நல்லகண்ணு மறைவுக்கு அஞ்சலி; அ.தி.மு.க., பழனிசாமி மறுத்தது ஏன்?
நல்லகண்ணு மறைவுக்கு அஞ்சலி; அ.தி.மு.க., பழனிசாமி மறுத்தது ஏன்?
ADDED : பிப் 28, 2026 05:17 AM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்ல கண்ணுவின் இறுதி அஞ் சலி நிகழ்ச்சியில், சென்னை யில் இருந்தும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்காதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, 25-ம் தேதி மறைந்தார். அவரது உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அன்றைய தினம், பழனிசாமி சென்னையில் இருந்தும் அஞ்சலி செலுத்த வரவில்லை. அவரின் இந்த செயல், பல்வேறு தரப்பிலும் விமர்சிக்கப்படுகிறது.
அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: நல்லகண்ணு மறைவுக்கு, அரசியல், சினிமா என பல்வேறு துறைகளை சேர்ந்த பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைக்கு நேர் எதிராக உள்ள பா.ஜ.,வினர் கூட, அஞ்சலி செலுத்தினர். அதன்படி, பழனிசாமியும் செல்வார் என எதிர்பார்த்தோம்; ஆனால் செல்லவில்லை.
அவரோ, 'கடந்த 2020ல் நான் முதல்வராக இருந்தபோது, என் அம்மா இறந்தார். அப்போது, கம்யூனிஸ்ட் கட்சி யினர் யாருமே வர வில்லை. இப்போது நான் ஏன் போகணும்' என, பழனிசாமி சொல்லி விட்டார்.
அஞ்சலி செலுத்த அவர் செல்லாததால், கட்சி நிர்வாகிகளும் செல்ல முடியவில்லை. அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அஞ்சலி செலுத்தினார். நல்லகண்ணுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் எந்த பகையும் இல்லை. அவர் தேர்தலில் நின்றபோதெல்லாம், தி.மு.க.,தான் அவருக்கு எதிராக களமிறங்கி, அவரை தோற்கடித்தது.
ஆனால், கொரோனா காலத்தில் தாயார் இறப்புக்கு, கம்யூ., கட்சியினர் வரவில்லை என்பதற்காக, இப்போது ஒரு மூத்த தலைவர் மறைவுக்கு நேரில் செல்லாமல் இருப்பது மோசமான அரசியலாகப் பார்க்கப்படுகிறது. அரசியல் நாகரிகம் கருதியாவது, பழனிசாமி அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, பழனிசாமியின் பி.ஆர்.ஓ., உமாபதியிடம் கேட்டபோது, ''நல்லகண்ணு மறைவுக்கு, அருமையான இரங்கல் செய்தி வெளியிட்டு, உரிய மரியாதை கொடுத்து உள்ளோம். அன்றைய தினம், பழனிசாமி பிரசார கூட்டத்துக்கு போக வேண்டியது இருந்ததால், நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை,'' என்றார்.
- நமது நிருபர் -

