ADDED : டிச 11, 2024 06:24 AM

மதுரை : தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தியது போல் மதுரை உட்பட 4 மண்டலங்களிலும் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலை கணக்கிட்டு த.வெ.க.,வை துவக்கிய நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை அக்.27 ல் விக்கிரவாண்டியில் நடத்தினார். தனது தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
எதிர்பார்த்த அளவு கூட்டம் கூடியதால் சந்தோஷமடைந்த விஜய், சில நாட்களிலேயே மாநாடு ஏற்பாட்டாளர்களை வரவழைத்து மோதிரம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார். இதைதொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் மக்களிடமும், கட்சிகளிடமும் மாநாடு எப்படி தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்து கேட்டறிந்தார்.
அப்போது சில மாவட்ட செயலாளர்கள், 'எங்கள் மாவட்டத்தில் மாநாடு நடத்துவீர்கள் என எதிர்பார்த்திருந்தோம்' என்றனர். அதற்கு பதில் அளித்த விஜய், 'நிச்சயம் மண்டலம் வாரியாக மாநாடு நடத்தப்படும்' என உறுதியளித்தார்.
தமிழகம் தெற்கு, மேற்கு, வடக்கு, மத்தி என 4 மண்டலமாக பார்க்கப்படுகிறது. தெற்கு மண்டலத்தை பொறுத்தவரை மதுரைதான் தலைமையிடமாக உள்ளது. அரசியல் திருப்புமுனைகளுக்கு பெயர் பெற்ற மதுரையில் முதல் மண்டல மாநாட்டை நடத்த வாய்ப்புள்ளதாக அவரது கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
மதுரையில்தான் முதல் மாநாட்டை விஜய் நடத்துவார் என எதிர்பார்த்தோம். ஆனால் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தினார். இருப்பினும் மதுரை மீது அவருக்கு ஒருவித ஈர்ப்பு இருப்பதை பார்த்து வருகிறோம். அதனால் நிச்சயம் மதுரையில்தான் மண்டல மாநாட்டை நடத்துவார். சமீபத்தில்கூட மதுரை பீபிகுளம் முல்லைநகர் மக்களை ஆக்கிரமிப்பில் உள்ளார்கள் எனக்கூறி வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் முயற்சித்தது.
அதை எதிர்த்து போராடிய மக்களிடம் தனது ஆதரவை பொதுச்செயலாளர் ஆனந்த் மூலம் விஜய் தெரிவித்தார். அதேபோல் மேலுார் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடினர். அதுகுறித்த விபரங்களை எங்களிடம் கேட்டறிந்தார். அரசின் நிலைப்பாட்டை அறிந்து மக்களை சந்திப்பதா வேண்டாமா என முடிவு செய்வோம் என எங்களிடம் அவர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையெல்லாம் பார்க்கும்போது தென்மாவட்டங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மதுரையை மையமாக வைத்து விஜய் நடவடிக்கை இருக்கும். இவ்வாறு கூறினர்.

