அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்கிறது த.மா.கா.,
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்கிறது த.மா.கா.,
ADDED : ஜன 14, 2026 05:00 AM

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்க, த.மா.கா., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் ஆறு தொகுதிகளில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்ற அக்கட்சி, மூன்று தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது.
வரும் சட்டசபை தேர்தலில், மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்துள்ள நிலையில், அக்கூட்டணியில் வெற்றி வாய்ப்புள்ள 12 தொகுதிகளை பெறவும், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவும், த.மா.கா., தலைவர் வாசன் முடிவு செய்து உள்ளார்.
இந்த தகவலை அ.தி.மு.க., மூத்த தலைவர்கள் வாயிலாக, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமிக்கு, வாசன் தெரியப்படுத்தி உள்ளார்.
இது குறித்து, அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
வாசனின் ராஜ்யசபா எம்.பி., பதவி, வரும் ஏப்ரலில் முடிகிறது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், வாசனுக்கு மீண்டும் எம்.பி., பதவி வழங்க வேண்டும் என, கட்சியினர் விரும்புகின்றனர்.
ஆனால், மாநில அரசியலில் கவனம் செலுத்த வாசன் விரும்புகிறார். தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்தால், வாசனுக்கு முக்கிய துறை ஒதுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
அ.தி.மு.க., - பா.ஜ., இரு கட்சிகளின் நம்பிக்கைக்குரியதாக த.மா.கா., இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் பாலமாக வாசன் உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி மீண்டும் ஏற்பட்டதில், வாசனுக்கு பங்கு உண்டு. எனவே, சட்டசபை தேர்தலில், கட்சியின் மாநில நிர்வாகிகள் 12 பேருக்கு வாய்ப்பு பெற்று தர, வாசன் முடிவு செய்துள்ளார்.
தொகுதி பட்டியல், பொங்கலுக்கு பின், அ.தி.மு.க., தலைமையிடம் வழங்கப்பட்டு, உடன்பாடு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

