மரணத்தை தடுத்த ஜிப்லைன்; சிலிர்க்க வைக்கும் வீடியோ
மரணத்தை தடுத்த ஜிப்லைன்; சிலிர்க்க வைக்கும் வீடியோ
ADDED : ஏப் 29, 2025 04:32 AM

கடந்த ஏப்., 22ல், காஷ்மீர் பஹல்காம் அடுத்த பைசரன் புல்வெளியில் 26 சுற்றுலா பயணியர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். அந்த 'கருப்பு செவ்வாய்' அன்று, பலர் உயிர் இழந்த நிலையில் ஒரு சிலிர்க்க வைக்கும் வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.
பச்சை புல்வெளியின் அழகிய நிலப்பரப்பில் இருந்து பல அடி உயரத்தில், ஜிப்-லைன் வழியாக ஜாலியாக ஒருவர் செல்கிறார். அப்போது, கீழே நடக்கும் கொடிய பயங்கரவாதத் தாக்குதலை அறியாமல், சிரித்தவாறு வீடியோவுக்கு போஸ் கொடுத்து செல்கிறார்.
கீழே நடக்கும் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டடிப்பட்டு சுற்றுலா பயணியர் சுருண்டு விழுவது அவருக்கு தெரியவில்லை.
ரிஷி பட் என்ற அந்த சுற்றுலா பயணி கூறுகையில், ''சிறிது நேரம் சென்ற பின், எனது ஜிப்-லைன் இணைப்பின் முடிவில் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்தேன். அழுகை சத்தம் கேட்டது. நான் ஜிப்-லைனை நிறுத்தி, 15 அடி உயரத்தில் இருந்து குதித்தேன். என் மனைவி மற்றும் மகனுடன், அங்கிருந்து ஓட ஆரம்பித்தேன். எப்படியோ உயிர் பிழைத்தோம். கீழே புல்வெளியில் நின்றிருந்தால், நானும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருப்பேன்,'' என்றார்.

