'குற்றங்களை தடுப்பதில் ஒருங்கிணைய வேண்டும்' மூன்று மாநில போலீஸ், வனத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு
'குற்றங்களை தடுப்பதில் ஒருங்கிணைய வேண்டும்' மூன்று மாநில போலீஸ், வனத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு
ADDED : பிப் 22, 2024 05:21 AM

கூடலுார்: முதுமலையில் நடந்த மூன்று மாநில போலீஸ்; வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில், குற்றங்களை தடுப்பதில் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.
தமிழகம், கர்நாடகா, கேரளா போலீஸ் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நடந்தது.
கோவை சரக டி.ஐ.ஜி., சரவணசுந்தர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், நீலகிரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவடிவேல்; முதுமலை துணை இயக்குனர் வித்யா; ஈரோடு எஸ்.பி., ஜெகவர்; கேரளா மலப்புரம் எஸ்.பி., சசிதரன்; கர்நாடகா சாம்ராஜ்நகர் எஸ்.பி., பத்மினி சாஹு; நீலகிரி கூடுதல் எஸ்.பி., சவுந்திரராஜன் ஆகியோர், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து விவாதித்தனர்.
இது குறித்து, கோவை சரக டி.ஐ.ஜி., சரவணசுந்தர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் மாநில எல்லையில் பதட்டமான ஓட்டுச் சாவடிகள் மற்றும் குற்றவாளிகள் குறித்த விபரங்களை பரிமாறி கொள்வது. தமிழக- கர்நாடக எல்லைகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை. கேரளாவில் தொடரும் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, மாநில எல்லைகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்த விபரங்களை ஒருங்கிணைந்து கண்காணிப்பது; சோதனை சாவடிகளை மேம்படுத்துவது; மது, தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள, தமிழக-கேரள எல்லையான நாடுகாணி; தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள, கக்கனல்லா பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். ஈரோடு, கர்நாடகா எல்லை ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
கூடலுார் டி.எஸ்.பி., செல்வராஜ், தேவாலா டி.எஸ்.பி., செந்தில்குமார் மற்றும் கேரள, கர்நாடக போலீஸ்; வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.