக்கூடாது; அமெரிக்கர்களையே பணியில் அமர்த்த வேண்டும் என்ற டிரம்பின் உத்தரவுகள் இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்காக இந்தியர்களுக்கான விசா நடைமுறைகளிலும் டிரம்ப் கெடுபிடிகளை அதிகப்படுத்தி இருக்கிறார்.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் வர்த்தக விவகாரத்திலும் நட்பு நாடுகள் மூலம் அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் இந்தியாவை மேலும் சங்கடப்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவால் நமக்கு ஒரேயொரு நன்மை மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட தீவிரமான நடவடிக்கைகளால், அந்த தாக்குதலை நடத்திய டி.ஆர்.எப்., எனப்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' பயங்கர வாத அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
எரிசக்தி பாதுகாப்பு வர்த்தகத்தில் நமக்கு முக்கியமான பங்குதாரராக விளங்கும் ஐரோப்பிய யூனியனும் மெல்ல தொல்லை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.
அதனுடன் விரிவான வர்த்தகம் மற்றும் முதலீடு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. இருந்தாலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விஷயத்தில் தடையை அமல்படுத்துவதிலேயே மும்முரமாக இருக்கிறது.
ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, பெல்ஜியம், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து குழாய் வழியாக கச்சா எண்ணெய்களை பீப்பாய், பீப்பாயாக இறக்குமதி செய்து வருகின்றன. ஆனால், இந்தியா மட்டும் தன் எரிசக்தி தேவைக்காக இறக்குமதி செய்யக்கூடாதாம்.
தன் தேவைக்காக ரஷ்யாவிடம் இருந்து மட்டும் 51 சதவீத அளவுக்கு எல்.என்.ஜி., எனப்படும், திரவ இயற்கை எரிவாயுவை ஐரோப்பிய யூனியன் நாடுகள் இறக்குமதி செய்து வருகின்றன.
அப்படி இருக்கும்போது இந்தியாவை குறைகூறுவதை எப்படி ஏற்க முடியும்?
ஐரோப்பிய யூனியனின் இந்த தொல்லைக்கு முடிவு கட்டும் வகையில் இந்தியா - பிரிட்டன் இடையே சமீபத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ஐரோப்பிய யூனியனுக்கு நிச்சயம் அழுத்தத்தை தரலாம்.
சீனாவின் சந்தர்ப்பவாதம் இந்தியாவை சுற்றி நடக்கும் உலக அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் சீனா, அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணுகிறது. இதற்காக இந்தியாவின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் ஒட்டி உறவாட பார்க்கிறது.
தவிர இந்தியாவுக்கு சொந்த மான அருணாச்சல பிரதேசத்தில் மாண்டரின் மொழியில் பெயர் வைப்பதையும் சீனா வழக்கமாக்கி வருகிறது.
இந்தியாவில் இருக்கும் புத்த மத துறவி தலாய் லாமாவின் அமைப்பை எதிர்காலத்தில் தன் வசப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சீனா இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது.
தவிர, திபெத்தில் இருந்து இந்தியா, வங்கதேச நாடுகளுக்கு பாயும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணை கட்டும் பணியையும் துவக்கியுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியா மற்றும் வங்கதேசத்தின் நீர் பாதுகாப்புக்கு நேரடியாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.
இப்படி ஒழுக்கம் இல்லாத அமெரிக்கா, பொறுப்பு இல்லாத ஐரோப்பிய யூனியன், ஆக்கிரமிப்புக்கு அடிபோடும் சீனா என மூன்று சக்திகளை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தற்போது இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது.
இதற்காக சீனாவுடனான நட்புறவை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் கட்டாயமும் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட, இந்தியா செய்ய வேண்டிய மிக முக்கியமான ராஜதந்திரமும் இருக்கிறது.
அது சர்வதேச பிரச்னைகளில் பட்டும்படாமல் இருக்கும் நிலைப்பாட்டை உடனடியாக மாற்றி கொள்வது தான்.
இஸ்ரேல் - காசா இடையிலான சண்டை, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர், ஈரானின் அணு உலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் என சர்வதேச விவகாரங்களில் இந்தியா தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பாக ஐ.நா.,வில் நடந்த ஓட்டெடுப்பிலும் இந்தியா பங்கேற்காமல் நழுவிக் கொண்டது.
இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா, ரஷ்யா என அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேண வேண்டும் என்பதே இதற்கு காரணம். ஆகவே தான் இந்தியா தன் ஆதரவை இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
ஆனால், இனியும் அப்படி இருக்கக்கூடாது என சில அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சியில் மட்டுமே இந்தியா முழு கவனமும் செலுத்திவிட்டு, உலக அரசியலில் பங்கெடுப்பதை கைவிட்டால், அது பொருளாதார வளர்ச்சிக்கு நிச்சயம் பாதிப்பையே ஏற்படுத்தும் என்கின்றனர்.
எனவே, உலக நாடுகளிடையே நடக்கும் மோதல்கள், அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றில் இந்தியாவும் தலையிட வேண்டும்.
தற்போதைய தேவை 'இந்தியா ஆதரவான நாடு' என்ற அந்தஸ்து அல்ல, நிலையான பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் தான்.
இதற்காக, சர்வதேச அரசியல் களத்தில் இந்தியாவும் இனி களமாட வேண்டும். ஏனெனில் காலத்தின் கட்டாயம் அது.
- டி.எஸ்.திருமூர்த்தி
ஐ.எப்.எஸ்., - ஓய்வு
ஐ.நா.,வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர துாதர்