திருச்சி அமைச்சர் - எம்.எல்.ஏ., மோதல் உச்சம்: கண்டுகொள்ளாத தி.மு.க., தலைமையால் அதிருப்தி
திருச்சி அமைச்சர் - எம்.எல்.ஏ., மோதல் உச்சம்: கண்டுகொள்ளாத தி.மு.க., தலைமையால் அதிருப்தி
ADDED : ஜூலை 11, 2024 04:35 AM

திருச்சி : திருச்சி மாவட்டம், லால்குடி சட்டசபை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் சவுந்தரபாண்டியன். இவருக்கும், திருச்சியைச் சேர்ந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
லால்குடி தொகுதியில் நடக்கும் அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு கூட சவுந்தரபாண்டியனை அழைப்பதில்லை. இதனால், அமைச்சர் நேரு மீது சவுந்தரபாண்டியன் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். லோக்சபா தேர்தலில், பெரம்பலூர் தொகுதியில் நேருவின் மகன் அருண் போட்டியிட்டதால், சில நாட்களுக்கு சவுந்தரபாண்டியனை, நேரு அனுசரித்து சென்றார்.
தேர்தல் முடிந்ததும், மீண்டும் சவுந்தரபாண்டியனை, நேரு உதாசீனப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் லால்குடியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு பங்கேற்றார். ஆனால், நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான சவுந்தரபாண்டியன் அழைக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியன், லால்குடி தொகுதி எம்.எல்.ஏ., இறந்து விட்டதால் தொகுதி காலியானது என முக நுால் பக்கத்தில் பதிவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
![]() |
இதற்கிடையில், நேற்று காலை லால்குடியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு மற்றும் அவரது மகனும், பெரம்பலுார் எம்.பி.,யுமான அருண் ஆகியோர் மட்டும் பங்கேற்றனர். வழக்கம் போல, தொகுதி எம்.எல்.ஏ.,வான சவுந்தரபாண்டியனுக்கு அழைப்பு இல்லை. இதனால் மீண்டும் அதிருப்தியின் உச்சத்துக்கு சென்ற எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியன், நேற்றும் முகநுால் பக்கத்தில், தன் அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், 'மாண்புமிகு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் அவர்களுக்கு, பணிவான வேண்டுகோள். 11.01.2021 அன்று, நான் தங்களிடத்தில், 'லால்குடி' நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம் வேண்டும்' என்று கோரிக்கை வைத்தேன் என்பதை நினைவுக்கு கொண்டு வருகிறேன்; நிறைவேற்றி தருவீர்களா?' என்று கேட்டுள்ளார்.
லால்குடியில் நடந்த அரசு நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்காத அதிருப்தியை எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன் காட்டிய பின்பும், இந்த விஷயத்தில் தி.மு.க., தலைமை உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக லோக்கல் தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.