ADDED : நவ 23, 2025 12:44 AM

பாட்னா: பீ ஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தோல்விக்கான காரணங்களை ஆராய கட்சியின் செயற்குழு கூடி விவாதித்தது. வழக்கம் போல, 'தோல்விக்கு காரணம் ராகுல் அல்ல; ஓட்டு திருட்டுதான்' என, அவரை காப்பாற்ற காங்., தலைவர்கள் பேசினர்.
'தோல்விக்கு காரணம் ராகுலின் ஆலோசகர்கள் தான்' என, சில காங்., தலைவர்கள் வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்து விட்டனர். பல ஆண்டுகளுக்கு முன், இதே போல காங்., தோல்விக்கான காரணங்களை ஆராய, முன்னாள் அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 'பெரும்பான்மை சமூகத்தினரை பகைத்துக் கொள்ளக்கூடாது' என, தன் அறிக்கையில் அந்தோணி சொல்லியிருந்தார். ஆனால், அந்த அறிக்கையை காங்., மேலிடம் கண்டுகொள்ளவே இல்லை. குப்பைத்தொட்டிக்கு போனது அந்தோணி அறிக்கை.
'காங்கிரசுக்கு மக்களோடு தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மக்களின் பிரச்னைகளைப் பேசாமல், தேவையில்லாத விஷயங்களை பெரிதுபடுத்தி, இந்த படுதோல்வியைச் சந்தித்தது' என, சீனியர் காங்., தலைவர்கள் புலம்புகின்றனர். குறிப்பாக, 'மூன்று காங்., தலைவர்கள் தான் தோல்விக்கு காரணம்' என, கை காட்டுகின்றனர்.
ஜெய்ராம் ரமேஷ், பவன் கெரா மற்றும் சுப்ரியா ஸ்ரீநாட்டே. காங்., சார்பாக, இவர்கள் மூவரும் தங்கள் இஷ்டத்திற்கு சமூக வலைதளங்களில் பல விஷயங்களை பதிவிட்டனர். 'உள்துறை அமைச்சர் வீட்டிற்குள் செல்லும்போது, செருப்பை வெளியே விட்டு வர சொல்கின்றனர்; இது அவமானம்' என, இந்த விஷயத்தை பெரிதுபடுத்தினார் பவன் கெரா.
இதே போல ஜெய்ராம் ரமேஷும், சுப்ரியாவும் பீஹார் மக்களின் பிரச்னைகள் குறித்தும், நிதிஷ் குமார் அரசின் பலவீனங்களைப் பற்றியும் பேசாமல், வாக்காளர்களுக்கு சம்பந்தம் இல்லாதவற்றைப் பேசினர்.
'இவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இவர்கள் களத்தில் இறங்குவதும் இல்லை. இவர்கள் மூன்று பேரையும், கட்சி பதவிகளிலிருந்து நீக்கினால்தான் கட்சி உருப்படும்' என, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் சில காங்., தலைவர்கள் கூறினராம். பதிலுக்கு வெறுமனே தலையை ஆட்டினாராம் கார்கே.

