சுங்கச்சாவடிகள் பராமரிப்பு படுமோசம்: கண்டுகொள்ளாத சாலை ஆணையம்
சுங்கச்சாவடிகள் பராமரிப்பு படுமோசம்: கண்டுகொள்ளாத சாலை ஆணையம்
UPDATED : நவ 06, 2024 03:52 AM
ADDED : நவ 06, 2024 01:01 AM

சென்னை: தமிழக சுங்கச்சாவடிகள் படுமோசமாக பராமரிக்கப்படுவது, வாகன ஓட்டிகள் மற்றும் பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், 6,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்ய, 65 இடங்களில், சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கச்சாவடிகளில் டிரைவர்கள், பயணியருக்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்காக, சுங்கச்சாவடிகளின் இருபுறங்களிலும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றை பராமரிக்கும் பொறுப்பு, அருகில் உள்ள, 'ஹைவே மினி நெஸ்ட்' என்ற ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆனால், கழிப்பறைகளை முறையாக பராமரிக்காமல் அவர்கள் மூடியே வைத்துள்ளனர்.
சென்னை வானகரம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில், இதுவரை கழிப்பறை அமைக்கப்படாமல், கட்டண வசூல் மட்டுமே தொடர்கிறது. மேலும், பல சுங்கச்சாவடி கட்டண கவுன்டர்களை சுற்றி, 'கான்கிரீட்' தளங்கள் பெயர்ந்தும், புதர்கள் மண்டியும் கிடக்கின்றன.
அங்கு பணிபுரியும் வடமாநில ஊழியர்கள், குட்கா, பீடா போன்றவற்றை பயன்படுத்தி விட்டு, அங்கேயே துப்பி வைத்துள்ளனர். படுமோசமாக சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், அவற்றை பராமரிப்பதில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
இதுகுறித்து, தமிழக மணல் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு, ஜி.பி.எஸ்., முறையில் கட்டணம் வசூலிப்பதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம், பல்வேறு மாநிலங்களில் துவங்கவுள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள எந்த சுங்கச்சாவடியும், ஜி.பி.எஸ்., திட்ட நடைமுறைக்கு தேர்வு செய்யப்படவில்லை.
ஆனால், இதை காரணமாக கூறி, சுங்கச்சாவடிகளின் பராமரிப்பு பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கிடப்பில் வைத்துள்ளது. குடிப்பதற்கும், கழிப்பறை பயன்பாட்டிற்கும் தண்ணீர் இல்லாமல், வாகன ஓட்டுனர்கள், பயணியர் திண்டாடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.