துருக்கியுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் மறு பரிசீலனை!: பாக்.,கிற்கு ஆதரவு தெரிவித்ததால் அதிரடி
துருக்கியுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் மறு பரிசீலனை!: பாக்.,கிற்கு ஆதரவு தெரிவித்ததால் அதிரடி
ADDED : மே 16, 2025 01:24 AM

புதுடில்லி: இந்தியா-துருக்கி இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களை மறுபரிசீலனை செய்யவும், சிலவற்றை முடிவுக்கு கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நம் விமான நிலையங்களில் உயர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் துருக்கியின், 'செலிபி ஏவியேஷன்' நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது.
மேற்காசிய நாடான துருக்கி-இந்தியா இடையே, பல்வேறு துறைகளில் இணக்கமான வர்த்தகம் நடக்கிறது. கட்டுமான துறை, தகவல் தொழில்நுட்பம், மெட்ரோ ரயில், சுரங்கப் பணிகள் உட்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் இருநாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளன.
கடந்த நிதியாண்டில் மட்டும், 86,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியா-துருக்கி இடையே வர்த்தகம் நடந்துள்ளது. குஜராத், மஹாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், டில்லி உள்ளிட்ட இடங்களில் துருக்கி நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
தற்போது இந்த நிலைமையில் தலைகீழ் மாற்றம் உருவாகி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான நம் ராணுவத்தின், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை துருக்கி அளித்தது அம்பலமாகி உள்ளது.
பாக்., ராணுவம் நம் மீது ஏவிய ட்ரோன்களில், துருக்கி நாட்டின், 'அசிஸ்கார்டு சோங்கர்' வகை ட்ரோன்கள் இருந்ததை, நம் ராணுவ கர்னல் சோபியா குரேஷி உறுதிபடுத்தினார்.
ட்ரோன்கள் மட்டுமின்றி அவற்றை இயக்க, 'ஆப்பரேட்டர்'களையும் துருக்கி அனுப்பி வைத்தது உறுதியாகி உள்ளது.
இதனால், துருக்கி உடனான வர்த்தக உறவை மறுஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து மத்திய வர்த்தக துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
துருக்கி உடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்கள், திட்டங்கள் மறுமதீப்பீடு செய்யப்படும். நீண்ட காலத்துக்கு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது. தற்போதுள்ள புவிசார் அரசியல் நிலைமையே அதற்கு காரணம்.
பயங்கரவாதத்துக்கு நேரடியாக ஆதரவு அளிக்கும் துருக்கியின் நிலைப்பாட்டால், முதலீட்டு வளர்ச்சி மற்றும் வருங்கால வர்த்தக ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, நம் நாட்டில் ஒன்பது விமான நிலையங்களில் பயணியர் மற்றும் போக்குவரத்து சேவைகளை கையாண்டு வந்த துருக்கி நாட்டின், 'செலிபி ஏவியேஷன்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனுமதியை சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகம் நேற்று அதிரடியாக ரத்து செய்தது.